பீத்தோவன் என்றொரு இசைகலைஞன் இருந்தான்
உலக புகழ்பெற்ற பீத்தோவன் என்றொரு இசைகலைஞன் இருந்தான், சிம்பொனி உலகில் அவனே தலைமகன். பல சிம்பொனி இசையமைத்திருந்தான்
பிரஞ்சு புரட்சி, நெப்போலியன் காலங்களில் இசையால் ஐரோப்பாவினை ஆட்டிவைத்த கலைஞன் அவன்
அவனுக்கு ஒரு விபரீத நோய் தாக்கியது, ஆம் அவனின் இசையினை அவனாலே கேட்கமுடியாமல் போனது, குறிப்புகளை உருவாக்கி இசைப்பான், அது அழகான இசையாகும்
ஒரு சிம்பொனியினை அவன் இசைத்தபொழுது கூட்டம் கைதட்டி ஆர்பரித்தது, பெரும் ஆரவாரம். அவனால் பார்க்க முடிந்ததே அன்றி, அவனால் கேட்க முடியவில்லை
கண்ணீரோடு தன் பியாணோவில் முகம்புதைத்து அழுதான் அந்த உன்னத கலைஞன்
அந்த காட்சி ஏன் கண்ணுக்குள் வருகின்றது? வைரவிழா செய்திகளை கேட்கும் பொழுதெல்லாம் வருகின்றது.
கலைஞரின் வைரவிழா என்பது, அரசியல் வாழ்வு. பெரும் கிளைகளாக பாய்ந்த பெரு நதி கலைஞர்.
சினிமா, அரசியல், பத்திரிகை, இலக்கியம், வசன கர்த்தா, போராளி என அந்த நதியின் பிரிவுகள் பல, அதில் ஒன்றுதான் அரசியல் வைரவிழா
அவரின் நீண்ட வாழ்வில் 94ம் பிறந்தநாள் கூட
தமிழகத்து அரசியலில் ஒரு ஆர்ப்பரிப்பையும், திருப்பத்தையும் கொடுத்து அகில இந்தியாவினையே திகைக்க வைத்த வரலாறு அவருடையது
அவரளவு இன்னொருவன் இந்தியாவில் இனி அரசியல் செய்யமுடியுமா? என்பதே பெரும் கேள்விகுறி, அப்படி ஒரு பெரும் பாதிப்பு அவருடையது
இந்த 75 ஆண்டுகளாக தமிழகத்தில் ஒலிக்கும் எழுத்து அவர், 67 ஆண்டுகளாக அவர் எழுத்தோ, குரலோ வராதா காலங்கள் இந்த 6 மாதம் தான், தன் வாழ்வில் அனுதினமும் ஏதாவது ஒருவகையில் மக்களோடு பேசிகொண்டேதான் இருந்தார்
அந்த கலைஞரை பற்றி நாளை முதல் பக்கம் பக்கமாக எழுதுவார்கள், வாசிப்பார்கள், பாடுவார்கள்
ஆனால் கலைஞரோ அந்த பீத்தோவன் நிலையில் இருக்கின்றார், அவரின் காதுகளுக்கு எதுவும் போகாது
தமிழகத்தோர் நினைவுகளில் ஆழ பதிந்துவிட்ட கலைஞர் தன் நினைவுகளை மீட்டெடுக்க முதிர்ந்தவயதில் போராடுகின்றார் என்ற செய்திகள் கலங்க வைக்கின்றன
ஒரே ஒருமுறை அந்த நினைவு திரும்பி, இந்த வாழ்த்துக்களை எல்லாம், தன் உழைப்பிற்கான அங்கீகாரத்தை எல்லாம் அவர் காதார கேட்டுவிட்டு, “நன்றி” என்றொரு வார்த்தை சொல்லிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்
ஒரு நொடியில் அந்த அற்புதம் நிகழ்ந்துவிட கூடாதா?
வாழும் காலமெல்லாம் எழுத்தாலும், பேச்சாலும் நம்மையெல்லாம் பாதித்த அவர், உடல்நலமில்லையென்றாலும் நம்மை எப்படி எல்லாம் பாதித்திருக்கின்றார் என உணரமுடிகின்றது
உண்மையில் இப்பொழுதுதான் அதிகம் பாதித்திருக்கின்றார்.
ஈசிசேரில் அமர்ந்து ரசனையாக பழங்கதை சொல்லும் முதியவர் நலம்பெற மருத்துவமனைக்கு சென்றுவிட்டால், அவரின் உறவுகள் அந்த நாற்காலியினை ஏக்கத்துடன் நோக்கிகொண்டே இருப்பார்கள்
நாமும் அப்படியே அந்த முரசொலியினை நோக்கிகொண்டே இருக்கின்றோம்.
அவர் வாழ்வில் அடிக்கடி அற்புதம் நிகழும்
அந்த அற்புதம் இப்பொழுது நிகழ்ந்து நம் முன் அவர் வரட்டும். நன்றியோடு கைகாட்டினால் மனம் கொஞ்சமாவது ஆறுதலடையும்..