உடன்பிறப்பே

Image may contain: 2 people, people smilingஉடன்பிறப்பே

எதை தின்றால் பித்தம் தெளியும், யாரை பிடித்தால் பெரியார் இன்னும் காவலிருக்கும் திராவிட நாட்டை பிடிக்கலாம் என சிந்தை கலங்கிய கூட்டமொன்று, விந்தையான வேடிக்கை பேச்சுக்களை எல்லாம் சொல்ல தொடங்கிற்று

திராவிட தலைமகனாம், வாராது வந்த மாமணியாம் நமது அண்ணாவினை பற்றி சிலர் கருத்துசொல்ல வந்துவிட்டார்கள்

அண்ணா இருந்திருந்தால் பாஜகவினை ஆதரிப்பாராம், சிரிக்காமல் மட்டுமல்ல சிந்திக்காமலும் சொல்கின்றார்கள் மந்தி மூளைக்காரர்கள்

அண்ணாவின் கைபிடித்து வளர்ந்தவன் என்ற வகையிலே, அண்ணாவின் சிந்தை எல்லாம் அறிந்தவன், அவரை நெஞ்சமெல்லாம் நிறைத்தவன் என்பதனால் சொன்கின்றேன், அண்ணா இருந்திருந்தால் இதற்கு எப்படி பதில் அளித்திருப்பார் என்றால் இப்படித்தான்

தம்பி, கொடுஞ்செயல் தீவிரவாதமும் கொடூர நக்சலைட்டுகளும் இன்னும் பல தீரா பொருளாதார‌ சிக்கல்களும், இப்போதைக்கு டெங்கியும் சேர்ந்து இத்திருநாட்டை பாடாய் படுத்தும்போது இந்த பாஜகவும் தேவையா தம்பி?

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என போதிப்பவர்கள் நாம், மதம், மாடு, மடமை என போதிப்பவர்கள் அவர்கள்

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்போர் நாம். ராமர் ஒன்றே கடவுள், நாங்கள் மட்டுமே மதம் என்போர் அவர்கள்.

ஒரு உறையில் இரு கத்திகள் இருக்க முடியுமா? ஒரே குகையில் புலியும் மானும் தங்க முடியுமா?

திராவிட நாட்டின் பாதுகாவலாய் திகழும் இயக்கம், ஆரிய சங்கத்திடம் உறவுகொள்வது எப்படி? நீருக்கும் எண்ணெய்க்கும் உறவேது?

நீரின் அளவை பொறுத்துதான் தாமரை கொடி நீளம் இருக்குமாம் தம்பி, இங்கோ கட்டாந்தரையில் தாமரை மலரும் என்கின்றார்கள், அதற்கு உன் அண்ணன் நான் குளம் வெட்டி நீர் நிரப்பி கொடுப்பேன் என்கின்றார்கள்.

ஆதவன் மேற்கே உதித்தாலும், கடல் முழுக்கவற்றி விட்டாலும் அது நடக்குமா தம்பி?

காண முடியா கனவது தம்பி, கொஞ்சமேனும் சிந்திக்க முடியா சிந்தை அது.

எதையும் தாங்கும் இதயம் கொண்ட நாம், இந்த வலிகளையும் தாங்கி செல்வோம்

ஆயினும் தம்பி மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமல்ல, மாற்றான் தோட்டத்து மாட்டிலும் பால் உண்டு

அவர்கள் நம்மைபற்றி இட்டுகட்டி சொல்வதை எல்லாம் மறப்போம், மன்னிப்போம்

எந்திலை வந்திடினும், துயர்பல பட்டினினும் , திராவிட நாட்டிற்கோர் பெரும் இன்னல் சூழ்ந்திடினும் ஆரிய கொடுமையினையும், அதன் வஞ்சக வடிவமான பாஜகவினையும் ஒருகாலும் ஆதறியோம்”