கலைஞரிடம் இருந்து திமுகவினர் படிக்க வேண்டியது ஏராளம்

தன்னால் சினிமாவிலும் தொடர்ந்து அரசியலும் வளர்க்கபட்ட ராமசந்திரன் தன் இதயமான திமுகவினை பிளந்து தனிகட்சி கண்ட நேரம் கலைஞரிடம் கேட்டார்கள்

“அதிமுக கட்சி பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

புதிதாக ஒரு கட்சி தொடங்கியிருக்கின்றது அவ்வளவுதான்

அதன் அரசியல் நிலைப்பாடு?

தமிழில் நியாய‌த்தின் எதிர்பதம் அநியாயம், நீதியின் எதிர்பதம் அநீதி அப்படி இனி திமுகவின் எதிர்கட்சி அதிமுக‌

இதனால் உங்களுக்கு என்ன பாதிப்பு?

எனக்கு நண்பர் சென்றுவிட்டாரே என்பதுதான் பாதிப்பே தவிர, கட்சிக்கு பின்னடைவு அல்ல. ஒரு நடிகர்க்கு இருக்கும் ஈர்ப்பு அது. கொள்கையினை மக்கள் உணரும் பட்சத்தில் எங்களை கைவிடமாட்டார்கள்.”

இப்படி பொறுப்பான வார்த்தைகளை சொன்னாரே அன்றி குதிக்கவில்லை, கடும் வசவுகளை அள்ளி வீசவில்லை

பின்பு கலைஞரால் உருவாக்கபட்ட‌ வைகோ பிரியும் பொழுதும் கேட்டார்கள்

“வைகோ பிரிவு பற்றி?

கட்சிக்கு விரோதமான காரியங்களை யார் செய்தாலும் கண்டிப்போம், அவரையும் கண்டித்தோம் சென்றுவிட்டார். கட்சியினை விட்டு சென்றாரே அன்றி என் இதயத்தில் அவர் என்றுமே அன்புதம்பி

அவர் கழகத்தின் போர்வாள் ஆயிற்றே இயக்கம் பாதிக்கபடாதா?

போர்வாளின் கைபிடி உடைந்தபின் என்ன செய்வது நீங்களே சொல்லுங்கள்”

இப்படியாக தன்னோடு இருந்து பிரிந்த அல்லது தனக்கு எதிராக கட்சி தொடங்கிய யாரையும் அவர் கரித்து கொட்டியதில்லை,

முரசொலி அவர் ஏடாக இருந்தது, எத்தனையோ பத்திரிகைகள் முளைத்தன, எதையும் அவர் போட்டியாக கருதவில்லை

கலைஞர் டிவி நடத்தினாரே தவிர எந்த டிவியினையும் அவர் போட்டியாக நினைக்கவில்லை

அவர் அப்படி நினைத்திருந்தால் முரசொலி தவிர வேறு இதழ் வந்திருக்காது, திமுக தவிர வேறு கட்சி இருந்திருக்காது, அவர் டிவி தவிர வேறு டிவி வந்திருக்காது

இதை போலவே கட்சிகளும், ரஜினியின் கட்சியும் அதில் ஒன்று

பெரும் நெருப்பாறுகளும், யாரையும் விழுங்கும் பெரும் திமிங்கலங்களுமே பத்திரிகை, அரசியல் என எதிர்த்து நின்றபொழுது தன் போக்கில் நடந்தார் கலைஞர்

ஆனால் அவர் கட்சியினரோ இன்று ரஜினியினை கரித்துகொட்டி கொண்டிருக்கின்றார்கள். இவ்வளவிற்கும் ரஜினி கட்சி இன்னும் கவுன்சிலர் இடம் கூட பிடிக்கவில்லை

கலைஞரிடம் இருந்து திமுகவினர் படிக்க வேண்டியது ஏராளம் இருக்கின்றது