கதிர் கொண்ட சூரியனே ஒரு முறை உதித்துவிடு, சதிரை விரட்டிவிடு

வைரமுத்துவின் பிடர் கொண்ட சிங்கமே எனும் கவிதை(?) அவரின் வார்த்ட்தை ஜாலங்களில் ஒன்று என்பது வேறு விஷயம்
சாதாரண கற்பூரம் கோவில் சிலைமுன் எரியும்பொழுது வணக்கத்திற்குரியதாகின்றது போல, கலைஞர் முன் அவர் படித்தபொழுது கவனத்திற்குரியதாகின்றது
வைரமுத்து அவரிடம் அக்கவிதையினை காட்டுகின்றார், முடியா நிலையிலும் புரிந்தும் புரியாமலும் , முடிந்தும் முடியாமலும், இயன்றும் இயலாமலும் முகத்து உணர்ச்சியால் பதில் சொல்கின்றார் கலைஞர்
எவ்வளவு எழுதியவர் கலைஞர்? கவிதை என்றும், கட்டுரை என்றும், கடிதம் என்றும் அவர் எழுதியது கொஞ்சமா? ஆனால் இந்நிலைக்கு அவரை ஒடுக்கி வைத்திருக்கின்றது கொடிய காலம்
நோயுற்ற அலெக்ஸாண்டர் முன் யுத்த கத்தியினை காட்டியது போல, தனிச்சிறை நெப்போலியனிடம் அவன் துப்பாக்கியினை காட்டியது போல இருந்தது காட்சிகள்
“கதிர் கொண்ட சூரியனே ஒரு முறை உதித்துவிடு, சதிரை விரட்டிவிடு” என உள்மனம் தானாய் கேட்கின்றது
என்ன இருந்தாலும் அம்மனிதனை பார்த்துவிட்டால் சில நிமிடங்கள் நகரவே முடியவில்லை , அக்காட்சியினை கண்டபொழுது மனம் உடைந்து சில சொட்டு கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை