கில்லாடி கிளைவ் : 01
கில்லாடி கிளைவ் : 01

சாலமோன் அரசன் காலத்திலிருந்தே இந்தியா மேற்கத்தியர்களுக்கு விருப்பமான நாடு. சந்தணம், மிளகு, தந்தம். முத்து இன்னும் பல பொருட்களுக்காக அரேபிய கப்பல்கள் இங்கு காத்து கிடந்தன
முதலில் மேற்கிலிருந்து வந்து கிழக்கை இணைத்தவன் அலெக்ஸாண்டர், அதை தொடர்ந்தே வியாபார சாலை வலுவானது, அவன் உருவாக்கிய பரந்த சாம்ராஜ்யம் அதற்கு வழி செய்தது
அக்கால வியாபாரம் இருவழிகளில் நடந்தது முதலாவது அலெக்ஸ்டாண்டர் காலத்திலே, சைனாவில் இருந்து பாக்தாத் அடைந்து துருக்கி வழியே ஐரோப்பா சென்ற பட்டு சாலை, அது சீனாவில் இருந்து பட்டு கொண்டு செல்லவே அமைந்த சாலை ஆதலால் பட்டுசாலை ஆயிற்று.
இப்பாதை வட இந்தியாவிற்கு சாதகமே தவிர தென்னிந்தியாவிற்கு வெகுதொலைவு
இதனால் இன்னொரு பாதை கடல் வழி இருந்தது, கேரளாவில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் கப்பல்கள் அரேபியாவின் பாஸ்ரா. ஜெட்டா, ஹைப்பா (இன்றைய இஸ்ரேல்) போன்ற துறைமுகங்களை அடையும் அங்கிருந்து பொருட்கள் எகிப்தின் நிலப்பகுதி வழியாக மேற்கு கடலுக்கு கொண்டு செல்லபட்டு அங்கு இன்னொரு கப்பலில் ஏற்றபட்டு ஐரோப்பா அடையும்
இந்த சூயஸ் கால்வாய் அன்று இல்லாததால் இதுதான் நிலை
இப்படித்தான் உலக வியாபாரம் நடந்தது, இங்கிருந்து மிளமும், வாசனை பொருளும் சந்தணமும், முத்தும் வைரமும் ஏற்றுமதி செய்யபடும் அரேபிய சந்தையில் அதை ஐரோப்பியர் வாங்குவர்
ஐரோப்பாவில் இருந்து குதிரை, துணி வகைகள் இன்னபிற பொருட்கள் வரும், அரேபியாவில் இருந்து இந்திய வியாபாரிகள் வாங்கி வருவார்கள்
அரேபிய குதிரை என்பது இப்படி வந்தது, உண்மையில் அரேபிய குதிரை இல்ல அவை, ஐரோப்பிய வளர்ப்பு.
இப்படி சென்றுகொண்டிருந்த வியாபார உலகில் விதி போப்பாண்டவர் அர்பன் என்பவர் உருவில் வந்தது, ஜெருசலேம் புண்ணிய பூமி அதை மீட்பேன் என படை அனுப்பினார்
இப்பக்கம் இஸ்லாமிய மன்னர்கள் அதை விடமுடியாது என தடுத்தனர், விடுவாரா போப்பாண்டவர்? சிலுவை அடையாளத்துடன் படையினை அனுப்பிகொண்டே இருந்தார்
உண்மையில் அது ஜெருசலேமிற்கான போர் அன்று, அந்த பிண்ணணியில் பட்டுசாலையினையும் சில துறைமுகங்களையும் ஐரோப்பியர் கட்டுபாட்டில் எடுக்கும் முயற்சி
கிட்டதட்ட 7 சிலுவை போர்கள் வெற்றியும் தோல்வியுமாக சென்றுகொண்டிருந்தபொழுது துருக்கிய ஆட்டோமான் சாம்ராஜ்யம் எழும்பியது
இப்பக்கம் செங்கிஸ்கானின் மங்கோலியர், அப்பக்கம் போப்பாண்டவர் படைகள் என மிக துணிச்சலாக வாழ்வா சாவா என எழும்பிய அந்த ஓட்டோமான் சாம்ராஜ்யம் நிலைத்தது
அத்தோடு பட்டுசாலை அடைக்கபட்டது, எகிப்து வரை கைபற்றிய துருக்கியர் வியாபார தடங்களை தமதாக்கினர்
இனி மிளகுக்கும், பட்டுக்கும், குதிரைக்கும் துருக்கியர் வைத்ததே விலை என்றாயிற்று, ஐரோப்பிய வியாபாரம் படுத்தது
இந்நிலையில்தான் கடல்வழியே வேறுவழியில் இந்தியாவினை அடையும் முயற்சியில் ஆளாளுக்கு ஐரோப்பியர் இறங்கினர்
கொலம்பஸ் எங்கோ சென்றுவிட்டு இந்தியா இந்தியா என கத்தினான், பின்னால் சென்றவர்கள் செழிப்பான நாடுதான் ஆனால் அது இந்தியா இல்லை என சொல்லிகொண்டனர்
பின்னர் வாஸ்கோடகாமா மிக சரியான வழியினை கண்டுபிடித்து இந்தியா வந்தான், கேரள கள்ளி கோட்டையினை அடைந்தான்
இந்தியாவிலிருந்து ஆப்ரிக்காவினை சுற்றி அவன் கப்பல்கள் போர்த்துகீசில் செல்வத்தை கொட்டின, மற்றவர்களுக்கும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய ஆசை பெருகிற்று
வாஸ்கோடகாமா கொச்சியில் கொல்லபட்டாலும் போர்துகீசியர் வியாபாரம் தொடர்ந்தது, அப்பொழுதுதான் வடக்கே பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தான் , இன்று பெரும் சர்ச்சையான பாபர்மசூதி அப்பொழுது கட்டபட்டதே
அது பின்னர் உலக வல்லரசானது
ஆம் அன்று பரப்பளவில் பெரியதாகவும், ஏராளமான மக்கள் தொகை கொண்ட நாடாகவும் , பெரும் செல்வம் கொழிக்கும் மாபெரும் பேரசசாகவும் விளங்கிற்று
இன்று அமெரிக்காவிற்கு இருக்கும் கவுரவம் அன்று மொகலாய பேரரசிற்கு இருந்தது, உலகமெல்லாம் அதோடு தொடர்பு வைக்க துடியாய் துடித்தார்கள்
அந்த பேரரசு ஆப்கன் முதல் தேற்கே கிருஷ்ணா நதிவரை பரவி கம்பீரமாக நின்றது, தமிழக நாயக்க மன்னர்களும் அதற்கு வரி செலுத்தினார்கள்
அந்த மொகலாய இந்தியாவினை அடைய வழிதெரியாத பிரிட்டிசார் ஒரு போர்த்துகீசிய மாலுமிக்கு பிராந்தியோ விஸ்கியோ ஊற்றி வரைபடத்தை கைபற்றினார்கள்
இந்தியாவிற்கு செல்லும் வழி பிரிட்டனுக்கு கிடைத்தது, அப்படியே பிரான்சும் கைபற்றியது
இந்தியாவுடன் வியாபாரம் அதுவும் மொகலாய பேரரசுடன் வியாபாரம் என்ற பெரும் கனவில் கிழக்கிந்திய கம்பெனி லண்டனில் தொடங்கபட்டது
பிரான்ஸ் கிழக்கிந்திய கம்பெனி, டச்சு கிழகிந்திய கம்பெனி என பல ஐரோப்பிய நாடுகளில் கிழக்கிந்திய கம்பெனி முளைத்தது
ஸ்பெயினில் முளைத்த கம்பெனி போர்ச்சுக்கலுடன் மோத போப்பாண்டாவர் பாகம் பிரித்து தென் அமெரிக்கா ஸ்பெயினுக்கு இந்தியா போர்ச்சுகல்லுக்கு என தீர்ப்பு சொன்னார்
ஸ்பெயின் இந்தியாவிற்கு இதனால்தான் வரவில்லை
பிரான்ஸ், டச்சு போல பிரிட்டானியரும் இந்தியா வந்தார்கள். அவர்கள் வந்த காலம் ஜஹங்கீர் ஆண்டுகொண்டிருந்தார்
அவரின் மாளிகையினையும் செல்வ செழிப்பினையும் கண்ட கம்பெனியாருக்கு வாய்மூடவில்லை, செருப்பிலும் முத்துக்கள் பீடா போட்டு துப்பும் பாத்திரமும் தங்கம் அதில் ஒட்ட வைரம் வேறு
இப்படிபட்ட பெரும் செல்வமா.. என வாய்பிளந்த கம்பெனியாருக்கு பம்பாய் பக்கம் வியாபாரம் செய்ய அனுமதி அளித்தார் ஜஹாங்கீர்
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தை பெருக்கினர் பிரிட்டானியர்
சீனாவுடன், இலங்கையுடன் வியாபாரத்தை பெருக்கும் விதமாக அவர்களுக்கு கிழக்கு கடற்கரையில் ஒரு கோட்டை தேவைபட்டது
அதுவரை குடிகூலி எனும் ஒப்பந்த முறையிலும் எங்கோ கேட்பாரற்று கிடக்கும் இடங்களை வாங்கியும் அவர்கள் தங்கிகொண்டும் வியாபாரம் செய்துகொண்டும் இருந்தனர்
அந்த பொட்டல்காடு ஒன்றும் வியாபார பொருள் கிடைக்கும் இடமல்ல, மாறாக நல்ல துறைமுகம் இருந்தது , அன்று நெருக்கடி இல்லா இடம் என்பதால் வெட்டவெளியில் கோட்டை கட்டி பாதுகாப்பாக இருக்க வசதியானது.
அப்படி சென்னப்ப நாயக்கரிடம் இருந்து 1644ம் ஆண்டு ஒரு இடம் வாங்கி ஜார்ஜ் கோட்டையினை கட்டினர், வியாபாரம் நடக்கும் இடம் என்பதால் அதன் அருகே குடியிருப்புகளும் உருவாகின
அந்த கோட்டைதான் இன்று பழனிச்சாமி வலம் வரும் கோட்டை, அந்த நகரம்தான் இயக்குநர் ரஞ்சித் கோஷ்டி அட்டகாசம் செய்யும் எங்க ஊரு மெட்ராஸு, நாங்க தான அட்ரஸு” என மார்தட்டும் வடசென்னை ஏரியா
(அதாவது கோட்டைக்குள் வெள்ளையர் வெளியே கறுப்பர், அதுதான் கறுப்பர் நகரம் என ரஞ்சித் கொடி பிடித்து திரிவது, இந்த கோளாறுதான் ரஜினியினை காலாவில் அப்படி கருப்பில் அலையவிட்டது)
மூல உபாயம் கிழக்கிந்திய கம்பெனி
அன்று அதன் நிலை இப்படித்தான், பிரிட்டானியர் அதற்கு மதராச பட்டினம் என பெயரிட்டான், அந்த கோட்டை சரக்குகளை பாதுகாகும் கோட்டை என்பதால் கணக்காளரும் கொஞ்சம் ராணுவத்தினரும், கூலிபடையும் ஆயுதங்களும் இருந்தனர்
அக்கால இந்தியபயணம் எளிதல்ல 8 மாத கடற்பயணம், அது கூட உறுதி இல்லை, கடல் கொள்ளை, நோய் , காற்றில் திசைமாறிவிட்டால் ஆபத்து என ஏகபட்ட விஷயம்
அதற்கும் மேல் இந்தியாவில் செல்வம் இருந்தாலும் வெயில் அவர்களை மிரட்டியது, அதற்கு பயந்து வசதியான பிரிட்டானியர் முதலில் இந்தியா வரவில்லை
தமிழகத்தில் மாதம் சில லட்சம் சம்பாதிப்பவனை அரபு பாலைவனத்திற்கு போ என்றால் போவானா? அதே நிலைதான் அன்று இந்தியாவிற்கு போ என சொல்லும்பொழுது லண்டனிலும் இருந்தது.
கம்பெனி லண்டனில் இந்தியாவிற்கு ஆளெடுத்தபொழுது வறுமையில் வாடியவர்கள் வந்தார்கள், ரவுடிகள், பொறுக்கிகள் என லண்டன் தெருக்களில் சுற்றிகொண்டிருந்தவர்களை சேர்க்க ஆயத்தமாயிருந்தது
முதலாவது முன்பின் தெரியா ஆபத்தான இடங்களில் வியாபாரம் செய்யும்பொழுது அடாவடியான ஆட்கள் தேவை, இன்னொன்று லண்டன் அமைதியாக இருக்கும்
இப்படி பார்த்து பார்த்து பொறுக்கிகளை கம்பெனி பொறுக்கி கொண்டிருந்தபொழுது இந்தியாவில் பலத்த அரசியல் மாற்றம் ஏற்பட்டது
ஆம் அதுவரை மாபெரும் சாம்ராஜ்யமாக நின்ற மொகலாய பேரரசு அவுரங்கசீப்பின் இறுக்கமான கொள்கைகளில் ஆட்டம் கண்டது, வீர சிவாஜி அவரை நொறுக்கி தள்ளியிருந்தார், அதை தென்னகத்தில் பல பகுதிகள் மொகலாய கையினை விட்டு சென்றன
அவுரங்கசீப் அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தினை அழிவு பாதைக்கு திருப்பியவர் என்பதில் சந்தேகமில்லை, அவர் காலத்திற்கு பின் மொகலாய அரசு பலமிழந்தது
அவுரங்கசீப்பின் பின் வந்த யாரும் சரியில்லா நேரத்தில் ஈரானில் இருந்து வந்தான் நாதிர் ஷா, டெல்லியினை அடித்து துவைத்து காயபோட்டான்
மாபெரும் சாம்ராஜ்யமான மொகலாய சாம்ராஜ்யம் அப்பொழுது அவன் காலடியில் கிடந்தது
வைரங்களில் குஷ்பு என சொல்லபடும் அந்த கோஹீநூர் வைரத்தையும், ஷாஜகானின் புகழ்பெற்ற மயிலாசனத்தையும் எடுத்துகொண்டு ஈரான் திரும்பினான்
மொகலாய கஜானா காலியாயிற்று, குளம் வற்றினால் பறவைகள் பறக்கும், சங்கிலி அவிழ்ந்தால் யானை ஓடும்
ஆட்சி போனால் அரசியல்வாதி கட்சி விட்டு ஓடுவான், இது உலக நியதி
அப்படி மொகலாய சாம்ராஜ்யம் சரிய ஆரம்பித்ததும் அவர்கள் கட்டுபாட்டில் இருந்த அரசுகள் எல்லாம் புது புது நாடுகளாயின
பஞ்சாபில் சீக்கியர் உதித்தனர், கிழக்கே ஒரு அரசு எழும்பிற்று , தெற்கே ஐதரபாத், ஆர்காடு சமஸ்தானம் எல்லாம் தனி தனியாக அட்டாகாசம் செய்தன
இது கிழக்கிந்திய கம்பெனிக்கு அசவுகரியமானது, கம்பெனிக்கு நிறைய ஆட்கள் தேவைபட்டனர்
அதே நேரம் மொகலாயர் இருந்தவரை கிழகிந்திய கம்பெனி பெரும் லாபம் ஈட்டமுடியவில்லை, மிக கறாறாக கறக்க வேண்டியதை கறந்தது அந்த மொகலாய அரசு
இதனால் லண்டன் பாராளுமன்றம் அவர்களுக்கு சம்பாதித்து கொடுக்கவா கிழக்கிந்திய கம்பெனி இருக்கின்றது? கடையினை சாத்திவிட்டு கிளம்புங்கள் என சொல்லி இருந்தது
அய்யா சாமி, இப்பொழுது மொகலாயர் இல்லை. இந்தியா உடைந்துவிட்டது இனி உங்களுக்கு அள்ளி கொடுக்கின்றோம் என சொல்லி அவசரமாக ஆள் எடுத்தது, கம்பெனிக்கு பலரை எடுக்க உத்தவிட்டது
கிழகிந்திய கம்பெனியின் இன்டர்வியூ இப்படித்தான் இருந்தது
“உன் தகுதி என்ன?”
2 பேரை குத்தியிருக்கின்றேன், ஒரு கடையினை நொறுக்கி இருக்கின்றேன்
அப்படியா நீதான் தாசில்தார்
“உன் தகுதி என்ன?”
4 கொலையில் சிக்கவில்லை 8 கொள்ளை அடித்தேன் வரும்பொழுதுகூட வாசலில் ஒருவனை கீறிவிட்டுத்தான் வந்தேன்
அப்படியா நீ கலெக்டர் சரியா?
இப்படியாக இன்டர்வியூ நடந்த இடத்தில் அந்த தந்தை வந்தார், அவர் பெயர் ரிச்சர்ட் கிளைவ்
உமக்கு வயதாயிற்று கம்பெனியில் வேலை தரமுடியாது என்றார்கள் கம்பெனியார்
அவர் சொன்னார், “அய்யா வேலை எனக்கல்ல என் பையனுக்கு”
என்ன தகுதி அவனுக்கு?
ஒரே அடிதடி, குடி, எங்கு போனாலும் வம்பிழுக்கின்றான். உணவகத்தில் ரொட்டிக்காக 4 பேரை சாத்தி இருக்கின்றான், நிச்சயம் இங்கு சிறைக்குத்தான் செல்வான், அவனை இந்தியா அழைத்து போங்கள், கண்காணா தேசத்தில் சனியன் சாகட்டும்
இங்கேயே செத்தால் என்ன? என்றார் கம்பெனியார்
அதற்குத்தான் சனியன் இருமுறை தூக்கு மாட்டிற்று அப்பொழுதும் சாகவில்லை, அதனால் லண்டன் சாவு சரிவராது, இந்தியாவில் போய் சாவு என உங்களிடம் கொண்டுவந்துவிட்டேன்
(ஆம், இருமுறை வாழ்வை வெறுத்து 16 வயதில் தற்கொலை செய்ய முடிவெடுத்து தப்பி பிழைத்தவன் கிளைவ்)
சாக தூக்கிட்டானா, அப்படியானால் கஷ்டம், கோழை என்றார் அதிகாரி
“அய்யா அவன் கோபக்காரன், ஒன்றை நினைத்தால் செய்யாமல் முடிக்கமாட்டான் ஆனால் குடும்பத்தில் மூத்த பையன் இங்கு வெட்டியாய் சுற்றினால் குடும்பத்தில் மற்ற பிள்ளைகள் உருப்படுமா? அந்த ஆத்திரத்தில் சம்பாதிக்க துப்பில்லை என நான் திட்டியதால் தொங்க போனான். மற்றபடி ஒன்றுமில்லை.
ஆத்திரம் வந்தால் அப்படி பொங்குவான் மனதால் அழுதால் தொங்குவானே தவிர மற்றபடி நல்லவன், நம்பலாம்”
ஓஓ அப்படிபட்டவன் கண்டிப்பாக எங்களுக்கு வேண்டும் அவன் பெயர் என்ன?
இதோ நிற்கின்றானே அவன் தான் என் மூத்த மகன் ராபர்ட் கிளைவ், என் மொத்த பாவத்தின் உருவம்
கம்பெனியார் அவனை உடனே வேலைக்கு சேர்த்தனர், அவன் வயது 18 என்று குறிக்கபட்டது
1743ம் ஆண்டு ஒரு ஜூன்மாதம் இந்தியா கிளம்பியது கிளை வந்த கப்பல், ஆனால் புயலில் சிக்கியது
அத்தோடு அது மூழ்கி இருந்தால் இந்திய வரலாறு மாறி இருக்கும் ஆனால் அக்கப்பல் பிரேசில் பக்கம் கரை ஒதுங்கியது
அப்பொழுது கம்பெனியார் சொன்னார்கள், நாம் இந்தியாவில் நமது தலமை செயலகம் அமைந்துள்ள சென்னை கோட்டைக்கு வேலைக்கு செல்கின்றோம், நமக்கு முன்பே அங்கே போர்த்துகீசியர் இருந்ததால் அம்மொழி செல்வாக்கு அதிகம், அதனால் கொஞ்ச நாள் அதை கற்றுகொள்ளுங்கள்
அங்கு போர்த்துகீஸ் கற்றான் கிளைவ், இப்படியாக உலகெல்லாம் சுற்றி ஒருவருடம் கழித்து சென்னை கோட்டையில் கால் வைத்தான் அது ஜூன் 1744
சென்னை கோட்டைக்குள் சிறிய கிறிஸ்தவ ஆலயம் உண்டு, இப்பொழுதும் உண்டு
அங்கு சென்று ஓஓஓ என அழுதான் கிளைவ், “எனக்கு இந்த இந்தியா பிடிக்கவே இல்லை, என் அருமையான இங்கிலாந்தை விட்டு ஏன் என்னை இங்கு இழுத்து வந்தீர் ஜூசஸ்.. அவன் கத்தியது வங்க கடல் வரை கேட்டது
இந்திய தலைவிதி அவனிடம்தான் இருக்கின்றது என்பதை அறிந்திருந்த அந்த ஆலயத்து திருச்சிலுவை அமைதியாக இருந்தது
தொடரும்..