எல்லா துறையிலும் பிறவியிலே திறமையானவர்கள் உண்டு, அப்படி அல்லாமல் கஷ்டபட்டு தன்னை உருவாக்கியவர்கள் உண்டு , தமிழக கவிஞர்களில் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் முதல் வகை, பிறவி கவிஞன்
மிக சிறுவயதிலே உலகத்தை கவனித்தவன் அப்பொழுதே கம்யூனிச பொதுவுடமை கருத்துக்கள் அவனை பாதித்தது, தமிழோடும் பொதுவுடைமை தத்துவத்தோடும் வளர்ந்தார்
19 வயதிற்குள் 16 தொழில்களை செய்திருந்தார் விவசாயம் முதல் நடனம் வரை அதில் உண்டு, மீன்பிடியும் உண்டு அவர் எல்லா மக்களின் துயரமும் அறிந்தது அக்காலத்தில்தான், அதுதான் பின் பாடலாய் ஒலித்தது
பாரதிதாசனிடம் தமிழ்கற்றார், அப்படியே கவிஞராய் மலர்ந்தார்
அவர் பாட்டெழுதியது வெறும் 3.5 வருடம் மட்டுமே, அந்த மிககுறுகிய காலத்தில் காலத்திற்கும் நிற்கும் பாடல்களை கொடுத்து சென்றார்
உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையா தாஸ் போன்றோரின் ஒரு மாதிரி லாகிரியில் ஒலித்துகொண்டிருந்த தமிழ்பாடல்களுக்கு சுருக்கென்று எளிய தமிழில் திருப்பம் கொடுத்தவர் இவர்
பின்னாளில் இவர் போட்ட வழியில்தான் கண்ணதாசனும் , வாலியும் எளிய தமிழில் பயணித்தார்கள்
3.5 வருடத்திற்குள் அவன் எழுதிய பாடல்கள் 99% எளிய மக்களின் துயரம் பற்றியவை, விவசாயிகளுக்கும், ஆலை தொழிலார்களின் குரலாகவும் அவன் பாடியது
அவனளவு ஏழைகளுக்காக பாடிய கவிஞன் இன்றுவரை தமிழகத்தில் இல்லை, இனி வரப்போவதுமில்ல
விவசாயிகளின் வரிகளாக
“காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்”
உழைத்து வாழ்வோம் எனும் நோக்கில்
“உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது – மனம்
கீழும் மேலும் புரளாது”
மூட நம்பிக்கைக்காக
“செம்பும் கல்லும் தெய்வமென்று
நம்புவோர்கள் பித்தரென்று
சித்தர்கள் உரைத்த மொழி மெய்தானே?
சிற்பிகள் செதுக்கி வைத்த
சித்திரச் சிலைகளுக்குள்
தேவி வந்திருப்பதுவும் பொய்தானே?”
சிறுவர்களை தட்டி எழுப்பும் விதமாக
“வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது
சொல்லிவைப்பாங்க – உன்
வீரத்தைக் கொளுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க…”
பொதுவுடமை தத்துவத்திற்காக
“தனிவுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா! நீ
தொண்டு செய்யடா!
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா!– எல்லாம்
பழைய பொய்யடா!”
பெண் விடுதலைக்காக
“தன் கணவனை இழந்தவள் கட்டழகியானாலும்
கடைசியில் சாகமட்டும் உரிமையுண்டு – இதில்
கதைகளும் கட்டிவிடும் ஊர் திரண்டு!”
பித்தலாட்ட கும்பலுக்காக
“தன் ரேகை தெரியாத பொய்ரேகை காரரிடம்
கைரேகை பார்க்க வரும் முறையாலும் – அவன்
கண்டது போல் சொல்லுவதை ஆறறிவில்
நம்பிவிடும் வகையிலும் ஓரறிவு அவுட்டு
அறிவுக் கதவை சரியாய் திறந்தால்
பிறவிக் குருடனும் கண் பெறுவான்.”
தொழிலாளிக்காக
“பட்டினிக்கும் அஞ்சிடோம்!
நெஞ்சினைப் பிளந்த போதும்
நீதி கேட்க அஞ்சிடோம்!
நேர்மையற்ற பேர்களின்
கால்களை வணங்கிடோம்!.”
“தேனாறு பாயுது! செங்கதிர் சாயுது!
ஆனாலும் மக்கள் வயிறு காயுது”
கலை என்பதற்கு மாவீரன் லெனினின் வரிகள் இப்படி இருக்கும்,
“கலை மக்களுக்குச் சொந்தமானது. அதன் வேர் வஞ்சிக்கப்பட்ட பெரும்பாலான உழைப்பாளி மக்களுக்கு இடையில் படர்ந்திருக்க வேண்டும். அது அவர்களை ஒன்றுபடுத்தி அவர் தம் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் நிறைவேறச் செய்வதாய், அவர் தம் கலையுணர்வைத் தூண்டுவதாய் அமைதல் வேண்டும்.”
இந்த வரிகளுக்கு வாழ்வாய் வாழ்ந்தவன் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
பெரும் புகழ்பெற்று அவன் சாகும்பொழுது வயது வெறும் 28
அந்த 28 வயதில் அவன் கண்ட மரணம்தான் கண்ணதாசனுக்கும், வாலிக்கும் வழிவிட்டது. அல்லாவிட்டால் அந்த சிம்மாசனம் கடைசி வரை அவனுக்குத்தான் இருந்திருக்கும்,விதி அது அல்ல
மிக சொற்பமாக பெண்கள், காதல் பாடலும் எழுதியிருந்தான், “வாராயோ வெண்ணிலாவே” அதில் அபாரம், அதனை விட அழகான பாடல் ஒன்று உண்டு, இன்றுவரை அந்த வரிகள் உயர்ந்த
இடத்திலே இருக்கின்றன, எந்த கவிஞனின் வரிகளும் அதை எட்டவில்லை
“ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ”
(குஷ்பூ படத்தினை பார்க்கும் பொழுதெல்லாம் , இந்த வரிகள்தான் காதில் ஒலிக்கும், அவருக்காகவே எழுதபட்ட வரிகள் என்பது எம் எண்ணம்..)
எளிய தமிழால், எளிய மக்களுக்கு பாடல் சொன்ன தமிழ்கவிஞனின் நினைவுநாள் இன்று
மறக்கமுடியாத கவிஞன் அவர், பாட்டுகோட்டையினை கட்டியாண்ட கவிராஜன் அவன்..
அவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிலிகள் [ October 8, 2018 ]