ஈழத்தில் என்ன பிரச்சினை

அமைதிபடை அட்டகாசம் தெரியாமல் பேசுகிறாய் என்கின்றனர் சிலர்.

அமைதிபடைக்கு முன்பே 1980 ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம்.

அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை.

ஈழ போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் இந்தியாவினை ஒதுக்கிதான் வைத்தார், போராளிகளுக்கு பயிற்சிகள் தொடங்கிய காலத்திலும் வேண்டா வெறுப்பாக இறுதியில் வந்து சம்பிரதாயத்திற்குதான் கலந்து கொண்டனர் புலிகள். அவ்வப்போது இந்தியாவுடன் மோதும் சூழ்நிலை வரலாம் என்று எதிர்பார்த்தேதான் இருந்தார்.

அமைதிபடை சென்று இறங்கியதும் எல்லா குழுக்களும் ஆயுதம் ஒப்படைக்க, புலிகளும் சிலவற்றினை ஒப்படைத்து சுதுமலை மேடையில் “இந்தியாவினை நம்பி ஆயுதங்களை ஒப்படைக்கின்றோம்” என்றவுடன் கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்பரித்தது,

ஆனால் பிரபாகரனின் முகம் சிலநொடி சட்டென இருண்டது,

அமைதிபடை காலம் அமைதியாகத்தான் தொடங்கியது, 17 புலிகளை சிங்களன் கைது செய்யும்போது அவர்களிடம் சயனைடு இல்லை, ஆனால் புலிகள் சென்று பார்த்துவிட்டு வந்தபின் சயனைடு வந்தது, கொஞ்சநேரத்தில் அவர்கள் சாக பிரச்சினை வெடித்தது, பழி இந்தியா மேல்.

அதன்பின் புலிகளின் வரிவசூல் ஒப்பந்தத்தால் பாதிப்படைய, தீலிபனின் உண்ணாவிரதம் தொடங்கியது, அவனை காப்பாற்ற புலிகள் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை, அவன் செத்ததும் அவன் உடலோடு மக்கள் முன் சென்று ஒரு உணர்ச்சி எழுச்சி உண்டாக்கினர்.

அதன்பின் அது போராக வெடித்தது, இந்தியபடை சுற்றுலா செல்வது போல் சென்றிருந்தது, அந்த இடங்களின் வரைபடம் கூட அவர்களிடம் இல்லை, புலிகள் தங்களுடன் மோதுவார்கள் என கனவிலும் நினைக்கவில்லை, புரியாத புது இடத்தில் அது திணறியது. புலிகளின் தாக்குதல் அகோரமாக இருந்தது, இந்திய படைக்கு புலி எது? மக்கள் எது என தெரியவில்லை. தடுமாறியது.

உதாரணம் பனை உச்சியிலிருந்து ராணுவத்தை சுடுவார்கள், ஒரு வீட்டின் உள்ளிருந்து சுட்டுவிட்டு ஓடுவார்கள், ராணுவம் உள் செல்லும், விளக்கிற்காக சுவிட்சை போட்டால் குண்டு வெடிக்கும் இப்படி ஒரு வித்தியாசமான களம் அது.

மக்கள் யார், புலிகள் யார் என இந்தியபடைக்கு தெரியாது, மருத்துவமனையில் மக்களோடு நோயாளியாக படுத்திருக்கும் புலி, தெருவில் செல்லும் ராணுவம் மீது சுட்டுவிட்டு படுத்துகொள்ளும்,

ராணுவம் என்ன செய்யும்? ஒரே ஒரு முறை திருப்பி தாக்கியதில் மருத்துவமனை அழிந்தது, அதனை பெரும் செய்தியாக்கினர் புலிகள்.

மாலை மக்களை ஒன்றாக அமரவைத்து சில பாதுகாப்பு விஷயங்களை சொல்வார்கள் இந்திய ராணுவத்தார், நடு கூட்டத்திலிருந்து ஒரு புலி சுடும், திரும்ப மொத்த மக்களை கொல்லவா முடியும்? ராணுவம் திணறும்.

திண்ணையில் வெற்றிலை இடிக்கும் பாட்டி ராணுவம் வீட்டை கடந்ததும், முந்தானையில் இருக்கும் ரிமோட்டை அமுக்குவார், வாகனம் சிதறும். பள்ளி மாணவிகள் உள்ளாடைகளில் தோட்டா முதலான ஆயுதம் கடத்தபடும்,

எப்படி சோதிக்க?

சில மாணவிகள் செக்போஸ்டை கடக்கும்போது அசால்டாக புத்தக பையினை எறிவார்கள் அது வெடிக்கும், சோதனை மற்ற மாணவிகள் மீது நடக்கும், அதற்கும் இந்திய ராணுவம் கற்பழிக்கின்றது என செய்தி பரவும்.

ஒரு கட்டத்தில் தவறான தகவலை பரப்பவிட்டு 300 ராணுவத்தினரை மொத்தமாக கொன்று, அவர்கள் உடலை அம்மணமாக ஒப்படைத்தனர் புலிகள், சர்வதேச சட்டபடி அது ஒரு தேச அவமானம், இந்திய ராணுவ உச்சம் அவமானத்தால் தலைகுனிந்த நேரம் அது. அப்படி செய்திருக்க கூடாது.

எந்த நாடும் தன் நாட்டில் அந்நிய ராணுவம் இருக்க அனுமதிக்க்காது, உண்மையில் மோதி இருக்கவேண்டியது சிங்கள படை, ஆனால் தமிழ் மக்களும், இந்திய ராணுவமும் பாதுகாப்பில்லாமல் இருக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது சிங்கள இனம் மட்டுமே, புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து மகிழ்ந்தார் பிரேமதாச.

இதுதான் உலகின் 4ம் பெரும் ராணுவமான இந்திய ராணுவத்தை புலிகள் விரட்டிய வரலாறு, நேருக்கு நேர் எல்லாம் மோதவில்லை, இன்னொன்று இந்திய ராணுவம் அழிவுகளை குறித்து கவனமாக போராடிற்று, அப்படியும் பிரபாகரனை முடக்கிய சமயத்தில்தான் விபி சிங் படை மீட்டார்.

இதே தந்திரத்தை, அதாவது மக்களோடு மறைந்து தாக்கும் வித்தையினை 2009ல் சிங்களனிடம் காட்டிய புலிகள் மொத்தமாக வாங்கி கட்டி அழிந்தனர், யாரைபற்றியும் கவலைபடாத சிங்களம் மொத்தமாக அழித்தது.

பிரபாகரனின் உடல் கோவணத்துடன் கிடந்தது, அன்று 300 இந்திய ராணுவ வீரர் உடல்களை அம்மணமாக்கி கொடுத்த வினை, பின் அவருக்கே திரும்பியது. யுத்த களத்தில் ஒரு உச்சகட்ட அவமானம் அது. அதனால்தான் சிங்களன் அந்த படத்தினை திரும்ப திரும்ப காட்டினான்.

அந்த அமைதிபடையினை மட்டும் விரட்டியிருக்காவிட்டால், இன்று வடக்கு கிழக்கு இணைந்த ஈழ மாகாண முதல்வராக ஒரு தமிழன் இருப்பார், பின்புலத்தில் இந்தியா இருக்கும், இந்திய தளமும் அந்நாட்டில் தொடர்ந்து இருந்திருக்கும், ஈழ மக்கள் இவ்வளவு துன்பம் அடைந்திருக்கமாட்டார்கள், 25 வருட அழிவும், முள்ளிவாய்க்கால் கொடுமையும் நடந்திருக்காது.

இந்திய ராணுவம் அன்று பின் வாங்க ஒரே காரணம் புலிகளின் பிரச்சார ஊடகங்களும், சிங்கள அரசு புலிகளுக்கு கொடுத்த மகா ஒத்துழைப்புமே, இன்று வரை அது அப்படியே நிலைத்துவிட்டது, அமைதிபடை அழித்தது, கற்பழித்தது. புலிகளின் ஊடகபலம் அப்படி. இதோ ராஜிவ் கொலை குற்றவாளி 5 புலிகள், 2 தமிழகத்தார் என்பதை 7 தமிழர்கள் என லாவகமாக மறைத்தார்கள் அல்லவா? அப்படியே தான்.

அமைதிபடை காலத்தில் 1500 இந்திய வீரர்கள் செத்தனர், பெரும்பாலும் சீக்கிய சகோதரர்கள், அவர்களுக்கு இலங்கையில் இன்றும் நினைவு மண்டபம் உண்டு, அவர்கள் பெயர் எல்லாம் பொறிக்கபட்டுள்ளன.

மக்களை முன்னிறுத்தி செய்யபடும் இடத்தில் எமது பெருமை மிக ராணுவம் தன் உயிரை இழக்குமே ஒழிய, அப்பாவிகளை கொல்லாது என்பதற்கு பெரும் அடையாளமாக அது உள்ளது, இலங்கை செல்லும் எல்லா இந்திய ராஜதந்திரிகளும் அதனை வணங்க தவறுவதே இல்லை.

நிச்சயம் கண்ணீரால் வணங்கவேண்டிய இடம் அது, இந்த புலிகளால் ஒரு நாளில் லட்சகணக்கான அப்பாவி மக்கள் சாவார்கள் என முன்னறிவித்த இடம் அது, அந்த , முள்ளிவாய்க்கால் காலத்தையும் அமைதிபடை காலத்தையும் ஒப்பிட்டு அமைதிபடை காலத்தில் இருந்த ஈழத்தவரிடம் கேட்டால் சொல்வார்கள்

சிங்கள ராணுவம் என்பது எவ்வளவு இரக்கமில்லாத அமைப்பு என்பது எங்களுக்கு பின்னாளில்தான் விளங்கிற்று, அப்படி பார்க்கும்பொழுது இந்திய ராணுவம் ஓரளவு பொறுமையுடந்தான் போராடிற்று, முடிந்த அளவு பொறுமை காத்தது, அழிவுகளையும் அவமானங்களையும் பொறுத்துகொண்டது.

மக்கள் அழிவுகளை பற்றி கவலை இன்றி அடித்து நொறுக்கி இருக்குமானால் புலிகளை வீழ்த்த அதற்கு 1 நாள் கூட ஆகியிருக்காது.

ஆயிரம் அர்த்தம் நிறைந்த வார்த்தை அது,

உதவ வந்த அந்த படையினை விரட்டிவிட்டு, மொத்த வன்னிமக்களையும் முள்ளிவாய்க்காலில் சிங்களனிடம் ஒப்படைத்துவிட்டு, இனபடுகொலை, வெள்ளைகொடி படுகொலை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் சொல்வதை 1500 வீரர்களையும் ஒரு தலைவனையும் இழந்து, பெரும் பழி சுமத்தபட்ட‌ இந்த பெரும் தேசம் எப்படி எடுத்துகொள்ளும்?

ஈழத்தில் என்ன பிரச்சினை என்பதற்கு முன்பு ராஜிவ்காந்தி அருமையான பதில் சொன்னார்,

“ஒரு நபர் தன் ஆயுதத்தை கீழே வைத்தால் மறுநொடி கொல்லபடுவோம் என அஞ்சுகின்றார், ஆயுதம் இல்லாமல் அவரால் வாழமுடியாது. தன் ஆளுகைகுட்பட்ட நாட்டில், காலம் வரை ஆயுத துணையோடு வாழும் முடிவில் அவர் இருக்கின்றார், அதுதான் பெரும் பிரச்சினை” ,

பின்னாளைய வரலாறு அதனை உண்மை என காட்டிற்று.

(இன்று காஷ்மீருக்குள் புகுந்த இந்திய விமானபடை போல அன்றே இலங்கையில் புகுந்து பங்கர் பிரபாகரன் மண்டையில் போட்டிருக்க வேண்டும்..)