நடக்கவே நடக்காது

இந்த பொள்ளாச்சி குற்றவாளிகளை என்ன செய்யலாம்? குதறலாமா? கொல்லலாமா? இல்லை நந்தா பட பாணியில் அறுத்துவிடலாமா என ஆளாளுக்கு தீர்ப்புகள்

உண்மையில் என்ன செய்யலாம், அவர்கள் எப்படி இப்பொழுது அடிவாங்கி கொண்டிருக்கின்றார்கள்?

“மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதடா., பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே.” என சொல்லி சொல்லி அடி வாங்கி கொண்டிருப்பதால் அவர்களுக்கு அட்டகாசமான தண்டனை இருக்கின்றது

இந்த பட்டினத்தார் பாடலை ஒரு நாளைக்கு ஆயிரம் முறை படிக்க வைக்க வேண்டும், அதுவும் இந்த வரிகளை மூச்சுவிடும் நேரமெல்லாம் சொல்ல வைக்க வேண்டும்

பெண்கள் அழகு வெறுத்து போகும் வண்ணம் கீழ்கண்ட வரிகளையும்

“மலமும் சலமும் வழும்புந் திரையும்
அலையும் வயிற்றை ஆலிலை யென்றும்,

நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்,

அலங்கையைப் பார்த்துக் காந்தள் என்றுரைத்தும், வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தைப் பாரினில் இனிய கமுகெனப் பகர்ந்தும்,

வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மலர் என்றும்,

அன்ன முங் கறியும் அசைவிட்டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்

நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும்
கூறிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும்

தண்ணீர் பீளை தவிராது ஒழுகும்
தக்க தலை யோட்டில் முளைத்து எழுந்த
சிக்கின் மயிரைத் திரள் முகி லென்றும்

சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லும் நரக வாயில்
தோலும் இறைச்சியும் துதைந்து சீப்பாயும்”

என படிக்க சொன்னால் அதன் பின் பெண்கள் பக்கம் திரும்புவார்கள்? மாட்டார்கள்.

மேலும் , அந்த ராட்சத அரிப்பே வராத அளவுக்கு

“மால்கொண்டு அறியா மாந்தர் புகும்வழி
நோய் கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி”

என்ற இந்த வரிகளையும் கதற கதற மனப்பாடம் செய்ய வைத்து, பட்டினத்தார் சாயலில் கோவணத்துடன் தெருவில் அலையவிட்டால் , அவர்களுக்கு இந்த பாடல் தானாக வராதா?

“இரைக்கே இரவும் பகலும் திரிந்திங்கு இளைத்துமின்னார்
அரைக்கே அவலக் குழியருகே அசும் பார்ந்தொழுகும்
புரைக்கே உழலும் தமியேனை ஆண்டருள்! பொன்முகலிக்
கரைக்கே கல்லால நிழற்கீழ் அமர்ந்தருள் காளத்தியே!

வாய்நாறும் ஊழல் மயிர்ச்சிக்கு நாறிடும் மையிடுங்கண்
பீ நாறும் அங்கம் பிணவெடி நாறும் பெருங்குழி வாய்ச்
சீ நாறும் யோனி அழல்நாறும் இந்திரியப் பேறு சிந்திப்
பாய்நாறும் மங்கையர்க் கோஇங்ஙனே மனம் பற்றியதே?

பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால்மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளியென் போதப் பொருள்பறிக்க
எண்ணா துனைமறந்தேன் இறைவாகச்சி ஏகம்பனே.

நாறுமுடலை நரிப்பொதிச் சோற்றினை நான்தினமுஞ்
சோறுங்கறியும் நிரப்பியபாண்டத்தைத் தோகையர்தங்
கூறுமலமும் இரத்த முஞ்சோறுங் குழியில் விழாது
ஏறும்படி யருள்வாய் இறைவா கச்சி ஏகம்பனே”

இப்படி எல்லாம் பாடிய பின் அவர்கள் எப்படி எல்லாம் போதிக்க வருவார்கள்?

நிச்சயம் இந்த பாடலை பாடியபடி வருவார்கள்

“பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்

நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மங்கை யரைத்

தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச்

சேய்போல் இருப்பர்கண் டீர்உண்மை ஞானம் தெளிந்தவரே”

ஆம், அவர்களும் பட்டினத்தார் , பத்ருஹரியார் போல ஞானியாவார்கள், பலரை ஞானம் பெற வைப்பார்கள்

இப்படி பட்ட்டினத்தார் பாடலில் அவர்களும் பலரும் ஞானம் பெற்றபின் பெண்கள் பக்கம் செல்வார்கள்? கற்பழிப்புகள் நடக்கும்?

நடக்கவே நடக்காது

அந்த பொள்ளாச்சி கயவர்களை பட்டினத்தார் ஆக்கி தண்டிப்பது அவர்களுக்கும் நல்லது, சமூகத்திற்கும் நல்லது