இன்று அப்படியா நிலமை?

தம்பி நாமெல்லாம் காங்கிரசை எதிர்த்தோம் என்றால் அன்று நாமெல்லாம் பாட்டாளிகள், ஓட்டாண்டிகள், அன்னகாவடிகள்

எறும்பை யானை கொல்ல முடியுமா? வானபாடியினை வல்லூறு விழுங்குமா? அப்படித்தான் நம்மை ஒன்றும் செய்யமுடியாமல் காங்கிரஸ் தத்தளித்தது

இன்று அப்படியா நிலமை?

குவித்துவிட்ட கோடான கோடி சொத்துக்களை காக்க ஒரு கோஷ்டி, அவர்களை போல சொத்துகுவிக்க வந்திருக்கும் ஒரு கோஷ்டி

இதுதான் இன்றைய திமுக தம்பி

நான் இயக்கம் வளர்த்தேன், தமிழ் வளர்த்தேன், திராவிட உணர்வு வளர்த்தேன், கோடிகணக்கான தம்பிகளை தவமாய் வளர்த்தெடுத்தேன்

இனமான உணர்வினை ஊட்டினேன், காலத்திற்கும் போராட திராவிட தத்துவ உணவை சத்தாய் ஊட்டினேன்

ஆனால் நீயோ கோடீஸ்வரர்களை மட்டும் கவனமாக வளர்த்திருக்கின்றாய் தம்பி

நானோ தமிழர் பெருமை கடல்போல் பெருக உழைத்தேன் நீயோ அது கட்சியினர் சொத்துகணக்கில் தெரிந்தால் போதுமென இருந்துவிட்டாய்

நானோ தமிழர் பெருமையாம் தஞ்சாவூர் கோவில் போல ஆலயம் கட்ட நினைத்தேன், நீ கண்ணாடி மாளிகை கட்டிவைத்து வந்துவிட்டாய்

தம்பி உன் மகனுக்கும் ஒரு சொல் சொல்வேன் கேளாய்..

நாம் ஆண்டிபண்டாரங்களாக டெல்லியினை எதிர்த்தோம், அவனின் துப்பாக்கி கண்டு நெஞ்சை கிழித்து காட்ட ஆடை ஒன்றே நம் சொத்தாயிருந்தது

சிறைபட்டோம் மிதிபட்டோம் மதிவழி போராடி வென்றோம் நின்றோம்

இன்று அப்படி அல்ல, அந்த பாட்டாளிகள் நிரம்பிய திமுக இன்று அரபு சுல்தானுக்கும் அமெரிக்க தொழிலதிபர்களுக்கும் நிகரான சொத்து கொண்டோர் இயக்கமாயிற்று

இந்த நிலையில் டெல்லியுடன் மோதல் தேவையா?

குடும்பம், கட்சி, சொத்து என ஏகபட்ட விலங்குகளை பூட்டிகொண்டிருக்கின்றான் கட்சிக்காரன், இவனால் வாள் சுழற்ற முடியுமா? ஒரு எட்டு எடுத்து வைக்கத்தான் முடியுமா?

நீ பெற்றிருக்கும் தனயனிடம் சொல்

மாறிவிட்ட காலத்தில் அவனால் வெற்றிபெற முடியாது, இந்த குதிரை எப்பொழுது வாய்திறக்கும் கடிவாளமிடலாம் எனகாத்திருந்தவர்கள் நேரம் பார்த்து கடிவாளமிட தொடங்கிவிட்டார்கள்

அதனால் தமிழகத்திற்கு எது நன்மையோ அதை செய்ய சொல், தேசிய அரசியல் எனக்கும் வராது, அவனுக்கும் வராது, நீ உன் வழக்கமான சாதுர்யத்தில் எப்படியோ கரைகண்டாய்

நீ மட்டும் இந்திய அரசியல்வாதியாக இருந்திருந்தால் இந்நேரம் சீனா சிதறியிருக்கும், பாகிஸ்தான் பக்கவாதத்தில் கிடந்திருக்கும்

ஆம் தமிழகத்தையே இப்படி ஆக்கிவிட்ட நீ அந்நாடுகளை விட்டு வைத்திருப்பயா? இதனால்தான் இயற்கை உன்னை அங்கு அனுமதிக்கவில்லை

ஆக தம்பி, நான் கண்ட இயக்கம் தறிகெட்டு செல்லும் நிலையில் நான் ஒன்றை சொல்லி கொள்கின்றேன்

ஏழைகளின் ஏந்தல், பொதுவுடமை காவலன் என உலகம் அறியபட்ட அந்த ரஷ்ய ஸ்டாலின் பெயரை உன் மகனுக்கு சூட்டி நீ பெருமை அடைந்தாய்

முதலில் அந்த பெயரை மாற்றி ஜார் மன்னன் என வைத்துகொள்ள சொல்

அந்த கட்சியும் அதன் நடவடிக்கைகளும் அப்படித்தான் இருக்கின்றது, அவனை சுற்றி ஏகபட்ட ரஸ்புடீனகளும் இன்னும் பல லார்டுகளுமே இருக்கின்றார்கள்

ஸ்டாலின் என்ற பெயர் அவனுக்கு பொருந்தாது, ஜார் என்பதுதான் பொருந்தும்

எனக்காக இதை உடனே செய்வாய் தம்பி..”