உடன்பிறப்பே
“உடன்பிறப்பே
திராவிட திருநாடாம் தமிழகத்தில் புகமுடியாதவர்கள், தமிழர் தன்மான கோட்டையாம் பெரியார் மண்ணாம் இந்த எக்கு கோட்டையில் புகமுடியாதவர்கள் சுரங்கம் தோண்டி நம் காலடிக்கு வரபார்க்கின்றார்கள்
விடலாமா?
அம்மையார் கட்சி அவர்கள் அடிமைகட்சி ஆனபின் அதிகார பாசறையின் குத்தீட்டிகளை நம்மேல் பாய்ச்சி நம்மை பயமுறுத்துகின்றார்கள் வீணர்கள்
உடன்பிறப்பே, கழக கண்மணி துரைமுருகன் வீட்டில் பணசுரங்கம் இருந்ததாம், பல்லாயிரம் கோடி இருந்ததாம் அதை எல்லாம் தமிழகம் நம்புமாம்
நம்புமா? நம்ப முடியுமா? நம்பவிட விட்டுவிடத்தான் முடியுமா?
சொல் உடன்பிறப்பே
அவர் கல்லூரி நடத்துவது எதற்காக? ஏழை மாணவர்கள் அதுவும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்கா மாணவர்கள் கற்பதற்காக
அவர் தொழிற்சாலை நடத்துவது எதற்காக? ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக
அவர் என்றல்ல இந்த எ.வ வேலு, பொன்முடி மற்றும் இதர திமுக தலைவர்கள் எல்லாம் கல்லூரியும் தொழிற்சாலையும் அமைத்திருப்பது பெரியாரும் அண்ணாவும் சொன்ன இந்த ஒப்பற்ற தத்துவத்தால் அன்றி வேறல்ல
மற்றபடி நாம் ஏழைகள், பெரும் ஏழைகள், அன்னை அஞ்சுகத்தைவிடவா ஒரு ஏழைத்தாய் உண்டு
கயவர்கள் சொல்வதை விடு, நீ சிந்தித்துபார் உடன்பிறப்பே
இருக்கும் கல்லூரி எல்லாம் ஊழல், பல்கலை கழகம் எல்லாம் ஊழல் பின் எப்படி நற்படிப்பு கிடைக்கும் இதற்குத்தான் நம் கட்சியினர் கல்லூரிகளாய் பள்ளிகளாய் கட்டி வைத்தோம்
மற்றபடி நாம் ஏழைகள்
அதில் கைபற்றபட்ட பணம் ஆசிரியர்கள் சம்பளபணமன்றி வேறல்ல, பின் தங்கிய மாணவருக்கான கட்சி நிதியும் அதில் உண்டு
இந்த ஆட்சியில் தொழில் இல்லை வேலைவாய்ப்பு இல்லை அதை ஒழிக்கத்தான் நம் கழக கண்மணிகள் தொழிசாலை கட்டியிருக்கின்றன
நாங்கள் தொலைகாட்சி வைத்திருக்கின்றோமேயாருக்காக?
மக்கள் உண்மையினை தெரிய வேண்டும் என்பதற்காக மற்றபடி சம்பாதிக்க அல்ல
நாங்கள் காரில் செல்வது யாருக்காக? உங்களுக்காக எங்களுக்காக அல்ல
தமிழக மக்களின் மொத்த உரிமைக்கும் நாங்கள் எப்படி மொத்த உருவமோ, அப்படியே மக்களின் சொத்துக்களும் எங்களிடம் சில இருக்கலாம்
அவை எல்லாம் உங்களுக்காக நாங்கள் பாதுகாக்கும் சொத்துக்கள்
உயிரினும் மேலான உடன்பிறப்பே
இந்த பெரியார் மண்ணிலே காவிகொடி பறக்கவிடலாம், அண்ணாவின் மண்ணிலே அரிவராசனம் பாடலாம் என கனவு கண்டுவரும் எதிரிபடைக்கு தக்க பாடம் புகட்டுவாய்
ஏழை மாணவருக்கு நிதியளிக்கவும், ஆசிரியர்களுக்கு சம்பளமிடவும், ஏழை தொழிலாளருக்கு சம்பளமிடவும் வைத்திருந்த பணத்தை இந்த பாசிச அரசு கொள்ளைபணம் என சொல்ல்லி அருமை கண்மணி துரைமுருகனை குற்றம் சாட்டுகின்றது
இந்த மோசடியினை, நம்மேல் பகைவர் சுமத்தும் களங்கத்தை உடனே துடித்தெழ எழுவாய், உழைப்பாய், வெற்றியினை கொண்டு வருவாய்
நாமெல்லாம் ஏழைகள், ஏழையினும் ஏழைகள் மக்கள் பணியார்கள் என்றும் அடிமட்ட தொண்டர்கள்
நம் பணமெல்லாம் அவர்கள் பணமே, நம் சொத்துக்கள் எல்லாம் அவர்கள் சொத்தே
நாம் அரும்பாடு பட்டு காத்த தமிழ்நாட்டை, அருமை காந்தியும் ஒப்பற்ற நேருவும், தன்னலமற்ற இந்திராவும் , ரத்தபழி ராஜிவும் சொக்கதங்கம் சோனியாவும் காத்த இந்த நாட்டையும் அழிக்க வந்திருக்கும் பாசிச படைகளின் திருட்டு வேலையினை எடுத்து சொல்வாய்
உடன்பிறப்பே இன்று துரைவீட்டுக்கு வந்த பாசிசபடையின் வேட்டை நாய் கும்பல் நாளை உன்னை கடிக்காதா? என்னை கடிக்காதா?
அதை தமிழகத்து எல்லையினை விட்டு விரட்ட வேண்டுமா இல்லையா?
மாட்டுகறி வைத்திருந்தான் என அப்பாவி இஸ்லாமியனை கொன்ற கும்பல், இலவச கல்விக்காக தம்பி துரைமுருகன் வைத்திருந்த பணத்தை கொள்ளைபணம் என சொல்லி அவனை குறிவைக்கின்றது
இந்த பேராபத்தை நாம் ஒன்றுபட்டு களையவேண்டும், தமிழகம் நிம்மதி பெறவேண்டும்
அதை உரக்க கூறி, மக்களை திரட்டி பகைமுடிப்பாய் , நம் தன்மான தளபதிக்கு வெற்றிமுடிமுடிப்பாய்
அதை இயற்கை தந்திருக்கும் சொர்க்கத்தில் இருந்து அண்ணாவும் தந்தை பெரியாரும் பார்த்து மகிழ்வோம் மகிழ்வோம் மகிழ்ந்து கொண்டே இருப்போம்..”
