அன்னை மரியாள் அலைமரித்து திரிந்தது

பெரிய வெள்ளி துயரத்தில் மாபெரும் துயரம் அன்னை மரியாள் அலைமரித்து திரிந்தது

பைபிளின் மகா உருக்கமான காட்சி அது, அதை பிரிவினை கோஷ்டிகள் சொல்லாது , இரக்கமே இல்லா கூட்டம் அது

ஆனால் மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் அழும் மிக உருக்கமான காட்சி அது

கலைஞர்களில் அதை மிக உருக்கமாக சொன்னவன் கண்ணதாசன் இப்படியாக உருக்கமாக இயேசு காவியத்தில் சொன்னான்

“தாயிருக்கப் பிள்ளைசாகும் சங்கடங்கள் கொஞ்சமோ,
சாட்டையாலே வேட்டையாடி சாவதென்றால் தாங்குமோ?
வாயிருந்தும் தேவஅன்னை மௌனமாக நின்றனள்
வாழ்வுதாழ்வை தெய்வம்பார்க்கும் என்பதை அறிந்தனள்!

அன்னை மரியாள் மடியினிலே
அன்பின் வடிவம் தேவமகன்
பொன்னை மணியைப் புதுநதியைப்
பொய்யாய்ப் போன உடல்தன்னைத்
தன்னந் தனியே வைத்தார்கள்
தாயும் மகனைப் பார்த்தபடி
கன்னங் கரைய நீர்பெருகிக்
கடவுள் பெயரைச் சொன்னாளே!

சுற்றி அழுவோர் கிடையாது
சொந்தம் என்போர் அங்கேது?
பற்றும் பாசமும் அலைமோத
பசுவும் கன்றும் ஒன்றாக
உற்றுப் பார்க்கக் கல்வாரி
ஒன்றே சாட்சி ஆனதுகாண்”

என நீண்ட பாடலாக அது வரும். படிக்கும் பொழுதே கண்கள் பனிக்கும் இதயம் விம்மும்

‘தாயிருக்கப் பிள்ளைசாகும் சங்கடங்கள் கொஞ்சமோ..” என்ற ஒரு வரியிலே அழாத மனமும் அழுதுவிடும்

இந்த காட்சியினை மகா தத்ரூபமாக சிலை வடித்தவன் மைக்கேல் ஆஞ்சலோ

அவனின் மடோனா எனும் அந்த வியாகுல மாதாவின் சிலை சிற்பங்களுக்கெல்லாம் உச்சம்

ஆம் இயேசுவுக்காக உலகிற்கு வந்த கலைஞர்கள் இவர்கள்

இயேசு காவியம் எழுதியபின் தன் கடமை முடிந்து கிளம்பினான் கண்ணதாசன், சில படங்கள் வரைந்த பின் ஆஞ்சலோவும் இல்லை

சிலுவை பாடுகளில் மாதாவின் காட்சி வரும் பொழுதெல்லாம் இந்த இரு கலைஞர்களின் படைப்பும் நிச்சயம் நினைவுக்கு வரும்

இயேசுவுக்கும் மரியாளுக்கும் அழும் நேரத்தில் கலை மனது இந்த இருவருக்காகவும் அழுகின்றது

அவர்கள் நிச்சயம் அந்த அழுகைக்கு தகுதியானவர்கள்