அந்த வீணை போன்ற குரல்

மிக மிக திறமையானவர்கள், ரசிகர்களை கட்டி போட்ட கலைஞர்களில் பெரும்பான்மையானோர் நெடுநாள் இருப்பதில்லை

திறமையினையும் ரசிக கூட்டத்தையும் அபூர்வ வரங்களையும் கொடுத்த இறைவன் சிலருக்கு ஆயுளை கொடுப்பதில்லை

மிக சிறு வயதிலே பாடவந்து 37 வயதிலே மரித்தும் போன சொர்னலாதாவும் அதில் ஒருவர்

மிக சிறந்த பாடகி, அதனைவிட சிறந்தது அந்த வீணை போன்ற குரல்

90களில் இருந்து 2008 வரை அவரின் காலம் இருந்தது, இளையராஜாவின் உச்ச காலம் அப்படியே ரகுமானின் தொடக்க காலத்தில் அற்புதமான பாடல்களை கொடுத்தவர் அவர்

தேனை வெண்கல குழாயில் மெதுவாக ஊற்றியது போன்ற குரல் அது, ஒரு வித இனிமையும் உருக்கமும் ஏக்கமும் கலந்த குரல் அது.

தமிழரை கட்டிபோட்ட பாடல்களை கொடுத்த குரல் அது, தேசிய விருதுகளும் பெற்று கொடுத்தது

மனதை உருக்கிய அந்த குரலுக்கு சொந்தகாரரான அற்புத பாடகி ஸ்வர்ன லதாவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

ஆண்டுகள் ஓடினாலும் அக்குரல் காற்றில் ஒலித்துகொண்டே இருக்கும்

அவரின் பிறந்தநாளில் ஆழ்ந்த அஞ்சலிகள்

“போறாளே பொன்னுத்தாயி பொலபொலவென கண்ணீர் விட்டு…” என்ற அற்புதமான பாடலை பாடியவர் அவர், அதற்கு தேசிய விருது கிடைத்தது

ஆனால் நம்மை அப்படி கண்ணீர் சிந்தவைத்துவிட்டு அவர் சென்றுவிட்டது என்ன நியாயம்?

கடவுளிடம் விருதுபெற சென்றிருக்கலாம்

இந்த ஆண்டவனுக்கு அழகான விஷயங்களை மானிடருக்கு கொடுத்துவிட்டு அதை பறித்து கொள்வதிலும் அதில் மானிடர் துடிப்பதை பார்ப்பதிலும் அப்படி ஒரு ஆனந்தம்

பாரதி, பட்டுகோட்டை முதல் பலரை அப்படி பறித்துவிட்டவிட்ட அக்கொடியவன் இந்த குயிலையும் பறித்துவிட்டான்

அவரைத்தான் அவனால் பறிக்க முடிந்ததே அன்றி, அவரின் பாடல்களை அவனால் தொட முடிந்ததா?

முடியாது, காலமுள்ள காலமளவும் அது நிற்கும். அவ்வகையில் ஆண்டவனை வென்றிருக்கின்றாள் சுவர்ணலதா.

வயதாகி குரல்வற்றி முகம் சுருங்கி சாவதை விட அவள் எக்காலமும் இளமையான குரலோடும் முகத்தோடும் மக்களிடம் நின்றுவிட அந்த பரம்பொருளுக்கு விருப்பமோ என்னமோ..