ஏ பரிதாபத்துகுரிய லங்கா புரியே

ஏ பரிதாபத்துகுரிய லங்கா புரியே

கோழிகுஞ்சு பருந்து கூட்டத்துக்கு அஞ்சி அலறி பதுங்குவதை போல நீ படபடபடப்புடன் பதறுகின்றாய்.

உலகின் கைவிடபட்ட கடைசி நோயாளி கூட உன்னை விட பாக்கியாவானே..

எப்படி இருந்த லங்காபுரி நீ?

ராவணன் உன்னை உலகின் மிகசிறந்த நாடாக வைத்திருந்தான்

அசோகர் காலத்தில் நீ தங்க விகாரை எல்லாம் வைத்திருந்தாய், அதன் தொடர்ச்சியே சோழனின் படையெடுப்பு

18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு நிகரான தேசமாய் இருந்தாய் , உன் கல்வி என்ன? செல்வம் என்ன?

சிங்கப்பூருக்கும் ஹாங்காங்குக்கும் உன் கொழும்பே தாய்

அரேபியாவின் எண்ணெய் காணபெறா காலங்களில் எத்தனையாயிரம் தெற்காசிய‌ மக்களுக்கு படியளந்தாய் நீ?

மூவினங்களும் எப்படி ஒற்றுமையாக வாழலாம் என உலகிற்கே வழிகாட்டியவள் நீ

ஆம் ஒரு காலத்தில் உன்னை உலகமே போற்றியது, உன் ஒற்றுமையும் அமைதியும் சகோதரத்துவமும் உலகிற்கே வழிகாட்டியது, அப்படி எல்லாம் ஒரு காலம் இருந்தது.

ஆனாலும் உன் விதி கொடுமையானது

உலக வரலாற்றில் உன்னைப்போல் எரிந்த ஒரு தேசமில்லை

நீ ராவணன் காலத்தில் எரிந்தாய், சோழன் காலத்திலும் எரிந்தாய் இன்னும் என்னென்ன காலமெல்லாமோ எரிந்தாய்

உலக நாடுகள் உன்னோடு கரங்களை குலுக்கின, அவற்றில் இருந்த ரத்த கறையினை நீ அறியவில்லை, அக்கரங்கள் ரத்தத்தின் கறையினை உன் நாட்டிலும் பூசிவிட்டன‌

ஆசியாவின் ஹாங்காங்க் சிங்கப்பூர் அளவுக்கு வளரும் தகுதி கொண்ட நீ, உலக அரசியல் விளையாட்டில் பரிதாபத்திற்குரிய நாடாகிவிட்டாய்

அழகான பெண்ணுக்கு பாதுகாப்பாய் சிலர் இருக்க வேண்டும் என்பது மானிட விதி, அழகான தீவுக்கும் சிலர் பாதுகாவலாய் இருக்க வேண்டும் என்பதும் உலக அரசியல் விதி

ஆனால் பரிதாபத்திற்குரிய உன் அமைவிடத்தில் இந்தியா எனும் நாட்டை தவிர யாருமில்லை

அவனும் அயோக்கியத்தின் உச்சம், உன் வீட்டில் தீவைத்தானே தவிர அதை அணைக்கும் வழி அவனுக்கும் தெரியவில்லை

அந்த பிரபாகரனை வளர்த்துவிட்டானே, ஆனால் 1991க்கு பின் அவனை கொல்ல இந்தியாவுக்கு எவ்வளவு நேரமாகியிருக்கும்? ஆனால் அந்த பாதக இந்தியாவும் அதை செய்யவில்லை, நீ எரிவதில் அவனுக்கொரு ஆனந்தம்

ஆனால் 2009ல் நீ பிரபாகரனை சிலர் துணையுடன் முடித்தபொழுது அப்பழி எல்லாம் கலைஞர் கருணாநிதி என்பவர் மேல் விழுந்தது

அரசியல் புரியாதோர் அவரை திட்டிகொண்டிருக்கின்றனர்

10 வருடம் அமைதியாக இருந்த நீ மறுபடி எரிகின்றாய், உன் வலியினை புரிந்து கொள்ளமுடிகின்றது

ஆரோக்கியமானவனுக்கு நோயாளியின் வலி தெரியாது, நோயாளியின் வலி நோயாளிக்கு தெரியும், அவ்வகையில் உன் வலி எமக்கு புரிகின்றது

ஏன் அனாதை லங்காபுரியே..

உன்னை அப்படித்தான் அழைக்கபட வேண்டும், உனக்கு ஆறுதலும் இல்லை பலமுமில்லை

உலக சகுனிகள் பகடையினை உருட்ட உருட்ட உன் நிலை மாறிகொண்டே இருக்கின்றது

பாரதத்தின் பாஞ்சாலி போல அழுது துடிக்கின்றாய், ஆனால் உலக நாடுகளுக்கு அதைவிட முக்கியமான வேலை இருப்பதால் உன்னை காக்கவும் ஆளில்லை

ஆடுவது கவுரவர்கள் என்றால் காப்பாற்ற ஆளுண்டு, ஆனால் அங்கு உன்னை துகிலுரிபவர்கள் யாரென்றே தெரியாதபொழுது யாரை அடித்து உன்னை காக்க?

சிங்கங்கள் நடுவில் மானாக தவிகின்றாய், அரசியல்வாதிகளிடம் சிக்கிவிட்ட தமிழக மக்கள் போல கதறி அழுகின்றாய்

ஏ அழகிய லங்காபுரியே

உன் தேயிலை எல்லாம் ரத்தம் தெளிக்கபட்டிருக்கின்றது, உன் அழகிய கடற்கரை எல்லாம் மானிட அழுகையின் கூக்குரல் கடல் அலையினை மிஞ்சி ஓலமிடுகின்றன‌

உன் ஆறுகள் ரத்தத்தால் ஓடுகின்றன, உன் அழகான யானை கூட்டம் கூட அழுதுகொண்டிருக்கின்றது

ஆசியாவின் மிக அழகான பெருமையே, வளப்பபமும் செழுமையும் அழகும் கொண்ட அற்புதமான லங்கா புரியே

உன்னை எண்ணும்பொழுதே மனம் கனக்கின்றது

உலகின் உன் வரலாறு போல ரத்தத்தால் எழுதபட்ட வரலாறு எதுவுமில்லை

எந்த வெயிலிலும் அது வற்றபோவதுமில்லை, எந்த பனியிலும் அது உறைய போவதுமில்லை

உன் மண்ணில் விழுந்த ரத்தம் சதிகாரர்களின் எலும்புகு பதிலாக எலும்பையும், சதைக்கு பதிலாக சதையினையும் வெட்டி போடும் காலம் வந்தே தீரும்

தருமத்தின் வெற்றியினை உலகம் பார்த்தே தீரும்

இவ்வுலகில் சென்றது திரும்பும், மீண்டது மாளும் மாண்டது மீளும்

அவ்வகையில் ஒருநாளில் நீயும் உன் பொற்காலத்தை மீட்டே தீருவாய்

காலங்கள் ஆகலாம், ஆயினும் கடைசிவெற்றி உன்னுடையதே