அதற்கு பிரார்த்திப்போம்
அந்தபெண் அப்படி ஒரு பெரும் தவறும் செய்யவில்லை, தன் பெயருக்கோ குடும்பத்துக்கோ களங்கம் வரும் எந்த தீச்செயலையும் செய்யவுமில்லை
அவளுக்கு அந்த டிக்டாக் பிடித்திருந்தது, அதில் அவள் ஏதோ சிறிய மகிழ்வினை தேடிகொண்டாள், அதில் தவறொன்றும் இருக்க முடியாது
டிக்டாக்கில் பெண்கள் வரகூடாது என எந்த மதம் சொன்னது, சுதந்திரமான இஸ்லாமிய நாட்டு பெண்கள் துருக்கி போன்ற மார்டன் இஸ்லாமிய நாட்டுபெண்கள் வரத்தான் செய்கின்றார்கள்
இந்த ஒரு சாதாரண விஷயத்துக்காக ஒரு கும்பலே கூடி ஒரு பெண்ணை அவளின் கணவனிடம் இருந்து பிரிப்பது அவள் வாழ்வினை நாசமாக்குவது எல்லாம் கடவுளுக்கே அடுக்கா அதர்மம்
ஒரு பெண் மாபெரும் தவறே செய்திருந்தாலும் “பொய்மையும் வாய்மையிடத்து” என சொல்லி ஒரு பெண்ணை வாழவைக்கும் சமூகம் இது
அந்த ஆயிரம்காலத்து பயிர் நிலைக்க ஆயிரம் பொய்களை சொல்லலாம் அது தவறே அல்ல என போதித்த பூமி இது
ஓரு பெண்ணின் தாலி நிலைக்கவும் அவள் வாழ்வாங்கு வாழவும் எந்த பொய்யினையும் சொல்லலாம் அது தவறே இல்லை என்பதுதான் இத்தமிழகம் கண்ட தர்மம்
ஆனால் மதத்தின் பெயரால் அதை சிதைத்திருக்கின்றார்கள் அந்த பாவிகள்
மதத்தின் பெயரால் ஒரு அழகிய குருவிகூட்டை கலைத்துவிடும் கொடிய பாவத்தை செய்திருக்கின்றார்கள் கொடியவர்கள்
உங்கள் மேல் தவறே இல்லாதவன் முதல் கல்லை எறியட்டும் என சொன்ன இயேசு போல இவர்களிடம் கேட்டால் ஒரு பயலும் இருக்கமாட்டான்
ஆனால் அந்த அபலைக்கு அவர்கள் எல்லோரும் நீதிபதிகளாகிவிட்டனர்
எனினும் ஒரு விஷயம் உறுத்துகின்றது
அப்பெண்ணின் கணவனை நோக்கி பார்க்கலாம், ஊர் ஆயிரம் சொல்லட்டும், உலகம் ஏதும் பேசலாம்..
அவன் எப்படி நம்பலாம்?
அவள் அவனை நம்பி வந்தவள், அவனுக்காக தன் தாய் தந்தை குடும்பம் என எல்லாவற்றையும் துறந்து வந்தவள்
அவளை அவன் எவ்வளவு நம்பியிருக்க வேண்டும்? எப்படி எல்லாம் பாதுகாத்திருக்க வேண்டும்?
அவளுக்கு அவனல்லவா பாதுகாப்பு? முதல் பாதுகாப்பு அவன் தானே?
அப்பெண்ணுக்கு இப்பொழுது ஊர் சொன்னதா வலிக்கும்? அந்த கணவனும் நம்பிவிட்டதல்லவா வலிக்கும்?
ஊர் சொல்வதை நம்பிய கணவன் தான் சொல்லியதை நம்பவில்லை என்ற ஆதங்கம் அல்லவா அவளை கொல்லும்?
தன்னையே அவனிடம் அவனை மட்டும் நம்பியே ஒப்படைத்த ஒரு பெண்ணை இப்படி ஊருக்காக விரட்டிவிடுதல் எவ்வகையிலும் சரியே அல்ல
அந்த பெண்ணின் மனநிலையில் இருந்து நினைத்து பாருங்கள், நெஞ்சு தாங்கா சோகம் உங்களை தொற்றும்
அப்பெண் யாரென தெரியாது, எங்கிருக்கின்றார் என தெரியாது
ஆனால் அந்த சகோதரிக்காக நாம் அழுகின்றோம், அவளுக்கு ஆறுதல் சொல்கின்றோம்
தனக்காக வாழும் மனைவியினை யாரோ சிலர் சொற்கெட்டு பிரிந்த அந்த கயவன் அல கய்தா ஐ.எஸ் தீவிரவாதியினை விட கொடியவன்
அவனை அந்த தெய்வம் ஒரு காலமும் மன்னிக்காது
மாபெரும் தவறு செய்துவிட்ட அவன் அதற்கு பிராயசித்தமாக அவளை தேடி வந்து ஏற்றுகொள்ளட்டும்
அதற்கு மதமும் அந்த கூட்டமும் தயாராக இருக்குமென்றால் அவன் தூக்கி எரியட்டும்
அவள் அவனுக்காக காத்தே இருக்கின்றாள், நிச்சயம் இந்த உலகில் அவனுக்கு கொடுக்கபட்ட கடமை அவளை பாதுகாத்து அவளோடு வாழ்வது
அதற்கு தயாரில்லாமல் மதம்தான் பெரிதென செல்வானானால் நிச்சயம் மாபெரும் நரகம் அவனுக்கான இடத்தை இப்பொழுதே குறித்து வைத்திருக்கும்
கணவனை தவிர யார்முகமும் அறியாத அந்த அபலை வாழ்வில் மறுபடியும் வசந்தம் வரட்டும், அவன் வந்த் அவளை ஏற்றுகொள்ளட்டும்
அதற்கு பிரார்த்திப்போம்
ஒரு பெண்ணை நிம்மதியாக வாழவைப்பது புண்ணியங்களில் எல்லாம் பெரும் புண்ணியமானது
அந்த நல்ல தெய்வம் அவளுக்கு இரங்கட்டும், அவள் வாழ்வில் அதிசயம் நடந்து அவள் வாழட்டும்
அக்கணவன் கொஞ்சமாவது சிந்தித்து மதத்தை விட மனைவி பெரிதென திரும்பி வரட்டும், அந்த அல்லாஹூம் அதைத்தான் விரும்புவான்.