வயது ஏற ஏற
வயது ஏற ஏற பல கவலைகள் அதிகரிக்கின்றன, அதில் உடல்நலம் என்பது ஒருவகை என்றால் சில முதியோர்களை பார்க்கும் பொழுது இன்னும் கவலை அதிகரிக்கின்றது
உடல் நோய்களை விடுங்கள், அதைவிட முக்கியம் மனநலம் குறிப்பாக ஞாபக சக்தி மங்குவதால் வரும் பாதிப்பு
பல மனிதர்களை பார்க்கின்றேன் இளம் காலத்தில் மிடுக்கான காவல் அதிகாரிகளாகவும், பேராசியர்களாகவும் வலம் வந்தவர்கள் அவர்கள்
ஒரு நூலகம் அளவுக்கு நினைவு சக்தி கொண்டிருந்தவர்கள், எங்கிருக்கின்றோம் என தெரியாத அளவு ஒடுங்கி அமரும் காட்சிகள் எல்லாம் மனதை உடைத்தெறிகின்றன
சர்வ சக்திபடைத்தவர்ளாக அவர்கள் வந்த காட்சியும், காலத்தால் அடங்கி ஒடுங்கி தன்னையே மறந்து அலைந்து திரிந்து அலையும் காட்சியும் மனதை கலங்க வைக்கின்றன
85 வயதில் அவர்கள் சகலத்தையும் மறந்து ஒருவித பொம்மையாக திரியும் பொழுது காலம் எவ்வளவு கொடுமையானது என்பதை அறியமுடிகின்றது
சொன்னதை அடுத்த நொடியே மறந்துபோகும் தமிழக அரசியல்வாதிகளுக்கே உரித்தான மறதி அவர்களுக்கு வாழ்க்கையாகிவிடுகின்றது பாவம்.
சித்தார்த்தன் ஏன் மூப்பினை கண்டு, மூப்பினால் பாதிக்கட்டவர்களை கண்டு அப்படி அஞ்சி காட்டுக்குள் ஓடினான் என்பது புரிகின்றது
ஞானிகளும் மேதைகளும் மன்னாதி மன்னர்களும் ஏன் வதைபட்டு, நினைவிழந்து எல்லோருக்கும் பாரமாகி புகழின் ஒளியில் மங்கி ஒடுங்கி சாவதற்கு ஏன் அஞ்சினார்கள் என்பது தெரிகின்றது
முதுமையும் அது கொடுக்கும் கொடுமையும் அப்படியானது என்பது காலம் செல்ல செல்ல விளங்குகின்றது
நல்ல மரணத்துக்காக ஒவ்வொரு மதமும் ஏன் பிரார்த்திக்க சொல்கின்றது என்பதும் புரிகின்றது
இளமையிலே செத்துவிட்ட எத்தனையோ மேதைகள் பாக்கியவான்கள், அலெக்ஸாண்டர் போன்ற மாவீரர்களும் கொடுத்து வைத்தவர்கள்
நீண்ட ஆயுளும் ஒருவகை சாபமே
மிக உயர்ந்துவிட்டத தென்னை மரமும் பனைமரமும் தோட்டகாரனுக்கு கஷ்டம் கொடுப்பதை போல நீண்ட ஆயுள் கொண்டோர் குடும்பத்திற்கே பாரமாய் தெரிகின்றனர்
தார் வெட்டபட்ட வாழை ஒதுக்கபட்டு கிடப்பதை போல் அவர்கள் ஒதுங்கி கிடக்கின்றார்கள்
நற்பிள்ளைகளோ இல்லை திரண்ட சொத்தோ எது இருந்தாலும் கடைசிவரை நோயில் விழாமலும் ஞாபக சக்தி குறையாமல் இருப்பதே ஒருவனுக்கு மகா முக்கியம்
மரணத்தை யாரும் தவிர்க்க முடியாது, ஒரு நாளில் யாராயினும் சந்தித்தே தீரவேண்டும், ஆனால் இம்மாதிரி சிக்கலின்றி சந்திப்பது ஒரு வரம்
ஏராளமான முதியவர்களை பார்க்க பார்க்க ஞானம் வருகின்றது
ஒருமனிதன் எவ்வளவு ஆசீர்வதிக்கட்டவன் என உணர முதலில் உடல் நலமாக இருப்பவன் மருத்துவமனைக்கு சென்று அடுத்தவர்படும் பாடுகளை காணவேண்டும்
கோர்ட்டில் நிலுவையில் நிற்கும் வழக்குகளையும் மஞ்சள் கடிதாசி கொடுத்தவனையும் பார்த்தால் இன்னும் ஞானம் வரும்
அப்படியே காலத்தால் ஒடுங்கி கிடக்கும் மனிதர்களை அடிக்கடி காணுதலும் ஒருவனுக்கு நலம், பலத்த ஞானம் அவனுக்கு கிட்டும்
இப்போதைய சமூகம் ஏகபட்ட முதியோர் இல்லங்களையும் இன்னும் பல வாய்ப்புகளையும் கொடுத்திருப்பதால் ஒருவன் ஞானம் பெற நிரம்ப வாய்ப்பு இருக்கின்றது.
நமக்கும் ஒருநாளில் வயதாகும் என்னவெல்லாம் ஆகுமோ என நினைத்தாலே மனம் கலங்கத்தான் செய்கின்றது
எதுவரினும் தாங்கலாம், எவ்வளவும் எதிர்கொள்ளலாம்
ஆனால் நினைவு மங்கி அல்லது மறைந்து தலைவி குஷ்புவின் படத்தை பார்த்து “யார் இது? ” என கேட்கும் கொடுங்காலம் வந்தால் என்னாகும்?
நினைத்து பார்க்கவே நெஞ்சு நடுங்குகின்றது
அப்படி ஒரு காலம் வந்துவிடவே கூடாது , தலைவி நினைவுடனே சாகும் பெரும் வரம் வேண்டும் என சங்கம் அந்த பரம் பொருளிடம் பிரார்தித்து கொண்டே இருக்கின்றது