சாதிகொடுமையும் அது ஏற்படுத்தும் கொடூர வலியும்
நேற்று நடைபெற்ற ஒரு சம்பவம் தமிழக சாதிகொடுமையினையும் அது ஏற்படுத்தும் கொடூர வலியினையும் படம்பிடித்து காட்டியிருக்கின்றது
அரியலூர் பக்கம் அந்த தாழ்த்தபட்ட இளைஞன் பாலிடெக்னிக் வரை படித்திருக்கின்றான், படிக்கும் பொழுதே மேல் சாதிபெண் ஒருத்தியுடன் காதல் மலர்ந்திருக்கின்றது
காதலுக்கு சாதி, மதம், இனம், கண், அறிவு என எதுவுமே தெரியாது அல்லவா?, இனம்புரியாத ஒரு மயக்கமன்றி அது வேறேன்ன?
இது மானிட விதி, அவர்களுக்குள் விரும்பிவிட்டார்கள் கனவில் மிதந்து காலங்களை மீறி வாழ துடித்திருக்கின்றன அந்த இளம் மான்குட்டிகள்
அவர்களை பொருத்தவரை அவர்கள் காதல் மான்கள், ஒரே மீன்கள் ஆனால் கொடுமையான சாதி சமூகத்துக்கு அப்படியா?
அவன் மான், நீ சிங்கம். சிங்கம் எப்படி மானுடன் குடும்பம் நடத்தமுடியும் என மிரட்டிய சொந்தங்கள் அப்பெண்ணை பிடித்து இன்னொருவனுக்கு திருமணம் செய்துவைத்துவிட்டது
அவள் என்ன ஆடா மாடா? திடீரென கழுத்தில் கயிறை பூட்டி இன்னொருவன் கையில் பிடித்து கொடுத்தவுடன் பின்னால் செல்ல
அதுவும் மாடுகள் கூட விற்றுவிட்டபின் பழைய இடத்திற்கே ஓடிவரும் பாசமுள்ள பூமியில் அவள் மனம் ஏங்காதா?
அவள் அலறி துடித்திருக்கின்றாள், அவனை மறக்க முடியாமல் தவித்திருக்கின்றாள்
அவள் மனம் அவன் இன்றி வாழமுடியாது, அவனே தன் முழு மகிழ்சியான வாழ்வுக்கு ஆதாரம் என அவள் கதறி நிற்கும் பொழுது யார் என்ன செய்யமுடியும்?
கடல் மீன்கள் ஆற்றில் வாழா, ஆற்றில் வாழும் சில மீன்கள் கடலில் வாழா
நிலத்தில் வாழ்பவை நீரில் வாழா, மலையில் வாழும் சில பயிர்கள் பொட்டலில் வளராது
இரண்டும் நீர்தானே, இரண்டும் மண்தானே என்றெல்லாம் சொல்லமுடியாது, இயற்கையின் பிணைப்பு வேறுமாதிரியானது
அப்படி அவள் மனமும் அவனையே தேடி ஓடிவந்துவிட்டாள்
உண்மையான காதல் இருந்ததால், அவளின் மனமும் மகிழ்வுமே அவனுக்கு முழு மகிழ்ச்சி என்பதால் புதுவெள்ளத்தை ஏற்கும் குளம் போல அந்த காதலனும் அவளை ஏற்றுகொண்டான்
ஆனால் சாதி சமூகம் விடுமா?
இருவரும் சந்தித்தி அழுதிருக்கின்றார்கள், ஆனால் அடுத்து என்ன செய்வது என்பதுதான் அவர்களுக்கு தெரியவில்லை
நிச்சயம் அவர்களின் காதல் கடல்தான் ஆனால் சாதி எனும் கரையில் அலையாய் அடிக்கமுடியுமே தவிர தாண்டமுடியாது
அந்த சிங்கங்கள் இந்த மான்களை கிழித்துபோடுமே தவிர வாழவிடாது, அதுவும் அவள் மணமாகிவிட்டு திரும்பிய பின் கூடுதல் ஆபத்து
அவர்களால் வாழவும் முடியாது, அதே நேரம் பிரியவும் முடியாது
காதலித்துவிட்டு பிரிந்து வாழ்வது என்பது நடைபிணத்துக்கு சமானம் என்பதால் சாக முடிவெடுத்திருக்கின்றார்கள்
அந்த சாவு கொடுமையானது, அதுவும் வாழதுடிக்கும் இருவர் சாக முடிவெடுத்த தருணம் எப்படி இருந்திருக்கும்
நிச்சயம் அவன் வாழவேண்டும் என அவளும், அவளாவது வாழவேண்டும் என அவனும் விரும்பியிருக்கலாம் ஆனால் இனி முடியாது என்றாகிவிட்டபின் என்ன செய்ய?
சாக முடிவெடுத்து விஷ ஊசி செலுத்தியிருக்கின்றார்கள், அவள் மயங்கி சரிவதை அவன் கண்டிருக்கின்றான்
காதலி மயங்கி சாவதை கண்டபின் எந்த உண்மைகாதலனால் தாங்க முடியும்?
ஆம் அவனின் உலகமே முடிந்துபோன பின்பு அவனும் தூக்கில் தொங்கி செத்துவிட்டான்
ஆனால் அந்த அபலைபெண்ணின் விதி படுமோசமானது, அவளை வாழவிடாத விதி அவளை சாகவும் விடவில்லை
விஷ மருந்து என மயக்கமருந்தை வாங்கி ஊசியேற்றியிருக்கின்றார்கள் இருவரும், அவள் மயங்கி இருக்கின்றாள் இவனுக்கு மயக்கம் வரவில்லை
ஆனால் அவள் இறந்துவிட்டதாக எண்ணி அவன் செத்தே விட்டான், அவளோ சிகிச்சைக்கு பின் பிழைத்து கொண்டாள்
அவனுக்கு இறுதிசடங்கு நடக்கின்றது, அப்பெண் மருத்துவமனையில் இருகின்றாள்
அவளுக்கு இன்னும் உண்மை தெரிந்ததா இல்லையா என தெரியவில்லை, ஆண்டிமடம் ஜெயங்கொண்டம் பகுதியில் பலத்த போலீஸ் காவல் போடபட்டிருக்கின்றது
இந்த செய்தி படித்ததில் இருந்து மனம் நொடிந்து கிடக்கின்றது, இமயமலையே மனம் மேல் அமர்ந்தது போல் மனம் கனக்கின்றது
என்னதான் காதல் ஹார்மோன் விளையாட்டு என்றாலும் அதில் விதிபலனும் முன் ஜென்ம தொடர்ச்சியோ நிச்சயம் உண்டு
ஏன் இருவரும் அதே பகுதியில் பிறக்க வேண்டும்? ஏன் இருவர் உள்ளமும் இணைய வேண்டும்?
கோடிகணக்கான மாந்தர் உள்ள உலகில் இவர்கள் இருவரும் ஏன் பிணைய வேண்டும்?
அட கண்கள் சந்தித்தன சரி, ஆனால் இவள் உனக்கானவன் என்றும் அவளை விட்டுவிடாதே என இவன் மனமும் சொல்லிகொண்டே இருந்தது ஏன்?
இவர்களை காலம் ஏன் சந்திக்க வைக்க வேண்டும்? அதே காலம் ஏன் இவர்களை பிரிக்க வேண்டும்?
இப்படி அவனின் விதி அவன் கண்களிலும் அவள் முகத்திலும் இருந்தது என சொன்னாலும் மகா முக்கியமான கொடுமை இந்த சாதி
காதல் என்பது சுகமானது, சுவாரஸ்யமானது, மனதால் உணர்வால் அனுபவித்து கொண்டாடும் ஒரு விஷயம்
கடவுள் போல அதுவும் அனுபவத்தால் அன்றி விளக்கமுடியாதது
அந்த அற்புதமான காதலை கொண்டாட தமிழகத்தில் சாதி மதம் என ஏக கொடுமைகள்
மானிடனாக பிறந்தாலும் தமிழகத்தில் பிறக்க கூடாது, அப்படி பிறந்தாலும் காதலிக்கவே கூடாது
காதலை துறந்து இன்னும் பல விஷயங்களை சாதி மதத்துக்காக துறந்து மரம் போல் மனத்துடன் வாழ ஒரு சபிக்கபட்ட வாழ்வு அவனுக்கு நிர்பந்திக்கபட்டிருக்கின்றது
இக்கொடுமைகள் எல்லாம் ஓர்நாள் நிச்சயம் களையபடும்
சிகிச்சை பெறும் அந்த பெண்ணுக்கு என்ன ஆறுதல் சொல்ல என தெரியவில்லை
அவள் முதலில் அழட்டும், கதறி அழட்டும் இந்த பாவபட்ட பூமியில் பிறந்ததற்காக அழட்டும், அவளோடு நாமும் அழுவோம்
காலம் எல்லா காயத்தையும் ஆற்றும் அப்படி அவளுக்கும் காயங்களை ஆற்றட்டும்
ரோமியோ ஜூலியட் கதை என ஷேக்ஸ்பியர் என்றோ கற்பனையாய் எழுதிய கதை ஒன்று கண்முன் நடக்கும்பொழுது மனம் பலமுறை வெடித்து வெடித்து அழுகின்றது