குடிநீருக்காவது வருங்கால தலைமுறைக்கு ஏதாவது செய்ய முயற்சிப்போம்
சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடாம், வரும் செய்திகளை எல்லாம் அப்படியே நம்பமுடியாது, விசாரித்து பார்ப்போம் என்றால் நிலமை அப்படித்தான் கொடுமையாக இருக்கின்றது
மகா ஆச்சரியமான விஷயம் அது
ஒரு வருடம் மழை பொய்ததற்கே இவ்வளவு பெரும் நெருக்கடி என்றால் அது பெரும் அபாயத்தினை அறிவிக்கின்றது
காரணம் விவசாயம் இல்லை, அது அழிந்துகிடக்கின்றது. இன்றைய தேதியில் மிக விரைவாக இந்த நீர் நெருக்கடி வருகிறதென்றால் சில் விஷயங்கள்தான்
முதலில் நீர் நிலை பாதுகாப்பு அறவே இல்லை, எல்லாம் முள் நிரம்பி கால் வைக்க முடியா அளவு கெட்டுபோயிற்று, கரைகள் பலமாக இல்லை, மடைகள் இல்லை நிறைய இப்படித்தான்
சென்னை குடிநீர் வழங்கும் ஆதாரம் என எதனை சொல்வீர்கள்? அவை எல்லாம் வெள்ளையன் காலத்திலும் காங்கிரஸ் காலத்திலும் உருவாக்கபட்டவை
இன்றைய காலகட்டத்தின் மக்கள் தொகைகு ஈடுகட்டும் வகையில் பெரும் அணைகட்டோ அல்லது நிரந்தர நீர் ஆதாரமோ இல்லை
செனைர் வெறும் 30 வருடங்களில் மிக வெடித்து பெரிதாகிவிட்ட ஊர். ஆனால் அதன் நீர் தேவைகள் அதே வேகத்தில் வளரவில்லை
இன்னொன்று வியாபாரமாகிவிட்ட நீர், கவனியுங்கள் காணுமிடமெல்லாம் போர்வெல் அமைத்தாகிவிட்டது, யாரும் எங்கும் தோண்டலாம், தோண்டி விற்கலாம் அதற்கு வரைமுறையே இல்லை.
அது உறிஞ்சபடுகின்றது, விற்கபடுகின்றது வீட்டிற்கு 4 கேன் தினமும் கொடுக்கபடுகின்றதென்றால் அது என்ன தொழிற்சாலை தயாரிப்பா?
சில பள்ளிகளில் பெரும் நீச்சல்குளம் அமைத்திருக்கின்றார்கள், அவைகளுக்கு தேவைபடும் நீரின் அளவென்ன? அவை என்ன கங்கை நதி கிளையில் அமைந்திருக்கின்றதா?
எல்லாம் நிலத்தடி நீர்
வியாபாரமாகிவிட்ட நீரே இப்பெரும் பிரச்சினைக்கு மறைமுக காரணம்.
நிலத்தடி நீரினை நம்பி இருப்பதை விட்டுவிட்டு பெரும் நீராதாரங்களை அமைக்காமல் இனி சென்னையில் குடிநீர் பிரச்சினையினை தீர்ப்பது சாத்தியமில்லை
பூண்டி அணைபோல 5 இருந்தாலும் தாங்காத அளவு சென்னை மக்கள் தொகை பெருத்துவிட்டது. இதற்கு சென்னைமட்டுமல்ல அதனை சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் பயன்பெறும் வண்ணம் பெரும் திட்டம் தீட்டபடவேண்டும்
எப்படி தீட்டுவது?
தன் சுயநலத்தினை விட பொதுவான நலனை முதலில் கருதாமல் தீர்வு கிட்டாது, காரணாம் நீர் பிரச்சினையா? சரி நான் போர்வெல் அமைத்து என்னை காத்துகொள்வேன் அல்லது விலைக்கு நீர்வாங்கி காப்பேன், யார் எப்படி போனால் என்ன? என்பதுதான் இன்றைய சீர்கேட்டின் முதல் அடிப்படை
நீர் நிலைகளை மீட்டெடுத்து, மீட்டதை காத்து, முட்களை அகற்றி அவற்றை பாதுகாத்த்தாலே பாதி பிரச்சினைகள் தீரும்
அன்றைய காலங்களில் ஒருவருடம் பெய்யும் மழை 6 வருடம் மக்களை காத்தது, அந்த அளவு குளங்கள் பேணிவைக்கபட்டிருந்தன, மினரல் வாட்டர், போர்வெல் இம்சைகள் இல்லாததால் நீர் தட்டுபாடு இன்றி கிடைத்தது
அன்று பாலாற்றில் கைககளால் மணலை விலக்கினாலே நீர் சுரந்தது, இன்று மணலும் இல்லை நீரும் இல்லை
அதாவது நம்மை நாமே நிறைய கெடுத்துகொண்டோம்
அந்த மணல் திருடர்களும், , மினரல் வாட்டர் வியாபாரிகளும் இருக்கும் ஊரில் இருந்துகொண்டுதான் “நீர் இல்லை, குடிக்க நீர் இல்லை, ஏய் உள்ளாட்சியே.., ஏய் தமிழக அரசே.., ஏய் மத்திய அரசே.. ஏய்ய் என பாய்ந்துகொண்டிருக்கின்றோம்”
தவறு நம்மிடையே நிறைய உண்டு
மழை தாமதமானதும் இன்னொரு காரணம் , மாறிவிட்ட பருவகாலங்களில் அதனை கணிப்பதும் சிரமம்
நிச்சயம் சென்னை அனுதினமும் மழை பெய்யும் பகுதி அல்ல, கிடைக்கும் நீரை சேர்த்துவைப்பதை பொறுத்துத்தான் வாழ முடியும்
அரசுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் சில பொறுப்புக்கள் உண்டு
சென்னையில் விசாரியுங்கள், அது 10 கோடி, இந்த வீடு 20 கோடி, இது 50 லட்சம் என சொத்து மதிப்பாய் சொல்வார்கள்
சரி இந்த சொத்துக்களை எல்லாம் நாம் சேர்த்துவைப்பது யாருக்காக? நிச்சயம் வருங்கால சந்ததிக்காக
அப்படி சேர்த்து வைத்துவிட்டு , குடிக்க நீர் கூட இல்லாத வருங்காலத்தையா அவர்களுக்கு விட்டுசெல்ல போகின்றோம்? அந்த சொத்துக்களால் நீரில்லா ஊரில் என்ன பயன்?
வாழமுடியா வருங்கால ஊரிலா அவர்களுக்கு சொத்து சேர்த்து வைக்கின்றோம்?
இது அவர்களுக்கு நம்மை அறியாமல் நாம் செய்யும் துரோகம், சொத்துகளை சேர்த்துவைத்துவிட்டு நம்மை அறியாமல் ஒரு பலைவவனத்தினை உருவாக்குகின்றோம், அவைகள் எப்படி வாழும்?
பொதுநலநோக்கோடு பெரும் தீர்வுகாண வேண்டிய நேரமிது.
மிக சுயநலமாக இப்பொழுது காலி குடங்களோடு வீதிக்கு வருவோம், உரிமை கேட்போம்
நாளையே மழை வரட்டும், கதவுகளை அடைத்துவிட்டு வீட்டிற்குள் அமர்ந்துவிடுவோம், வீதிக்கும் நமக்குமான தொடர்பு துண்டிக்கபடும்.
இந்நிலை மாறவேண்டும், எல்லோருக்கும் எல்லா பொறுப்பும் உண்டு.
ஏதாவது செய்தாகவேண்டும், முதலில் நல்ல மழை வரட்டும், தாகம் தீர்க்கட்டும்
நிரந்தரமாக குடிநீர் தேவையினை தீர்க்க செய்யவேண்டிய வேலைகள் ஏராளம் உண்டு
அது அரசின் வேலை மட்டுமல்ல, நமது பங்கும் நிரம்ப உண்டு.
குடிநீருக்காவது வருங்கால தலைமுறைக்கு ஏதாவது செய்ய முயற்சிப்போம்.