பெரியவர் Manickavasagam Muthuswamy
அந்த பெரியவர் Manickavasagam Muthuswamy பெருந்தன்மையானவர் என்பதாலும், நிச்சயம் தவறாக கருதமாட்டார் என்பதாலும் எழுதுகின்றோம்
அவர் வள்ளியூரின் முதல் மருத்துவர், 1950களிலே மருத்துவரானவர், ஆனால் சாதியால் பிற்படுத்தபட்டவர்
அக்காலங்கள் கடுமையானவை என்பார்கள், அந்த அக்ரஹாரத்தில் மற்ற சாதியினர் நடமாட முடியாது என்பதும், தெரியாமல் அந்த வீதியில் நுழைந்துவிட்டால் செருப்பை கையில் எடுத்து குனிந்தபடி மற்றவர் நடக்க வேண்டும் என்பதெல்லாம் அக்கால விதியாம்
அந்த காலத்திலே அக்ரஹாரத்து பிராமண பெண்ணுக்கு இவர்மேல் காதல் வந்திருகின்றது
“நம்பியவரை கைவிடல் மானிட தர்மமாகாது..” என மனமார நம்பிய மருத்துவரும் அவரை கைத்தலம் பற்றினார்
அந்த பகுதியின் முதல் கலப்பு திருமணமும் புரட்சி திருமணமும் அதுதான்.
இன்று சென்னையின் மிக சிறந்த சிறுவர் நல மருத்துவர் அவர், பேரபிள்ளையும் எடுத்து வாழ்வாங்கு வாழ்கின்றார்
“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே…”
அவர்கள் இருவர் நெஞ்சமும் கலந்தன, வாழ்வாங்கு வாழ்கின்றார்கள்
விரும்பிய இரு மனங்கள் இணையும் பொழுது சாதிய பெருமை பேசுவதும் இன்னும் என்னவெல்லாம் பேசுவதும் சரியல்ல
எனக்கு நன்றாய் நினைவிருக்கின்றது
மலேசியாவில் ஒரு பெரியவரை சந்திக்கும் பொழுது சொன்னார், “இது இன்னாருடைய பேரன்
அவர் என்னவெல்லாம் பேசுவார் தெரியுமா? சாதி குடும்ப பாரம்பரியம் என ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினார்
ஆனால் அவரின் பேரன் ஜப்பானியரை திருமணம் செய்திருக்கின்றான் அவளுக்கு சாதியும் கிடையாது மதமும் கிடையாது.
குழந்தைகளுக்கு தமிழே தெரியாது அதில் இனி சாதி எங்கிருந்து தெரியும்?
இனி அவரின் சாதி தொடராது எல்லாம் மாறிவிட்டது, அவரும் இப்பொழுது இல்லை
சாதி பேசி என்ன கிழித்துவிட்டார்? என்ன காத்துவிட்டார் ஒன்றுமில்லை..”
மாறும் உலகில் எல்லாமும் மாறும், அடுத்த தலைமுறை என்னாகும் என தெரியாதவர்கள் எல்லாம் சாதி,மதம், சம்பிரதாயம் ஆடிகொண்டிருகின்றனர் என்பதுதான் பரிதாபம்