அந்த குறுகிய இந்திய பயணம் நன்றாகவே முடிந்தது

அந்த குறுகிய இந்திய பயணம் நன்றாகவே முடிந்தது, தந்தையின் முதலாம் ஆண்டு என்பது வாழ்வில் எவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டோம் என்பதை உணர்த்தியது

தொட்டில் கட்டி ஆட்டிய தந்தைக்கு கல்லறை கட்டும் அளவு வாழ்வில் பாதியினை கடந்தாகிவிட்டது, காலம் யாருக்கு காத்திருக்கும்,

சூரியனை நிறுத்தி வைக்க நாம் என்ன நித்தி சாமியா?

அவர் மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்டாலும், அந்த நாளில் மனம் கலங்கத்தான் செய்தது, சம்பிரதாய பிரார்த்தனைகள் மற்றும் இதர விஷயங்கள் செய்தாலும் மனம் நிறையவில்லை

முதியோருக்கு உணவளித்தல், ஆடை அளித்தல் என்றாலும் நிறைவில்லை

இதுதான் வாய்ப்பு என வந்து “மக்கா லேய், அவர் பெயரில் 4 பேர் நன்றாக குடிக்காவிட்டால் அவர் ஆத்மா தாங்குமா?” என கேட்டு அரசின் வருவாயினை பெருக்க வந்த பலரை தவிர்க்க முடியவில்லை

அவர்களுக்குத்தான் தந்தையின் ஆத்ம சாந்தி பற்றி எவ்வளவு அக்கறை?

என்ன செய்தாலும் மனம் நிறையவில்லை ஏதோ ஒன்று குறைவது தெரிந்தது.

ஒரு விஷயம் உணரமுடிந்தது

செத்தவன் நினைவாக செய்வதெல்லாம் வீண். அவன் இருக்கும் பொழுது அவனுக்கு செய்யாமல் அவன் இறந்தபின் செய்வதில் என்ன அர்த்தம் என்றேல்லாம் பல அறிவாளிகள் பேசுவார்கள் பேசட்டும்

மற்ற மதத்தை விட இந்து தர்மம் இறந்தவர்களுக்காக சில காரியங்களை செய்ய‌ ஏன் வலியுறுத்துகின்றது என்றால் அதில்தான் விஷயம் இருக்கின்றது.

ஒருமனிதன் தன் வாழ்நாளில் தான தர்மங்களை செய்ய வேண்டும், அவன் இல்லா காலங்களில் அவன் பெயரால் சில காரியங்கள் நடக்க வேண்டும்

பெரிதாக இல்லாவிட்டாலும் அவன் நினைவாக சிலர் வயிறார உண்ண வேண்டும், ஆடைகள் பெற வேண்டும்

அதில் இறந்தவன் ஆத்மா மகிழுமா இல்லை , அது சாந்தி அடையுமா என்பதல்ல , மாறாக அவன் பெயரில் சிலர் மகிழ்கின்றார்கள், அவன் பெயரால் சிலர் பசியாவது ஆறுகின்றார்கள் என்பதே விஷயம்

ஆம், இந்துமதம் அந்த நற்காரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது

திதி கொடுப்பது, நினைவுநாளை அனுசரிப்பது எல்லாம் இந்த ஏற்பாடே

மற்ற எந்த மதத்திலும் இல்லாத அளவு மிகபெரும் புண்ணிய காரியத்தை ஆத்மா, சொர்க்கம், சாந்தி, பாவமன்னிப்பு, முன்னோர் ஆசி என சொல்லி அது செய்திருக்கின்றது

சமூகத்தில் நாலு பேர் இறந்தவன் பெயரால் பயனடைந்தால், நொடி நேரம் மகிழ்ந்தாலே ஒருவன் வாழ்ந்த வாழ்வு அர்த்தமுள்ள வாழ்வாகின்றது.

அந்த மாபெரும் உண்மையினை வலியுறுத்துகின்றது இந்து தர்மம், அவ்வகையில் இந்துமதம் மிக மிக சிறப்பானது என்பதை ஏற்றுகொள்ள வேண்டியிருக்கின்றது.

திதி, அமாவாசை முன்னோர் வழிபாடு, இன்னும் ஏராளமான விஷயங்கள் எல்லாம் சமூகத்தில் இல்லாதோருக்கு உதவவே அன்றி வேறு எதற்கும் அல்ல..

மாபெரும் புண்ணிய காரியத்தை ஆத்மா, சொர்க்கம் என சொல்லி ஏற்பாடு செய்து வைத்திருக்கும் இந்துமதத்தை மனமார வணங்குகின்றேன்..

ஆனால் என்ன செய்தாலும் மனம் நிறையவில்லை

அவர் நடந்த வரப்பெல்லாம் சுற்றிவிட்டு கடைசியாக அவரோடு சென்ற வாழைக்காய் சந்தைக்கும் சென்றாயிற்று.

விவசாயிகள் பொருளை விவசாயி விற்கும் உழவர் சந்தை நல்ல திட்டம், யாருக்கு நல்ல திட்டமென்றால் 10 கிலோ கத்தரிக்காய், தக்காளி என கால் ஏக்கரில் பயிடுபவனுக்கு சரி

ஆனால் 500 வாழைத்தார்களை மொத்தமாய் வெட்டுபவன், 3000 கிலோ பூசனியினை பறிப்பவன் எல்லாம் அதில் என்ன விற்க முடியும்? வாய்ப்பே இல்லை

நெல், மிளகாய் வற்றல் , பருத்தி போல அவற்றை பாதுகாக்கவும் முடியாது

மொத்தமாக இம்மாதிரி பாதுகாக்கமுடியா பொருள் விளையும் பொழுது வியாபாரிக்கே லாபம்

விவசாயி அழிவது இதில்தான், சந்தையில் ஏலமிடும் வியாபாரிக்கு கிடைக்கும் நிரந்தர பணம் விவசாயிக்கு இல்லை

அதுவும் வாடகை, கமிஷன் எல்லாம் போக விவசாயிக்கு மிஞ்சுவது ஏதுமில்லை..

சந்தை எல்லாம் சுற்றினேன், முன்பெல்லாம் நானும் அவரும் அப்படித்தான் சுற்றுவோம்

நேந்திரம், தொழுவன், கதலி என ஏகபட்ட வாழை ரகங்கள் குவிந்திருக்கும். அவரும் நன்றாக விளைந்த தாரினை குழந்தையின் கன்னத்தை தொடுவது போல லேசாக தொட்டு பார்த்து சிரித்து கொள்வார்

அதெல்லாம் நினைவுக்கு வந்தது

குவித்து வைக்கபட்ட வாழைத்தார்கள் அருகே வாழைத்தாரின் காம்பு போல குனிந்திருந்தான் அந்த விவசாயி

ஏகபட்ட பெண் பிள்ளைகளை பெற்று அவர்கள் திருமணத்தன்று கலங்கி நிற்பவன் போல அவன் அமர்ந்திருந்தான்.

அதே கைலி, அதே பனியன்..அதே பாதி நரைத்த தலை, அதே ஒல்லிய ஒடுங்கிய உருவம்..

அவரை பார்த்ததும் மனம் சட்டென கலங்கிற்று, கையில் எவ்வளவு இருந்தது என தெரியவில்லை, ஓடி சென்று அவர் கைகளில் திணித்தேன்

கலங்கிய கண்களோடு பார்த்தார், அவருக்கு அர்த்தம் புரியவில்லை

வாங்க மறுத்தார், காரணங்களை சொல்லி கடுமையான வற்புறுத்தலுக்கு பின் வாங்கி கொண்டார்

அவர் கைகளை பற்றி கொண்டிருந்தபொழுது என்னை அறியாமல் அழுகை வந்தது

அவர் காரணம் தெரியாமல் திகைத்தார், அந்த கண்ணீருக்கான காரணம் என் மனம் மட்டுமே அறியும்.

அதன் பின்பு மனம் திருப்தியாக தோன்றிற்று, நிறைவோடு வானத்தை நோக்கிபார்த்தால் லேசாக சாரல் முகத்தில் விழுந்தது,

அது தந்தை ஆசிகொடுத்த அடையாளம் அன்றி வேறல்ல..