குரு பூர்ணிமா
ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள குருகுலங்களில் காலையில் வகுப்புகள் தொடங்கும் பொழுது ஒலித்துகொண்டிருந்த வார்த்தை, நமஹ என்றால் போற்றுகிறோம் அல்லது வணங்குகிறோம் என பொருள்,
அப்படித்தான் வணங்கினார்கள், குரு என்றால் இருளை நீக்குபவர், அறிவினை தருபவர் என பொருள், கிரகங்களில் கூட அறிவினை தரும் கிரகத்திற்கு குரு என பெயரிட்டு கொண்டாடியது பாரதம்.
“குருவில்லாத வித்தை பாழ்”, “குருவில்லாத கல்வி கருஇல்லாத முட்டை” என்றெல்லாம் குருவின் பெருமையை உயர்த்தி பிடித்தனர்,
அவ்வளவு ஏன் எல்லா அரசுகளிலும் ராஜகுரு என்று ஒருவர் இருப்பார், அரசனே அவரிடம்தான் ஆலோசனை கேட்பார், அரசனுக்கு ஏதும் ஆனதென்றால் அடுத்த மன்னனை தயார் செய்வதும் ராஜ்குருவே.
அசுரர்க்கே சுக்ராச்சாரி என்றொருவர் இருந்தார், அலெக்ஸாண்டருக்கு அரிஸ்டாட்டில் இருந்தார், சந்திர குப்தனுக்கு சாணக்கியன் இருந்தார்
விவேகானந்தருக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் இருந்தார்
காமராஜருக்கு சத்யமூர்த்தி இருந்தார், கலைஞருக்கு அண்ணா இருந்தார்
ஆம் அண்ணாவின் பண்புகளையும் அணுகுமுறையினையும் அப்படியே பின்பற்றி வரலாற்றில் நின்றவர் கலைஞர்
ரஜினிக்கு பாலசந்தரே குரு.
பீமராவ் என்பவருக்கு அம்பேத்கரும், அப்துல்கலாவிற்கு வைத்தியநாத அய்யர் எனும் ஆசிரியருமே வழிகாட்டி
ராமனுக்கு விசுவாமித்திரரே குருநாதர்.
துரோணரிடமும் பீஷ்மரிடமும் வித்தைகளை கற்ற அர்ச்சுணனுக்கு இறுதியில் தெளிவினை கொடுத்தது அவனது குரு கண்ணணே.
இன்று உலகெல்லாம் ஆலயம் அமைத்து கொண்டாடபடும் யேசு கிறிஸ்துவின் சீடர்கள் வாழ்ந்த காலத்தில் இயேசுவினை ஒரு ஞான ஆசிரியனாக போற்றினார்கள், மூல பிரதியின் மொழிபெயர்ப்பு சொல்வது அப்படித்தான்
கிட்டதட்ட கடவுளின் அவதாரம் என்றே குருக்களை முன்னோர்கள் வணங்கினர்.
எல்லா தர்மங்களையும் போதித்த இந்து தர்மம் குருக்களுக்கு ஒரு நாளை தேர்ந்தெடுத்தது, அது ஆடிமாதம் வரும் பவுர்ணமி என முடிவும் செய்தது
முழு பவுர்ணமி நாளை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?
நிலா என்பது சூரியனிடமிருந்து ஒளியினை வாங்கி இருளில் பிராகாசித்து வழிகாட்டுவது போல, குரு என்பவர் இறைவனிடம் இருந்து அருள் பெற்று மக்களை வழி நடத்துவதாக அது சொல்லிற்று
ஆடிமாதத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?
ஆடிமாதம் என்பது சில சிறப்புகளை கொண்டது, ஆடிபட்டம் தேடிவிதை என்பார்கள், அதாவது அந்த தட்சாயின காலத்தில் சூரியனின் சக்தி அதிகம் இருப்பதாகவும் அந்த ஒளியில் பயிர்கள் செழித்து வளரும் என்பதும் நம்பிக்கை
மிக சிறப்பான மாதமாக அது இருப்பதாலும், பல மங்கள காரியங்களையும் சிறப்பு வழிபாடுகளையும் தொடங்கும் மாதமாக இருப்பதாலும் ஆடிமாத பவுர்ணமி குருக்களுக்கானது என குறித்து வைத்தார்கள்
குரு என்பவர் இருளை நீக்கி நம்மை கடவுளின் பாதைக்கு அழைத்து செல்லும் அவதாரம் என அது வலியுறுத்திற்று
குரு பூர்ணிமா என்பது அதுதான். இன்றுதான் அந்த வியாச பவுர்ணமி
இந்நாள் என்பது அந்நாளைய ஆசிரியர் தினம், உலகின் முதன் முதலாக குருவினை நாள் வைத்து வணங்கிய மதம் இந்து மதமே என்பது மறுக்கமுடியா உண்மை
எந்த மதத்திலும் இல்லா சிறப்பாக குரு வம்சத்தின் அடியாழம் வரை சென்று அது வணங்க சொல்கின்றது, அதாவது உனக்கு யார் குருவோ அவரோடு நின்றுவிடாதே, குருவுக்கும் குரு என பலர் வருவார்கள் அல்லவா? அவர்கள் போதித்த போதனையினை நீயும் பெற்றுகொண்டாய் அல்லவா? அதனால் அந்த மொத்த குரு பரம்பரையினையும் நினைத்து வணங்கு என்கின்றது இந்துமதம்
அதனால்தான் வியாச பவுர்ணமி என அதற்கு பெயர்.
வியாசர் என்பவர் பகவான் நாராயணின் சாயலாக அறியபடுகின்றார் என்பதால் அது சாட்சாத் பகவானையே போய் சேருகின்றது
இந்த பிறவியில் நாம் யாரை எல்லாம் குருவாக நினைக்கின்றோமோ அவர்களை எல்லாம் இந்நாளில் வணங்கினால் பல வகை ஆசீகளுக்கும் நல்ல முக்திக்கும் உதவி செய்யும் என்கின்றது சாஸ்திரம்
ஒரு பழமொழி உள்ளது “இறைவனால் கொடுக்கப் பட்ட சாபத்தை ஒரு குருவினால் மாற்ற முடியும், ஆனால் ஒரு குருவினால் கொடுக்கப்பட்ட சாபத்தை இறைவனாலும் மாற்ற முடியாது”
குரு மனம் குளிர்ந்தாலே கோடி நன்மை கூடிவரும் என்பார்கள்
குரு என்பவர் ஞான ஒளி கொடுப்பவர், வாழ வழிகொடுப்பவர், அறிவும் ஞானமும் கொட்டி கொடுப்பவர்
குரு என்பவர் கடவுளால் அனுப்பபட்டு ஒவ்வொருவரையும் கைதூக்கிவிடுகின்றார் என்பதே சரி. சரியான குருவினை கண்டுபிடிக்காதவன் எவனும் வாழ்வில் வெற்றியடைய முடியாது
கல்வி கொடுப்பவர் மட்டுமல்ல, சரியான திசையினை காட்டி ஒருவன் வாழ்வினை திருப்பும் சக்தி கொண்ட எல்லோருமே குரு வகையே
சரியான குருவினை கண்டடைந்தபின் ஒருவன் வாழ்வே மாறிவிடும் என்பதே மானிட வாழ்வியல் தத்துவம், அந்த குருவினை விடாமல் பிடித்து கொள்வதும் அவரை போற்றுவதும் சால சிறந்தது
இந்துமதத்திலிருந்து பிரிந்த அந்த புத்தமதமும் இதை இன்று குரு பூர்ணிமா கொண்டாடுகின்றது
குருவே சரணம் , குருவே நமஹ என்ற கோஷம் முழங்க இந்த பாரத மண் இந்து தர்மத்துபடி அந்த குரு பவுர்ணமி நிகழ்வினை கொண்டாடுகின்றது
அவ்வகையில் எல்லா குருக்களையும் அவர்களின் குரு பரம்பரையினையும், வேதங்களை கொடுத்த வியாசரையும், அவரின் மூலமான பகவான் நாராயணனையும் நன்றியோடு வணங்கிகொண்டிருக்கின்றது
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குருவின் மேன்மை உணர்ந்து, குருக்களுக்காக ஒரு நாளை தேர்ந்தெடுத்து வணங்க சொன்னஇந்து பாரம்பரியம் உலக நாகரீகங்களுக்கெல்லாம் தாய் என்பதை மிக பெருமையாக சொல்லிகொள்ளலாம்
