மறக்க கூடியவரா அந்த பாரதிராஜா..
அவர்மேல் சில சர்ச்சைகள் இருக்கலாம், சில இடங்களில் உணர்ச்சிவசபட்ட பேச்சு இருக்கலாம், இளவயதின் கசப்பான அனுபவங்களும் கிராமவாசிகளுக்கே உரிய சில வைராக்கியங்களும் இருக்கலாம்
ஆனால் தமிழின் மிகசிறந்த இயக்குநர், இந்த தமிழக கிராமங்களின் யதார்த்தத்தை அப்படியே கொஞ்சமும் மாற்றாமல் திரையில் முதலில் காட்டியவர் என்ற பெருமை அவரை தவிர யாருக்குமில்லை
கிராமத்து மனிதராக கிளம்பி கிராம வாழ்க்கையினை திரையில் காட்டி தனக்கான தனி இடம் தேடிகொண்டவர் அந்த பாரதிராஜா
தமிழக சினிமாவின் வரலாற்றை கவனித்தால் புரியும், அது முதலில் புராணங்களை சினிமாவாக வடித்தது, பின் மேல்தட்டு மக்களின் வாழ்க்கையினை படமாக கொடுத்தது
பராசக்தி கூட எளிய மக்களின் வாழ்க்கையினை சொல்லவில்லை, ஒருமாதிரி மேல்மட்ட நகரவாழ்வினையே காட்டிற்று
தொடர்ந்து மன்னர் படங்களும், பணக்காரர் படங்களும் இடையே பக்திபடங்களுமே வந்தன
குடும்பபாசங்களுக்கு தனி இடம் கொடுத்த பீம்சிங் கூட மேல்தட்டு நகர வாழ்க்கையினையே காட்டினார்
பாலசந்தர் படம் முழுக்க பிராமண மேல்தட்டு வாழ்வும் பாத்திரமே வரும், அவரை குற்றம் சொல்லமுடியாது அவர் வளர்ந்த சூழல் அப்படி
அந்த தமிழ்திரையுலகில் முதன் முதலில் மதுரை பகுதி கிராமங்களை அப்படியே கண்முன்னால் நிறுத்தியவர் பாரதிராஜா
நிச்சயம் அது ஒரு புரட்சி, மாபெரும் புரட்சி
சினிமாவில் ஒரிஜினல் கிராமவாழ்வினை காட்டவே முடியாது என்ற நிலையினை அவர்தான் மாற்றினார்
எளிய புழுதிபடர்ந்த வறண்ட கிராமங்களின் அமைதியான ஆனால் ரசனையான வாழ்வினை அவர்தான் காட்டினார்
எளிய மனிதர்களின் ரசனையான அமைதியான பாசமான வெகுளியான அதேநேரம் சில முரட்டு பிடிவாதமான பக்கங்களை எல்லாம் அவர்தான் திரையில் கொடுத்தார்
நிச்சயம் அவர் தொடங்கி வைத்தது ஒரு யுகம்
அவராலே இளையராஜா கோஷ்டி, வைரமுத்து என பல கிராமத்தில் விளைந்த வைரங்கள் எல்லாம் உச்சம் தொட்டன , வாய்ப்பினை அவர்தான் திறந்து வைத்தார்.
அவரின் வெற்றிதான், கிராம உணர்வுகளை அவர் தட்டி எழுப்பி மக்களை ரசிக்க வைத்த வெற்றிதான் பின பல கதவுகளை தமிழ் சினிமாவில் திறந்துவிட்டது
சுருக்கமாக சொன்னால் திறக்காத கதவுகளை அடித்து உடைத்து திறந்து வைத்தவர் அவர்
(தன் மேல் ஒரே ஒரு முத்திரை விழுந்துவிட கூடாது என்பதற்காக சில வேறு தளங்களில் அவர் படம் இயக்கியிருக்கலாம், ஆனால் அவரின் அடிநாதமும் ஆன்மாவும் கிராம சினிமாக்களிலே இருந்தது..)
மறக்க கூடியவரா அந்த பாரதிராஜா..
ஒரு வேலை கிடைத்து நகரத்துக்கு பறந்துவிட்டாலே பிறந்த மண்ணையும் அம்மக்களையும் கொஞ்சமும் மதிக்கதெரியாத மனிதர்கள் மத்தியில் அவர் வித்தியாசமானவராக இருந்திருக்கின்றார்
ஆம் அந்த மண்ணையும் மக்களையும் மனமார ரசித்திருக்கின்றார், அவர்களும் அவர்களின் வாழ்வும் அவரை அப்படி பாதித்திருக்கின்றன
அதிலிருந்து அவர் மீளவில்லை, நகரவாசியானாலும் அந்த கிராமத்தான் மனது கொஞ்சமும் மாறாமல் இருந்திருக்கின்றது
தான் ரசித்த கதையினை தான் பார்த்த கிராம மக்கள் பாத்திரத்திலே சினிமாவில் வடித்திருக்கின்றார்
அவர் ரசித்ததை தமிழகமும் ரசித்திருக்கின்றது, மாபெரும் உயரத்தில் வைத்து அவரை கொண்டாடியது
“பதினாறு வயதினிலே..” படத்தில் இருந்து “கடல் பூக்கள்” வரை எவ்வளவு காவியங்கள்?
அந்த கடலோர கவிதை, அலைகள் ஓய்வதில்லை, வேதம் புதிது, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா என எவ்வளவு சினிமா கல்வெட்டுக்கள்.
அதுவும் அந்த முதல்மரியாதை தமிழ் சினிமாவின் கிளாசிக்
அவரின் சினிமாவினை கவனியுங்கள், அவர் மட்டும் வளரவில்லை எத்தனையோ பேரை வளர்த்தார்
அதில் ஏகபட்ட இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என பெரும் கூட்டமே உண்டு
பெரும் தலைமுறையே அவரின் பாதிப்பில் உருவானது
இயக்குநர் என்பவன் தன்னை பாதித்த கதை ஒன்றை கற்பனையில் படமாக்கி 2.30 மணிநேரம் ஜனங்களை தியேட்டரில் கட்டிபோட வேண்டும், அவர்களை அப்படியே உருக்கி வைக்க வேண்டும், அதோடு ஒன்ற செய்ய வேண்டும்
பாரதிராஜா அந்த வித்தையினை செய்தார் , உதாரணம் இந்த பதினாறு வயதினிலே படமும், பாலசந்தரின் நிழல் நிஜமாகின்றது படமும் மூல கதையால் ஒன்றே
ஆனால் பதினாறு வயதினிலே அளவு அந்த நிழல் நிஜமாகின்றது மனதில் நிற்குமா என்றால் நிற்காது
காரணம் பாலசந்தரின் படம் மேல்மட்ட நகரவாழ்வுகுரியது, பாரதிராஜாவோ கிராம பின்னணியில் அதை நெய்திருந்தார்
மனதால் எல்லோரும் கிராமவாசிகள், கிராமத்தின் டி.என்.ஏ எல்லோர் ரத்தத்திலும் கலந்திருக்கின்றது என்பதால் அப்படம் பெரும் வெற்றி பெற்றது
தன்னை அறியாமல் மாபெரும் காரியத்தை பாரதிராஜா செய்திருகின்றார், அது அவருக்கு எக்காலமும் அழியா இடத்தை கொடுக்கும்
ஆம், கிராமங்கள் எல்லாம் சுருங்கிவிட்டன, பேய் கிராமங்கள் என சொல்லபடும் ஆளில்லா கிராமங்கள் பெருகிவிட்டன
சில கிராமங்கள் நகரின் தோற்றத்திற்கு மாறிவிட்டன
பல்லாயிரமாண்டு இருந்த கிராமத்தின் அடையாளம் 30 ஆண்டுகளில் சுத்தமாக துடைத்தொழிக்கபட்டாயிற்று
திண்ணை வைத்த வீடுகள், ஓலை குடிசை, மீசை பெரிசுகள், பாம்படம் வைத்த பாட்டி, விறகடுப்பும் மண்பானையும், வெற்றிலைபெட்டி பெருசுகள் அவர்கள் சொல்லும் உரிமையான பாசமான வார்த்தைகள் என எதுவுமில்லை
அந்த லாந்தர் விளக்கு, சிமிழி விளக்கு, கிராம கூட்டங்கள்,பஞ்சாயத்து, உறவுமுறைகள் என எவ்வளவு விஷயங்கள்.
மாட்டுக்கு கையால் துண்டுக்கு கீழ் விலைபேசும் காட்சி முதல், திருமண பெண்ணை யாரும் அறியாமல் பார்ப்பது எப்படி என்பது வரை எவ்வளவு ரசனையான விஷயங்கள்?
அந்த தாவணி மங்கையர், சேலையினை மட்டும் மேலே சுற்றும் கிழவிகள், தலைப்பாகை அணிந்து மண்வெட்டியோ ஏரோ கொண்டு மாட்டை பிடித்து செல்லும் ஆடவர்கள் என யாருமில்லை
மாட்டுவண்டி,லாடம் அடிக்கும் மாடுகள், முற்றத்து கோழிகள், அதை சுற்றி சிட்டுகுருவிகள், ஏர் கலப்பை, ஏற்றம் இறைத்தல், உழவு, அறுவடை என எதுவுமில்லை
நிரம்பியிருக்கும் ஏரிகள், அதன் கரையில் பசுமை செழித்த வயல்கள், அது கொடுக்கும் வாசம், அதை தேடிவரும் பறவைகள், அந்த மணம் மிக்க காற்று என எதுவுமில்லை
போர் நடந்த பூமி போல் அழிந்து கிடக்கின்றன வயல்காடுகள்
எல்லாம் மாறிற்று, ஏன் கிராமத்து திருமணங்களே மாறிற்று பழைய பாசமான உருக்கமான காட்சிகளுமில்லை, அந்த அற்புதமான சாப்பாடு கூட இல்லை
கிழிந்த கால்சட்டையும் மஞ்சள் பையுமாக மாணவர்கள் வந்த அந்த ஓட்டு பள்ளியும் அவர்களுக்காக சைக்கிளில் வந்த ஆசிரியர் காலமும் இனி வாரா, நினைவுகளிலே அது வாழும் காட்சிகள்
ஒவ்வொரு கிராம வம்சாவளியும் தான் ஜார்ஜ்மன்னரின் கொள்ளுபேரன் பேத்தி என நம்பிகொண்டிருக்கும் காலமிது
அந்த பழைய அற்புதமான காலங்கள் எல்லாம் கனவாய் மாறிவிட்ட நிலை, தமிழக கிராமங்கள் புதுகோலம் பூண்டுவிட்ட நேரம்
இனி அந்த பழைய காட்சிகளை எங்கு தேடுவோம்? அப்படி ஒரு காலம் இருந்தது என யார் நமக்கு காட்டுவார்கள்
அதில்தான் பாரதிராஜா தனித்து நிற்கின்றார்
ஆம், பண்டைய குடும்பங்கள் எவ்வளவு பாசமாக உறவாக அண்ணன் தம்பி, அண்ணன் தங்கை என உயிராக இருந்தன என்பதற்கு பீம்சிங்கின் படங்களைத்தான் காட்டமுடியும்
கிராமங்கள் எப்படி இருந்தன என்பதற்கு பாரதிராஜாவின் படங்களைத்தான் காட்டமுடியும்
நேரம் கிடைக்கும் பொழுது அவரின் படங்களை பார்க்கும் பொழுதெல்லாம் அதுதான் நினைவுக்கு வரும்
கிராம வாழ்வின் ஒவ்வொரு விஷயத்தையும் பதிவு செய்தவர் பாரதிராஜா
கொண்டை ஊசி முதல் கிராமத்து மண்சுவர் கோழிக்கூடு வரை அந்த மனிதன் திரையில் பதிந்து வைத்தான்
நீங்கள் கிராமத்தில் வளர்ந்து காலவோட்டத்தில் நகரமயமாக்கலில் சிக்கி எங்கோ விதியால் இழுத்து செல்லபட்ட மனிதர்களாக இருந்தால் பாரதிராஜாவின் படங்களை பாருங்கள்
அதில் பாம்படம் போட்ட பாட்டி, இடுப்பில் துண்டுடன் உழுது கொண்டிருக்கும் கிராமவாசி, கஞ்சி கலயம் சுமக்கும் பெண்கள், விறகு பொறுக்கும் பெண்கள், ஏன் மாடுமேய்க்கும் சிறுவர்கள் என சில காட்சிகளை கண்டால் உங்கள் மனம் உங்கள் கிராமங்களுக்கே திரும்பும்
அந்த பாரதிராஜா படைத்த பாத்திரங்கள் உங்கள் முன்னோர்களையோ இல்லை அக்கம்பக்கத்தாரையோ உங்களை தூக்கிவளர்த்தவர்களையோ நினைவுபடுத்தும்
அப்பொழுது உங்களை அறியாமல் மனதின் ஆழத்திலிருந்து கண்ணீர் வரும்
அதுதான் பாரதிராஜா எனும் கிராமத்தானின் வெற்றி, நம் அடையாளங்களை கலாச்சாரங்களை வாழ்க்கையினை சினிமாவில் மீட்டெடுத்த உன்னத கலைஞனின் வெற்றி
கொஞ்சமும் செயற்கைதனமின்றி இயற்கை கிராமத்தினை அம்மனிதர்களின் மொழியினை உணர்வுகளை அது தாய்மை, தந்தை,நட்பு, காதல், பிரிவு, உருக்கம் துரோகம் வஞ்சகம் என எதுவாயினும் கிராமத்து தன்மையிலே பதிவு செய்த உன்னத கலைஞனின் வெற்றி
அந்த மிகசிறந்த கலைஞனுக்கு இன்று பிறந்த நாள்
முதல்மரியாதை வெற்றிவிழாவுக்கு பின் சிவாஜி கணேசன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் ” பாரதிராஜா நல்ல நடிகன், அவன் நடிச்சிகாட்டுறதுல பாதி நாம நடிச்சா போதும். அவ்வளவு பிரமாதமா நடிக்கிறான்
ஆனா அவன் நடிக்க வந்த நம்ம பொழப்பு என்னாகுறது, அதுனால சொல்றேன், அய்யா நடிக்க ஆயிரம் பேரு வருவான் ஆனால் உன்னமாதிரி படம் எடுக்க யாருய்யா வருவான்? எவன் வருவான்? அதுனால இன்னும் நிறைய படம் நீ எடுக்கணும்யா”
அதேதான், அவர் இன்னும் மிக சிறந்த படங்களை கொடுக்கட்டும், அவர் நினைவில் இருக்கும் எஞ்சிய கிராமத்தையும் பதிவு செய்யட்டும்
எல்லோருக்கும் வயது ஓடுகின்றது,
“எங்க பாட்டி இப்படித்தான் இருந்தாவ, நம்ம வீட்டிலேயும் இப்படி மாடு இருந்திச்சி, நம்ம தோட்டமும் இப்படித்தான் விளைஞ்சிச்சி , இதே மாதிரி கமலை நம்ம கிணற்றிலும் இறச்சாவ…” என மகனோடு சேர்ந்துபார்த்து கண்ணை துடைத்தபடி கதை சொல்ல பாரதிராஜா படங்களை தவிர என்ன இருக்கின்றது?
ஒவ்வொரு தமிழன் மனதிலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியவன் பாரதிராஜா, அவனின் ரசனை மிகுந்த மனமும், கிராமத்தை மறக்காத அந்த குணமுமே அவனின் படைப்புகளில் எல்லாம் வெளிபட்டன
அவன் ஆயிரம் பிறை கண்டு வாழவும், இன்னும் அற்புதமான படங்களை கொடுக்கவும் வாழ்த்துக்கள்
நீர் என்றுமே எங்களின் அன்புக்கும் நன்றிக்கும் உரியவர் பாரதிராஜா
கிராம கதைகளுக்கு கி.ராஜாநாராயணன் போல கிராமத்து சினிமாக்களுக்கு என்றுமே நீர்தான் பிதாமகன்
எங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜாவுக்கு , இனிய தமிழ்மக்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க நீர் பெருசு…..
