ராஜகோபால் அண்ணாச்சி காலமாகிவிட்டார்

மிக சுவையான உணவுக்கும், மிக கடுமையான உழைப்புக்கும் பெயர் பெற்ற ராஜகோபால் அண்ணாச்சி காலமாகிவிட்டார்.

அவர் அதிகம் படிக்காதவர் ஆனால் கடும் உழைப்பாளி, பின் தங்கிய நாடார் சாதி

12 வயதில் இருந்தே அவர் உழைத்த உழைப்பு அவரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தியது, ஒரு நாடார் சைவ உணவகத்தை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தியதெல்லாம் பெரும் விஷயங்கள்

முதன் முதல் உணவகத்தில் சீருடை இன்னபிற அடையாளம் என மிக நாகரீகமான சுத்தமான உணவகமாக அவரின் சரவண பவன் விளங்கியது

தொழிலில் வேகமாக வளர்ந்தார் அவர், எங்கெல்லாம் தமிழர் உண்டோ அங்கெல்லாம் உலகில் ஏராளமான கடைகள் திறக்கபட்டன‌

அண்ணாச்சி உழைப்பினை எவ்வளவு நம்பினாரோ அப்படியே கடவுளை நம்பினார்

வனதிருப்பதி உட்பட பல ஆலயங்களுக்கு கோடி கோடியாய் அள்ளிகொடுத்தவர் அவர்

அவர் கடவுளை நம்பியது தவறல்ல அப்படியே கடவுளுக்கு மேல் ஜோசியங்களை நம்பியதுதான் தவறு

ஒரு சில நம்பிக்கைகள் அதை செய்ய சொல்கின்றன‌

இந்திரா அப்படி செய்துதான் அதாவது சில யாகங்களை செய்துதான் பெரும் ஆபத்தில் சிக்கினார் என்பார்கள், இரு மகன்களும் கொடூரமாக செத்தது அப்படியே என்பார் சிலர்

ஜெயலலிதா தன்னை ஜோசியர்கள் பிரதமராக்குவார்கள் என நம்பியே அக்கனவு நிறைவேறாமலே செத்தார்

கலைஞருக்கும் ஜாதகத்தில் நம்பிக்கை உண்டென்பார்கள், அவர் முக ஸ்டாலினின் ஜாதகத்தை கணித்தோ என்னமோ கடைசி வரை அவரை தலைவராகவிடவில்லை என்பதெல்லாம் யூகங்கள்

இந்த அண்ணாச்சிக்கு ஜீவஜோதி ஜாதக அமைப்பும் உங்கள் ஜாதக அமைப்பும் பிரமாதமாக இருகின்றது என சொல்லி ஜோசியர்கள் தவறான வழிகாட்டினார் என்றன அக்கால செய்திகள்

அண்ணாச்சி சங்கரமடம் முதல் பல இடங்களில் காணபட்டவர் என்பதால் அதில் உண்மையும் இருக்கலாம்

சில ஜாதகங்கள் அப்படிபட்டவை, உதாரணம் அந்த ஜோசப்பின் விதவைதான் முதல் கணவன் அல்பாயுசுதான்

ஆனால் அவளை அடைந்தபின் நெப்போலியன் பெரும் உயரம் தொட்டான் , உலகையே அலற வைத்தான்

அவளை பிரிந்தபின் அவன் சரிந்தான் அவன் வாழ்வு முடிந்தது

இப்படி வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு

அப்படித்தான் அண்ணாச்சியினையும் நம்ப வைத்திருக்க்கின்றது ஒரு கூட்டம், அப்பெண்ணை அடைய பல செய்ய கூடாத வழிகள் செய்த அண்ணாச்சி சிக்கலில் சிக்கினார்.

என்னதான் ஜோசியர் சொன்னாலும் அண்ணாச்சிக்கு அறிவு என்னாயிற்று?

தொழிலில் உச்சத்தில் இருந்தார் அண்ணாச்சி, அதற்கு மேல் அத்தொழிலில் உயர என்ன இருக்கின்றது என இந்த பாதைக்கு வந்தார் என்பதுதான் தெரியவில்லை

கழுகு போல அவரின் ஆசை இறக்கை கட்டி பறந்திருக்கின்றது

ஆனானபட்ட சாலமோன் அரசரின் சாம்ராஜ்யமும் ஜூலியஸ் சீசரின் சாம்ராஜ்யமும் பெண்களால் சரிந்தபொழுது அண்ணாச்சி என்ன செய்வார்?

உழைப்பால் உயர்ந்த ஒரு மனிதர் பெண்ணால் சரிந்திருகின்றார்.

ஜீவஜோதி எனும் பெண்ணின் கண்களில் அவரின் விதி இருந்திருக்கின்றது

அண்ணாச்சியின் உழைப்பும் உயர்வும் பெரும் சாதனை, அதன் பின் அவர் அடைந்ததெல்லாம் வேதனை

இன்று அண்ணாச்சி மரித்துவிட்டார். உழைப்பால் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அண்ணாச்சியின் காலம் இன்றோடு முடிந்துவிட்டது

அவரை நினைக்கும்பொழுதெல்லாம் ஒரு விஷயம் உறுத்தும்

அவருக்கு ஆண்டவன் கோடி கோடியாக கொட்டி கொடுத்திருந்தான், அள்ள அள்ள வந்து கொண்டே இருந்தது பணம்

உண்மையிலே அவர் அந்த ஜீவஜோதியினை நேசித்திருந்தால் அவளை வாழ்வாங்கு வாழவைத்திருக்கலாம், பெரும் மகாராணியாக உயரத்தில் வைத்து கொண்டாடியிருக்கலாம்.

அவள் யாரை திருமணம் செய்தால் என்ன? எங்கு வாழ்ந்தால் என்ன? அவளின் மகிழ்வுக்காக அண்ணாச்சி பெரும் சொர்கத்தையே படைத்து காட்டியிருக்கலாம்.

அவள் விரலை கூட தீண்டாமல் அவள் விதியினை மாற்றியிருக்கலாம்.

அவளுக்கு சகலமுமாய் காவல் இருந்திருக்கலாம், அவளின் மகிழ்ச்சி ஒன்றே பிரதானம் என அவளை பொன் போல பாதுகாத்திருக்கலாம்

உண்மையான காதல் என்றால் அதை அண்ணாச்சி செய்திருக்கலாம்.

மாறாக அவருக்கு வந்தது காதல் அல்ல, அவள் அருகிருந்தால் இன்னும் வசதி கூடும் எனும் பேராசை

எல்லாவற்றையும் வியாபார கணக்கோடே பார்த்த அவரின் கண்கள் அவளையும் வியாபார கணக்கிலே நோக்கின‌

அவளுக்கொரு மனம் இருக்கும் என்பதையும், அவளுக்கும் தனிபட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்பதையும் அவர் யோசிக்கும் மனநிலையிலே இல்லை

எதை எல்லாமோ ஆய்ந்து அருமையான சமையலை செய்த அண்ணாச்சிக்கு, எந்த உணவின் சுவை எல்லாம் புரிந்த அண்ணாச்சிக்கு அந்த‌ பெண்ணின் மனம் புரியவில்லை என்பதுதான் கொடும் விதி.

அவளை அவள் விருப்பபடி வாழ்வாங்கு வாழவிட்டிருந்தால் அவள் கணவனும் வாழ்ந்திருப்பான், அவளும் கண்ணீரின்றி வாழ்ந்திருப்பாள்

அண்ணாச்சியும் இன்னும் பல்லாண்டு வாழ்ந்திருப்பார்

அவள் நன்றாக வாழட்டும் எங்கு வாழ்ந்தால் என்ன? நன்றாக வாழட்டும் என்ற மனம் அவரிடம் இல்லை, அவள் மகிழ்ச்சியாக வாழ ஏதாவது செய்யவேண்டும் என்ற மனமும் இல்லை

நிச்சயம் அவளை வாழவைக்கும் சக்தி அவருக்கு நிரம்ப இருந்தது, ஆனால் வியாபார மனம்தான் இல்லை

அண்ணாச்சி பக்திமான், இந்து நெறியர் ஆனால் அடுத்தவன் மனைவிக்கு ஆசைபட்ட எவனும் வாழ்ந்ததில்லை என இந்துமதம் தன் புராணங்களில் அழுத்தி அழுத்தி சொன்னதை அவர் ஏன் உணரவில்லை என்பதுதான் புரியவில்லை

விதி என்பது அதுதான்

மாவீரன் வாலி, மாமன்னன் ராவணன், தேவர்களுக்கு அரசனான இந்திரன், மாபெரும் அழகான சந்திரன் எல்லோரும் பெண்களால் வீழ்ந்த கதையினை அவர் அறியவில்லை

ஜாதகத்தில் இடமிருக்கின்றது என்பதற்காக ஒரு சுமங்கலியினை கதற கதற இழுத்துவந்தால் தெய்வம் விட்டுவிடுமா என்ன?

இன்று என்னாயிற்று?

எந்த பெண்ணால் தன் வாழ்வு இன்னும் உயரும் என நினைத்தாரோ அந்த பெண்ணுக்கு கணவனும் இல்லை

அண்ணாச்சியும் இல்லை

வியாபாரியின் வியாபார கணக்கு ஒரு பெண்ணின் வாழ்வினையே சிதைத்துவிட்டது

செய்த பாவத்துக்கு கூலியாக பெயர் கெட்டு புகழ்கெட்டு அண்ணாச்சியும் சென்றாயிற்று

நளனாக வாழ்ந்த அண்ணாச்சி ராவண‌னாக மரித்தும் விட்டார்

விதி தன் கணக்கினை சரியாக செய்துவிட்டது.

எவ்வளவு பெரும் கொம்பனாக இருப்பினும் குற்றமில்லா ரத்தமும், உத்தம‌ சுமங்கலியின் கண்ணீரும் அவனை பழிவாங்காமல் விடாது எனும் தர்மம் நிலைநாட்டபட்டு காட்சிகள் முடிகின்றன

உழைப்பால் உயர்ந்து தன் வியாபார சிந்தனையிலே ஒரு பெண்ணை ஜடமாக நினைத்து அவளை வாங்க நினைத்து அவளின் கனவுகளை சிதைத்து தானும் சிதைந்துவிட்ட அந்த அண்ணாச்சிக்கு அஞ்சலிகள்

ஒருவேளை அவளுக்காக அவளின் நல்வாழ்வுக்காக , அவளின் மகிழ்வுக்காக அவளிடம் எதுவும் எதிர்பாராது அவளுக்காக அவர் கொட்டி கொடுத்து அவளை வாழ்வாங்கு வாழ‌வைத்திருந்தால் எல்லா கிரகங்களும் கடவுள்களும் அவருக்கு கொட்டி கொடுத்திருக்கலாம்

சுத்தமான உள்ளன்பு இருந்தால் அவர் அதை செய்திருக்கலாம்.

உண்மையான அந்த அன்புக்கு நிச்சயம் தெய்வங்களும் கிரகங்களும் ஓடிவந்து வரங்களை வழங்கியிருக்கும்