அதற்கு அழிவே இல்லை
கடல் கடந்து கிடப்பவர்களுக்கு ஒரிஜினல் சாம்பாரை கொடுத்தவர் அண்ணாச்சி ராஜகோபால். அந்த சரவணபவன் இல்லை என்றால் வெளிநாட்டுவாசிகள் பலருக்கு சாம்பார் என்பதே காணல் நீராக போயிருக்கும்
அசைவ உணவினை கொடுக்க ஆயிரம் உணவங்கங்கள் உண்டு , ஆனால் பாரம்பரிய சுவையில் சைவ உணவினை கொடுக்க அவர்களை தவிர யாருமில்லை
ராஜகோபால் என்பவரின் அருமை கடல் கடந்து நல்ல உணவுக்கு ஏங்கினால் தவிர புரியாது
ருசிமிக்க சைவ உணவு வேண்டுமென்றால் அவர்களை தவிரயாருமில்லை. அந்த சாம்பாரும் இதர வகைகளும் அப்படி ஒரு சுவை, நாவில் வைத்தாலே ஊருக்கு இழுத்து செல்லும் ஆற்றல் கொண்டவை
என்ன இருந்தாலும் 10 வருடத்திற்கும் மேல் அவர்கடையில் அவ்வப்போது கை நனைத்திருக்கின்றோம், நாவு செத்துவிட்ட நேரங்களில் எல்லாம் அவரால்தான் அது உயிர்பெற்றது, கொஞ்சமாவது நன்றி இருக்கவேண்டும் அல்லவா?
அவருக்கு அஞ்சலி செலுத்த என்ன செய்யலாம்?
அந்த சரவணபவனில் ஏதாவது உண்பதே அவருக்கான அஞ்சலி
அப்படி ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தாயிற்று, கடை மேனேஜரிடம் அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லையா? ஒரு படம் கூட காணவில்லையே என கேட்டோம்
கடையில் அஞ்சலி செலுத்தினால் ஏதும் சட்ட சிக்கல் வரும் என அஞ்சி அறையிலே அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டதாக சொன்னார், சொல்லும் பொழுது அவரின் கண்கள் லேசாக கலங்கின
ஆர்டர் செய்த உணவு வந்ததும், அந்த சாம்பாரின் மணமும் சுவையும் அண்ணாச்சியினை நினைவுபடுத்தி சென்றன
தனக்கு பின் நிலைத்த அடையாளத்தை விட்டு செல்பவர்களுக்கு மரணமில்லை, சுவையான உணவினை சரவணபவன் வழங்குமளவும் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்
எனினும் அண்ணாச்சியின் வாழ்வினை பார்க்கும் பொழுது ஒரு விஷயம் உறுத்துகின்றது
அண்ணாச்சி மேல் தவறா இல்லையா என்பது விஷயமல்ல, சுப்ரீம் கோர்ட்டே அண்ணாச்சி குற்றவாளி என சொன்னபின் சந்தேகிக்க ஒன்றுமில்லை
ஆனால் ஒரு சாமான்ய ஜீவஜோதி, அதுவும் சரவண பவன் ஊழியரின் மகளான ஜீவஜோதி கணவனை இழந்த நிலையிலும் சுப்ரீம் கோர்ட் வரை சென்று செலவழித்து போராட முடிகின்றதா?
நல்லவரோ கெட்டவரோ அண்ணாச்சியின் செல்வாக்கு பெரிது, உலகெங்கும் அவரின் உணவகங்கள் டாலரிலும் யூரோவிலும் ரியாலிலும் ரிங்கிட்டிலும் கொட்டி கொடுக்கின்றன
ஆனால் சாமான்ய ஜீவஜோதி 20 வருடமாக போராடும் அளவுக்கு அவருக்கு பின்புலம் என்ன?
நிச்சயம் ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது, இதன் பின்னால் வெளிசொல்ல முடியாத கதையும் இருக்கலாம்
அண்ணாச்சி இனி இல்லை, ஜீவஜோதி வாய்திறந்து சொல்ல போவதுமில்லை
அந்த ரகசியம் அண்ணாச்சியோடே மறைந்தும் விட்டது
இட்லியோ தோசையோ, சாம்பார் கலந்த உணவினை கடைசியில் உறிஞ்சி உண்ணும் சுவையே தனி
அப்படி கடைசியாக எடுத்து உறிஞ்சினால் அதில் அவரின் குரல் கேட்கத்தான் செய்தது, அவரின் ஆன்மா அந்த சுவையில்தான் கலந்திருக்கின்றது, அதற்கு அழிவே இல்லை