அடுத்த 40 ஆண்டுகள் கழித்துத்தான் வருவார்

அத்திவரதர் தரிசனம் இன்றோடு முடிகின்றது, இனி நீர்வாசம் செய்ய புறப்படும் அத்திவரதர் அடுத்த 40 ஆண்டுகள் கழித்துத்தான் வருவார்

முன்னதாக 1979ல் வந்தார் அப்பொழுது ராமசந்திரன் ஆட்சி இருந்தது, 2019லும் அதிமுகவே ஆள்கின்றது

அதிமுக கோஷ்டிகளுக்கு இந்த கணக்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை ஆனால் இனி ஜெயக்குமார் இப்படி சொல்ல வாய்ப்பு உண்டு

“கடந்த முறை அத்திவரதர் வரும்பொழுது தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் இருந்தது இனி 2059லும் அதிமுக ஆட்சிதான் இருக்கும், அப்பொழுதும் திமுக எதிர்கட்சியாகவே இருக்கும்”

இன்னொன்றையும் கவனியுங்கள் 1979லும் காங்கிரஸ் டெல்லியில் இல்லை, 2019லும் இல்லை. போதும், இனி தமிழிசை அக்கா பார்த்துகொள்வார்

எப்படியாயினும் அத்திவரதர் ஏற்படுத்தியிருக்கும் பரபரப்பு கொஞ்சமல்ல, அரசும் காவல்துறையும் ஆலய நிர்வாகமும் ஏன் அத்திவரதரே கொஞ்சமும் எதிர்பாரா கூட்டம் இது

அப்படி குவிந்தார்கள், சோலையில் வண்டாக, நகை கடையில் பெண்களாக குவிந்து குவிந்து வணங்கினார்கள்

எதிர்பாரா கூட்டத்தால் முதலில் திகைத்த அரசு பின் அட்டகாசமாக சமாளித்தது

இதில் முதல் நன்றியினை காவல்துறைக்கு சொல்லவேண்டும், ஆம் மிக வலுவான காவலை பலபடுத்தினார்கள், ஆபத்து சூழ் இந்தியாவில் மிகுந்த விழிப்பாக அந்த வைபவத்துக்கு முழு பாதுகாப்பு வழங்கினார்கள்

அவர்கள் எக்காலமும் வாழ்த்துகுரியவர்கள்

பழனிச்சாமி அரசும் முழு ஒத்துழைப்பு வழங்கியது அவர்கள் பங்கும் மிக சரி

ஆரம்பத்தில் முணுமுணுத்த பகுத்தறிவு கோஷ்டிகள் பின்பு திரண்ட கூட்டத்தை கண்டு மகா அமைதி

நிச்சயம் இது சாதனை, மாபெரும் சாதனை

“அவர் அழைக்கின்றார் இவர் வருகின்றார்” என்ற கோஷமில்லை, ஆச்சரியம் நிகழும் என்ற அறிவிப்பில்லை ஒன்றுமே இல்லை

ஆனால் கூட்டம் தானாய் சேர்ந்தது பெரும் நதியாக பிரவாகித்தது, அத்திவரதை வணங்கி சேவித்து ஓடியது

அண்ணா பிறந்த காஞ்சி என அடிக்கடி சொல்லும் கூட்டம், அதே காஞ்சியில் அத்திவரதர் செய்திருக்கும் அமைதிபுரட்சிக்கு பின் கனத்த அமைதி.

1 கோடிபேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பங்கேற்ற கூட்டத்தை வெகு வெற்றிகரமாக நடத்தியிருக்கும் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் வாழ்த்துக்கள்

ச‌த்தியமான அத்திவரதர் உத்தம‌ வழி மாந்தரை நித்தியமாய் ஆசீர்வதிக்கட்டும்

அப்புறம் தமிழிசை அக்கா, 2059ல் அத்திவரதர் வரும்பொழுது தாமரை மலர்ந்திருக்கும். மலர்ந்த தாமரையில் அத்திவரதர் வீற்றிருப்பார் என இன்னும் சொல்லாவிட்டால் எப்படி?