மனிதர்களும் பலவகை
மரங்கள் மட்டுமல்ல மனிதர்களும் பலவகை, அந்த மனிதரிலும் மரங்கள் சிலவகை..
எங்கிருந்தோ வருகின்றார்கள், தேவைக்கு பழகுகின்றார்கள். தேவை இல்லாவிடின் நீர் தீர்ந்து போன பிளாஸ்ட்டிக் குவளை போல தூக்கி எறிந்தும் விடுகின்றார்கள்
அவர்கள் அப்படித்தான் என நகரும் முன், இவர்களா இப்படி என ஏராளமான அதிர்ச்சிகள் தாக்குகின்றன
நாம் அவர்களை அனுதினமும் நினைக்கின்றோம், கண் மூடும்பொழுதெல்லாம் கண்முன் வருகின்றார்கள்
ஆனால் அவர்களோ அப்படி ஒரு ஜென்மம் இருப்பதாக கூட கருதுவதில்லை
எவ்வளவு நெருக்கம்? எவ்வளவு பாசம்? எவ்வளவு சிநேகம்? அதில் நாமோ உருகி போகின்றோம்
ஆனால் அத்தனையும் சுயநல நடிப்பு எனும்பொழுது அது கொடுக்கும் அதிர்ச்சி ஆயிரம் அணுகுண்டுக்கு சமம்
இதற்கு ஏன் உயிரான நட்பு என பழக வேண்டும்? உதவி என கேட்டால் செய்யமாட்டோமா? அப்படியே கேட்டு தொலைத்தால்தான் என்ன?
வழிப்போக்கருக்கு செய்யும் உதவியினை யாரும் நினைப்பதுமில்லை அது அவர்களை பாதிப்பதுமில்லை
ஆனால் வழிபோக்கன் நட்பென தோளில் கைபோட்டு, ஓரிலையில் உண்டுவிட்டு இலையோடு நம்மையும் தூக்கி எறியும் வலிக்கு நிகரான வலி எதுவுமில்லை
முதிர்ச்சியற்ற அறிவு கொண்டவர்களோடும், தார தரம் கொஞ்சமும் தெரியாதாரோடும், முழு சுயநலமே கை கால் முளைத்து பேராசை மனமாய் கொண்டவர்களோடும் நட்பு கொள்ளகூடாது என்கின்றார் அவ்வையார்
அகந்தை கொண்டாரின் நட்பு அரைநாள் கூட தாங்கா என்பார் ஒரு சமணமுனி
நட்பு கொள்வதில் பெரும் நிதானம் தேவை என்கின்றது நாலடியார்
ஆனால் நாமோ எல்லோரையும் உடனே நம்பிவிட்டு சாவகாசமாய் சங்கடபடுகின்றோம்
மிக பெரும் தொழிலதிபர் முதல் பெரும் அரச பதவிகளில் இருப்பவர்களுக்கு இல்லாத கர்வம் , அதற்கு கொஞ்சமும் தகுதி இல்லா சிலரிடம் வந்துவிடுகின்றது
பெரும் மன்னர்கள் வழிதடத்தின் மண்ணை எடுத்து பூசிகொண்டு நானே மன்னன் என்ற அளவு அகந்தை அவர்களை ஆட்டுக்கின்றது
காலம் அவர்களை பார்த்து நகைப்பதை அவர்கள் அறிந்திலர்
நொடியில் மாறிவிடும் வாழ்க்கை என்பதை அந்த பதர்கள் புரிந்திலர்,
அர்ஜூனா வலிகளிலே பெரும் வலி பழகியோர் கொடுக்கும் துரோக உதாசீனத்தின் வலி என்பதை பகவான் ஏனோ சொல்ல மறந்துவிட்டான்
பழக ஒரு காலம் உண்டென்றால் பிரியவும் ஒரு காலம் நிச்சயம் உண்டு, அதில் வலிபெறவும் காலமுண்டு
வாழ்வில் நீ சந்திக்கும் ஒவ்வொருவரும் முன்பே விதிக்கபட்டவர்கள் என்பதும், அவர்கள் கொடுக்கும் இன்ப துன்பம் எல்லாம் இறைவனின் விதி என்பதும் ஞானிகள் சொன்னது
அதற்கு நாம் மட்டும் தப்பமுடியுமா என்ன?
இந்த நேரத்தில் இவர்களால் நீ முதுகில் குத்தபடுவாய் என விதிக்கபட்டிருந்தால் அதை யார் மாற்ற முடியும்?
சிலருக்கு சிக்கல் குடும்பத்தால் வரும், சிலருக்கு சோதனை அண்டை வீடு இல்லை தொழிலால் வரும்
சிலருக்கு சம்பந்தமே இல்லாதோரால் வரும், இதற்கெல்லாம் இறைவனே மூலம்
காலமே அதை செய்கின்றது, காலமே பழகவிடுகின்றது, காலமே பிரிக்கின்றது , காலமே கதறவும் வைக்கின்றது
யார் யாரெல்லாம் மகா சுயநலமாக பழகியிருக்கின்றார்கள், யாரெல்லாம் நீஇனி எக்காலமும் திரும்பியே பார்க்க கூடாது என காட்டிகொண்டிருக்கும் பரந்தாமனுக்கு நன்றி
அவரவர் செய்யும் வினை அவரவரையே சாரட்டும்
வாழ்வில் எத்தனையோ வஞ்சகர்களை கடந்து வந்தாலும், அது மீண்டும் மீண்டும் வஞ்சகரிடமே தள்ளுகின்றது
உன்னை புரிந்து கொள்ளாமல் விட்டவர்கள்தான் உனக்காக வருந்தவேண்டும், அவர்கள்தான் கலங்க வேண்டும், உன் அன்பை நம்பிக்கையினை ஏற்றுகொள்ளும் தகுதி அவர்களுக்கு இல்லை எனும்பொழுது நீ ஏன் கலங்குகின்றாய் என்ற புத்தனின் பொன்மொழிகள் முழுக்க உண்மையானவ
இனி கேட்கவே கூடாத குரல்கள், இனி பார்க்கவே கூடாத முகங்கள் என சில இருக்கின்றன
மறுபடியும் எக்காலத்திலும் அவைகள் முன் நிற்காத வரத்தை மட்டும் இறைவன் அருளட்டும்