ராபர்ட் முகாபே

சமீபத்தில் ஒரு பெருமகன் இறந்தார், ஆனால் உலக நாடுகளோ அதன் தலைவர்களோ அவனை கண்டுகொள்ளவில்லை, ஆனால் அவனுக்கும் மாபெரும் வரலாறு உண்டு

ராபர்ட் முகாபே ஜிம்பாப்வே தலைவர்

அவன் வாழ்வு முழுக்க ஜிம்பாப்வே நாட்டுக்காக, ஆப்ரிக்காவுக்காக‌ அர்பணிக்கபட்டது, முழு நீண்ட போராட்ட வாழ்வது

நமக்கெல்லாம் அரபு அரசியல் தெரியும் எண்ணெய் ஒன்றுக்காக பொம்மை தலைவர்களை வைத்துகொண்டு வல்லரசுகள் ஆடும் ஆட்டம் உலகறிந்தது மதம் மன்னர் இன்னபிற அவைகளுக்கு வாய்ப்பாயின

இதே போன்றதொரு அரசியல் பார்வை தெற்கு ஆப்ரிக்காவிலும் உண்டு, அங்கு வல்லரசுகள் அழிச்சாட்டியம் செய்ய எண்ணெய் காரணம் அல்ல இயற்கை வளம்

காடுகள் முதல் தாது சுரங்கம் வைரம் தங்க சுரங்கம் வரை அங்கு ஏராளம் குறிப்பாக தென்னாப்ரிக்க ஜிம்பாப்வே பகுதிகளில் ஏராளம்

இதை வெள்ளையன் பிடித்து வைத்து சுரண்டினான், மகா சுரண்டல்

மக்களின் அறியாமையும் ஒற்றுமையின்மையும் அவனுக்கு சாதகமாயின‌

தென் ஆப்ரிக்க பகுதி வெள்ளையனுக்கு தங்க சுரங்கமாக கொட்டி கொடுத்தது இந்தியரும் இன்னும் பல இனமும் அங்கு கொண்டு செல்லபட்டனர், அதில்தான் பின்னாளைய தில்லையாடி வள்ளியம்மை காந்தி போராட்டம் எல்லாம் நடந்தது

விஷயத்துக்கு வருவோம்

வெள்ளையன் ஆளுமட்டும் அமைதியாக இருந்த நாடு அப்படி வைத்திருந்தான் அவன்

உலகெல்லாம் கேட்ட விடுதலைகுரல் அங்கும் கேட்டது , உலக நாடுகள் எல்லாம் விடுதலைபெற்றன‌

இந்த ஆப்ரிக்கர்கள் சபிக்கபட்டவர்கள் அவர்களுக்காய் பேச யாருமில்லை

ஆப்ரிக்காவின் தாதா எகிப்து லிபியா டுனினிசியா எல்லாம் அரபு நாடுகள் பட்டியலில் இணைந்துகொள்ளும் தாங்கள் ஆப்ரிக்கர் அல்ல என சொல்லிகொள்ளும்

ஆப்ரிக்கா கண்டத்தில் இருந்தாலும் அவற்றின் நிலைப்பாடு அப்படி

இந்த எத்தியோப்பியா, காங்கோ, கென்யா, ஜிம்பாப்வே தென்னாப்ரிக்கா போன்றவை பாவபட்ட அனாதைகள் அவர்களுக்காய் யாருமில்லை

சே குவேரா காங்கோவுக்காக போராட சென்றபொழுதும் அவனால் ஆப்ரிக்கர்களை ஒருங்கிணைக்க முடியவில்லை

வெள்ளையன் இங்கு இந்து முஸ்லீம் சாதி என வைத்தது போல அங்கு இனகுழுக்களை உருவாக்கி வைத்தான்

ஒரு கட்டத்தில் மற்ற நாடுகளை விட்டாலும் தென்னாப்ரிக்கா, ஜிம்பாப்வே போன்ற வளமான நாடுகளை விட அவன் தயாரில்லை

இனவெறி கொடுமை என்றபெயரில் பெரும் சுரண்டல் நடந்தது, பரதேசி சினிமாவினை விட வலியான வரலாறு அது. அங்கே எஸ்டேட் இங்கே சுரங்கம் அவ்வளவுதான்

மக்களின் அறியாமையும் இன்னொரு சாபம், அங்கு கம்யூனிசமும் வரவில்லை ஒரு புரட்சியும் வரவில்லை

சிந்தனையில்லா மக்கள் ஒருவகை சாபம், அப்படிபட்ட மக்கள் இருக்கும் தேசம் குழப்பமாக இருக்குமே தவிர வாழா..

உலகமும் அவர்களை புறக்கணித்தது

இதில் தென்னாப்ரிக்கா நெல்சன் மண்டேலா தலமையில் போராடியது

அப்படி ஜிம்பாப்வேக்கு கிடைத்த பெருமகன் இந்த முகாபே

வரலாற்றில் லெனின், சே, மாவோ, காஸ்ட்ரோ, மண்டேலா வரிசையில் அவனுக்கும் இடம் உண்டு

ஆனால் அவன் அஹிம்சை பேசவில்லை, கம்யூனிசமும் பேசவில்லை சிங்கப்பூர் லீ போல மேற்கத்திய அடிமையும் அல்ல‌

அவனின் சிந்தனையும் சாயலும் சதாம் போல இருந்தது. ஆப்ரிக்கர் வளம் ஆப்ரிக்கருக்கே எனும் கோஷத்தை முழங்க்கினான்

போராளி, ஜிம்பாப்வேயின் அடையாளம் என பெரும் பலமாக வலம் வந்தார் முகாபே

ஜிம்பாப்வே அவர் காலத்தில் விடுதலை பெற்றது, விடுவானா வெள்ளையன்?

ஆம், தனக்கு இல்லா நாடு சண்டையிட்டு சாகட்டும் என்பது அவன் சித்தாந்தம். இந்தியா பாகிஸ்தான், இந்தியாவிலுளள குழப்பம் போல எல்லா நாடுகளிலும் அவன் விதைத்துவிட்டுத்தான் சென்றான்

முகாபே நாட்டை நன்றாகத்தான் ஆண்டார்

ஆனால் வல்லரசுகள் தொல்லை கொடுத்தன பெரும் நெருக்கடிகளை எல்லா வகையிலும் கொடுத்தன‌

முடிந்தவரை போராடினார் முகாபே, ஆனால் வஞ்சகமாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய மேற்குலகம் வெள்ளையன் இருக்கும் வரை ஜிம்பாப்வே ஒழுங்காக இருந்தது, அவன் இல்லை என்றவுடன் நாசமானது என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டன‌

பழி முகாபே மேல் விழுந்தது

முகாபே பல சீர்திருத்தங்களை செய்தார், ஆப்ரிக்க ஒன்றியம் அமைத்து கருப்பரிடம் தனி ஒற்றுமையும் பலமும் வர போராடினார்

ஆனால் அதெல்லாம் பலனளிக்கா வண்ணம் பல வகைகளில் அவரை மேற்குலகம் முடக்கி,இன கொலையாளி அது இது என பட்டம் சூட்டி குழப்பியது

ஜிம்பாப்வே கரன்சியினை உலகின் மோசமான கரன்சியாக்கி அவரை பழிவாங்கியது மேற்குலகம்

அவமானமும் வேதனையும் மேற்குலகை தனியாக எதிர்க்க முடியாத இயலாமையிலும் அந்த கடும் நிலையினையும் நகைச்சுவையாக கடந்தார் முகாபே

அவரின் நகைச்சுவை துணுக்குகளில் கலைஞர் கருணாநிதியின் சாயலும் இருந்தது, அவரின் புகழ்பெற்ற மொழிகள் சில‌

அவற்றில் எல்லாம் மேற்குலகை மறைமுகமாக நயமாக சீண்டினார், தங்கள் இயலாமையினை காட்டினார், தங்களின் அவல நிலையினை நயமாக சொன்னார்

சிரிப்பு வரும் கூடவே கண்ணீரும் வார்த்தைகள் அவை, அவன் மாபெரும் அறிவாளியாய் இருந்தலான்றி அது சாத்தியமில்லை

அவைகளில் சில இப்படியாக உண்டு

“இலைகளை ஆடையாக கொண்டு ஆட்டுமுன் நில்லாதே”

“அழகாய் இல்லை என கருப்பாய் இருப்பதாக கவலைபடாதே, எக்ஸ்ரே மெஷின் அதை காணாமல் ஊடுருவி பார்ப்பது போல் மனதை மட்டும் நன்றாக வைத்துகொள்”

“உன் ஆடு காணாமல் போய் பக்கத்து வீட்டுவீட்டில் மட்டன் சூப் வாசனை வந்தால் சுதாரித்து கொள்”

“பெண்ணுக்கு செலவழிக்கும் பொழுது உன் அன்னைக்கும் அவர்கள் முன்னால் பணம் கொடு அப்பொழுது சூனியம் என்றால் என்ன என்பதை உணர்வாய்”

“உன் டவலை சரியாக பராமரி, அதில் ஓட்டைஇருந்தால் முகத்தை சரியாக துடைக்காது”

“ஒரு பக்கம் தீயும் மறுபக்கம் முட்டாளையும் இணைப்பதுதான் சிகரெட்”

“ஒபாமா ஓரின திருமணத்தை ஆதரிக்கின்றார், சரி அவருக்கு அதில் விருப்பமென்றால் அவர் ஓரின திருமணத்துக்கு தயார் என்றால் என்னை பார்த்தபின் முடிவெடுக்கவும்”

“முன்பு வெள்ளையர் கப்பலில் வந்தனர் , ஆப்ரிக்காவில் இருந்து அவர்கள் ஐரோப்பா செல்ல பல மாதம் ஆகும்., இப்பொழுது நாம் அவர்களை திருப்பி அனுப்ப விமான சகிதம் தயாராக இருக்கின்றோம், நொடியில் செல்லலாம் ஆனால் செல்லமாட்டேன் என்கின்றார்கள்”

“கால எந்திரம் என் கையில் கிடைகுமானால் 1946க்கு முன் சென்று டிரம்பின் தகப்பனுக்கு காண்டம் கொடுப்பேன்”

இந்த நூற்றாண்டின் புரட்சியாளர்களில் ஒருவன் முகாபே, ஜிம்பாப்வே தாண்டி ஆப்ரிக்கரின் நலனுக்கும் ஒற்றுமைக்கும் பாடுபட்டான்

வெனிசுலாவின் சாவேஸ் சாயலும் அவரிடம் இருந்தது

ஒரு நல்ல மானமுள்ள அறிவுள்ள அந்த ஆப்ரிக்கனை ஆளவிடாமல் மேற்குலகம் சதி செய்தது, ஆப்ரிக்கர்களின் அறியாமையும் அதற்கு ஒத்துழைத்தன‌

ஏதேதோ கனவு கண்டு அதை செய்யமுடியாமல் செத்துவிட்ட நல்ல தலைவன் அவன்

அறியாமையும் சுயநலமும் கல்வியும் சிந்தனையும் இல்லா மானிட கூட்டம் நல்ல தலைவன் கிடைத்தாலும் வாழா

நல்ல அறிவார்ந்த இனம் முட்டாள் தலைவன் கிடைத்தாலும் வாழா

ஜிம்பாப்வே துயரம் முதல் வகை

கடைசி வரை மேற்குலகை, அவர்களின் சுரண்டலை எதிர்த்து போராடி செத்த அந்த கருஞ்சிறுத்தைக்கு வீரவணக்கம்.

நிச்சயம் உலக நாடுகள் எல்லாம் அஞ்சலி செலுத்தவேண்டிய மாபெரும் தலைவன் அவன், ஆனால் பெரும் சர்ச்சைகுரிய நபராக அவரை மாற்றுவதில் மேற்குலகம் தந்திர வெற்றி கண்டது

பெரும் கண்ணீரோடும் அஞ்சலியோடும் நடக்க வேண்டிய அவன் கடைசி ஊர்வலம் யாருக்கும் தெரியாமல் அமைதியாய் நடக்கின்றது

வெள்ளையனையும் அவன் உலகையும் ஆளுமையினையும் எதிர்த்தால் என்னாகும் எனும் கொடும் விதிக்கு அவனும் தப்பவில்லை

இது அவர்கள் காலம், ஆடட்டும்

ஒரு காலத்தின் ஆப்ரிக்க இனம் அறிவும் விழிப்பும் பெறும், அப்பொழுது அந்த மாமனிதனின் புகழ் உலகெல்லாம் பரவும்