அவ்வப்போது சில சாமிகள் பரபரப்பினை கொடுக்கும்

சாமியார்களுக்கு பஞ்சமில்லா தமிழ்நாட்டில் அவ்வப்போது சில சாமிகள் பரபரப்பினை கொடுக்கும்

இப்பொழுது சிவகங்கை சாமியார் அப்படி பரபரப்பினை கொடுத்தார், தான் இறக்க போவதாகவும் தனக்கு பின் இந்த ஊர் செழிக்க தன் கல்லறை அங்கே அமைய போவதாகவும் பரபரப்பை கிளப்பினார்

என்ன இருந்தாலும் சிவனடியார் அல்லவா? சாமியார் வேறு, அவரின் ஜீவசமாதியினை காண ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள்

ஒரு மனிதன் சாவதை காணுவதிலுமா இவர்களுக்கு ஆனந்தம்?

ஒருமாதியான சமூகமோ என்னமோ? இல்லை கூட்டத்தில் தானும் இருக்கவேண்டும் எனும் சிந்தையோ என்னமோ கூடிவிட்டார்கள்

“சாமி சாகாதீர்கள், நீங்கள் இருக்க இருக்க எமக்கு நல்லது..” என கெஞ்ச வேண்டிய கூட்டம், “அய்யா.. ஜாலி சாமி சாக போகுது அதை பார்த்தால் கோடி புண்ணியம்..” என கிளம்பிவிட்டார்கள்

அத்திவரதருக்கு கூட்டம் வந்ததில் இருந்து சாமி விவகாரம் என்றாலே கைகால் உதறும் நிர்வாகம் இங்கும் வந்துவிட்டது

கூட்டம் எல்லாம் கூடிற்று இனி சாமியார் ஜீவசமாதி அடையவேண்டும், அந்த நாள் இன்று

ஆனால் சாமி இப்பொழுது அடம் பிடிக்கின்றது, தன் முடிவினை ஒத்திபோடுவதாக அறிவித்தும் இருக்கின்றது

சிவனின் வழியில் நடப்பவரல்லவா சித்தர்? சிவனின் கட்டளைபடிதானே சாக போகின்றேன் என்றார்? இப்பொழுது சாகமாட்டேன் என்றால் எப்படி?

சிவனின் திருவிளையாடல் போலிருக்கின்றது

ஆனால் கூடிவந்த கூட்டம் விடுவதாக இல்லை

“சாமி பிளீஸ் சாமி ரொம்ப ஆசையா வந்துட்டோம் சாமி, ஏமாத்தாம செத்திருங்க சாமி..” என கெஞ்சுகின்றது

அவர் “இல்லை இல்லை மாட்டேன்” என்கின்றார்

“சாமி சாமி நாங்க பாவம் சாமி , நீர் நல்லவருல்ல யாரையும் ஏமாத்தமாட்டீர்ல, வாக்கு சுத்தம் உள்ளவருல்ல செத்துருங்க பிளீஸ் ..”என உருகி கேட்கின்றது

அவரோ மாட்டேன் என அடம்பிடிக்கின்றார்

“யோவ் இவ்வளவுதான் மரியாதை , ஒழுங்கா சாக போறியா இல்லையா, சாமியார்ன்னா சாவு இல்ல நீ போலி சாமியார்னு அடிச்சி விரட்டிருவோம் ..” என கூட்டம் கல்லை, கம்பை எல்லாம் எடுக்கின்றது

அநேகமாக சாமியினை கதற கதற உள்ளே வைக்காமல் வரமாட்டார்கள் போல..