நாம் மாறிவிட்டோம், முழு சங்கியாகிவிட்டோம்???
நாம் மாறிவிட்டோம், முழு சங்கியாகிவிட்டோம் என சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுவிட்டு கிளம்பும் கூட்டம் அதிகரித்தாயிற்று
அப்படி என்ன எதிர்பார்த்தார்கள் என்பதுதான் தெரியவில்லை, எம்மை பொறுத்தவரை அப்படியேதான் இருக்கின்றோம், மாற்றம் என்பது எம்மில் அல்ல
அவர்களுக்கு விரும்பியது கிடைக்கவில்லை எனும் ஒருவித சலிப்பில் செல்கின்றார்கள் செல்லட்டும்
சில இடங்களில் இந்நாட்டை பற்றியும் இந்துமதம் பற்றியும் சில உயர்ந்த மதிப்பீடுகளையும் அது காக்கபடவேண்டும் என்ற கருத்து நம்மிடம் இருக்கலாம் அது அவர்களுக்கு பிடிக்காதிருக்கலாம்
வரலாற்றை தேடுபவன் என்றமுறையில் அரேபியாவினை பார்க்கின்றேன், யாருக்கும் இல்லா பெரும் வரலாறும் பெருமையும் அவர்களுக்கு உண்டு
சுமேரிய நாகரிகம், மெசபடோமியா நாகரிகம் என உலகுக்கே வழிகாட்டிய நாகரீகம் அது, கலையும் கணிதமும் அங்கு கொஞ்சி விளையாடின, அரேபிய கவிதை கதை முதல் பண்டைய அரசின் சாதனை வரை அப்படி
ஹமுராபியும் நெபுகாத்நேச்சரும் சிங்கமென வந்த பகுதி
இன்று என்னாயிற்று? எல்லாம் மூடபட்டாயிற்று புதிய மத எழுச்சியில் அவர்களின் நாகரீகம் பாலைவனத்துக்கு அடியில் புதைக்கபட்டு அவர்களுக்குள் சண்டையிட்டு யாரோ வருகின்றார்கள் என்னவோ நடகின்றது, அந்த பூமி தன் தனிதன்மையினை இழந்தாயிற்று
இந்த எகிப்து எப்படிபட்ட நாகரீகம்? தனி இனம் தனி மதம் தனி அடையாளங்களை கொண்டிருந்தது, அதுவும் இப்பொழுது இல்லை
அலெக்ஸாண்டரின் மதம் இன்று கிரீஸில் இல்லை பண்டைய கிரேக்க மதமும் நாகரீகமும் இல்லை
ஜூலியஸ் சீசரின் மதமும் நாகரிகமும் கலாச்சாரமும் உலகாண்ட ரோமை இனத்தின் பெருமையினை கிறிஸ்தவம் அமுக்குவிட்டது
அது மாயன்களை அமுக்கியது, செவ்விந்தியர்களை அமுக்கியது
உலகின் மிகபெரும் சாம்ராஜ்யமான செங்கிஸ்கானின் கல்லறை கூட இல்லை, அவனின் மாபெரும் சாம்ராஜ்யத்தின் மதத்தின் கலாச்சாரத்தின் சுவடு கூட இன்றி துடைத்துவிட்டார்கள்
பன்னெடுங்கால தொடர்ச்சிகள் மிக நீண்ட தலைமுறையாக அழியாமல் தொன்மை மாறாமல் பாதுகாக்க்கபடுவது உலகின் மிக சில இடங்களே
அது சீனத்து சில பகுதிகள், ஜப்பானின் சில பகுதிகள் அதன் பின் இந்த அருமை பாரத நாடு
ஆம் உலகில் ஐரோப்பியருக்கு அடிமைபடா சீனாவும் ஜப்பானும் அதை காப்பது பெரிதல்ல
கிரேக்கர் தொடங்கி பிரிட்டானியர் வரை சிக்கிய இந்த தேசம் போராடி தன் மதத்தையும் அடையாளத்தையும் தன் தனிதன்மையும் காப்பதுதான் ஆச்சரியம்
புத்தம் சமணம் இஸ்லாம் கிறிஸ்தவம் என எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அந்த தர்மத்தின் ஜோதி அணையவில்லை
கிரேக்கம் , எகிப்து , அரேபியா, மங்கோலியா, மாயன், செவ்விந்தியர் என தன் சமகால பண்டை மதங்கள் அழிந்துவிட்ட நிலையிலும் அதன் ஜோதிமட்டும் தனித்து இந்த உலகில் நிற்கின்றது
பண்டைய பாபிலோன் இல்லை, எகிப்தின் நகரங்கள் இல்லை, கிரேக்க நகரங்கள் இல்லை , பண்டைய கலாச்ச்சார அடையாளங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. மிக தொன்மையாக எஞ்சி இருப்பது காசியும் இமயமலை பகுதிகளே..
அது போதிக்கும் தர்மமுமே
அதை கலாச்சார பெருமையுடன் நாம் காக்க வேண்டுமா இல்லை அரேபியா, எகிப்து, ரோம் போல அடையாளமற்று போகவிட வேண்டுமா?
உருக்கமாக ஒன்று கேட்கலாம்
அழிந்துவரும் உயிரினம் என எப்படி எல்லாம் துடிக்கின்றீகள்? அழிந்து வரும் தாவரம் காடுகள் என எப்படி எல்லாம் வேதனைபடுகின்றது உலகம்
ஒவ்வொரு தாவரத்தின் விதையினையும் சேர்த்து வைக்கின்றது பிரிட்டன், ஒவ்வொரு உயிர்ன் அடிப்படை விஷயங்களை வெளிநாட்டில் சேமித்து வைக்கின்றார்களே ஏன்?
அழிந்தால் உருவாக்கி கொள்ள, ஆம் அந்தபாடு படுகின்றார்கள். இழக்கும் வரை அதன் அருமை தெரியாது ,இழந்துவிட்டு தேடினால் கிடைக்க்கவே கிடைக்காது
அப்படி திரும்ப கிடைக்கா பொக்கிஷங்களில் இந்து தர்மமும் இன்று
அதைத்தான் நாம் சொல்கின்றோம், ஒவ்வொரு மதத்துக்கும் ஏகபட்ட நாடுகள் இருக்கின்றன
ஆனால் இந்த பறவைக்கு வேறு எங்கு கூடு உண்டு? இந்த புலிக்கு வேறு எங்கு குகை உண்டு, இந்த மீன் வேறு எந்த நீரில் வாழும்
அழகான பாண்டா கரடி சீனத்துகாடுகளில் மட்டும் வாழ்வது போல, பென்குயின்கள் அண்டார்டிக்காவில் மட்டும் வாழ்வது போல இந்த மதம் இங்குமட்டும்தான் வாழும் , வாழ முடியும்
அதை வாழவிடுங்கள் என்றுதான் சொல்கின்றோம், அது அதன் போக்கில் வாழட்டும் வளரட்டும்
இதில் உங்களுக்கு கேள்வி எழலாம், வட இந்தியாதானே இந்துத்வா நாம் அப்படி அல்ல என்பீர்கள்
நிச்சயம் நம்மை விட அவர்களுக்கு வலி அதிகம், அவர்கள் இழந்தது அதிகம்
சோமநாதபுர ஆலயம் அழிவினை நாம் சந்தித்தோமா? இல்லை ராமனுக்கான இடத்தை நாம் பறிகொடுத்தோமா?
அதுவுமில்லை நம் பக்கம் இந்து ஆலயங்கள் அகற்றபட்டதா? அந்த வலி அவர்களுக்குத்தான் புரியும்
இன்னும் தேசம் பிரிந்து நடந்த கலவரத்தின் வலிகள் அவர்களுக்கு மிக அதிகம், அந்த வலியில் அங்கு சில சத்தங்கள் அதிகமிருக்கலாம்
நமக்கோ நாயக்க மன்னர்கள் அக்காலத்தில் எழும்பியதாலும் மராட்டிய அரசு இருந்ததால் இன்னும் பல விஷயங்கள் சாதகமாக இருந்ததால் வலியான சம்பவங்கள் இல்லை
அவர்கள் வலிபெரிது, அதனால்தான் சீக்கிய சமூகம் இன்றும் இந்தியாவோடே நிற்கின்றது
அகில இந்திய கட்சி என்பதாலும் இந்நாட்டின் தொன்மங்களை காக்க விரும்பும் கட்சி என்பதாலும் அவர்களின் சில கொள்கைகள் நாட்டின் பண்டைய விஷயங்களை பாதுகாக்கும் என்பதாலும் அதில் சில உடன்பாடானவை
எல்லா கொள்கையும் அல்ல, அதுவும் ஊழலுக்கும் குடும்பத்துக்கும் அப்பாற்பட்டு நிற்கும் மோடியினை ஏன் வீணாக பழிக்க வேண்டும்?
இங்கு பொக்கிஷமாய் காத்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய விஷயம் ஏராளம் உண்டு, முந்தைய தலைமுறையிடம் பெற்றதை அடுத்த தலைமுறைக்கு கற்று கொடுத்துவிட்டு செல்ல வேண்டும், அழியவிட கூடாது.
உலகின் அதிசயங்கள் என இன்று சொல்லும் 7 அதிசயங்கள் அதன் பண்டைகால 7 அதிசயங்கள் அருகில் கூட வாரா
அந்த பண்டைய 7 அதிசயங்கள் இன்று உலகில் இல்லை, ஆம் இல்லவே இல்லை
அந்த 7 அதிசயங்களை விட மகா அதிசயமும் ஆச்சரியமுமானது இந்துமதம்
அதை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு, நாம் அந்த கடமை எமக்கு இருப்பதாக கருதுகின்றோம்
அந்த கடமை என்பதெல்லாம் இல்லை இந்நாடு எகிப்து ரோம் கிரீஸ் போல தன் அடையாளங்களை தொலைத்து வந்தவழி தெரியாமல் செல்லும் வழியும் தெரியாமல் குழம்பி திரியட்டும் என நினைப்போர் ஓடிகொண்டிருகின்றார்கள்
ஆழமாக நிதானமாக சிந்தித்தால் உங்களுக்கும் உண்மை புரியும்..
நம்மை புரிந்துகொள்ளாதோர் விலகுவதே நமக்கும் நல்லது
அதில் ஒருசிலர் மிக இக்கட்டான நேரத்தில் உதவியவர்கள், அந்த நன்றியினை மட்டும் நாம் மறக்கவில்லை
என்றாவது ஒருநாள் நாம் அவர்களை சந்திக்கும் பொழுது நாம் மாறவில்லை என்பதை எம் கண்ணீர் காட்டும்