நிறைய கொடுத்தார்கள்

எமக்கு மோடி, மன்மோகன், காங்கிரஸ், பாஜக என வித்தியாசமெல்லாம் இல்லை

இதே மன்மோகன்சிங் காங்கிரஸ் முக்கியம் அல்ல, நாடுதான் முக்கியம் என வெளிவந்து ஆட்சியினை பிடித்திருந்தாலும் நாம் இப்படித்தான் எழுதுவோம்

ஆனால் அவருக்கோ காங்கிரஸும் சோனியாவும் முக்கியமாகிவிட்டார்கள், வேறு என்ன செய்ய சொல்கின்றீர்கள்?

நிச்சயம் தனக்கான வாய்ப்பினை மன்மோகன் சிங் கெடுத்துகொண்டார்

1971 வங்க யுத்தத்தின் பின் பீல்டு மார்ஷல் மானெச்காவுக்கு பெரும் ஆதரவு இருந்தது அவர் நினைத்தால் அரசியலுக்கு வந்து பிரதமராகியிருக்கலாம்

அவ்வளவு வரவேற்பு

ஆனால் அவருக்கும் இந்திராவுக்குமான பனிபோரில் இந்திராவே வென்றார் அதன் பின் அணுகுண்டு மிசா என இந்திரா என்னவோ செய்து மானெக்ஷாவினை மக்களிடமிருந்து மறைத்தார்

மானெக்சா ஊட்டியில் அமைதியாக ஓய்வெடுக்க வந்தார்

ஆம் மானெக்சா செய்த தவறைத்தான் பின்பு மன்மோகனும் செய்தார்

மன்மோகன் இருக்கும் பொழுது ராகுலை முன் நிறுத்தியது யார் தவறு?

தேசத்தின் மேல் பற்று உள்ள கட்சி என்றால் காங்கிரஸ் அதை செய்யுமா? அதை திமுக ஆதரிக்குமா? இல்லை மன்மோகன் பார்த்துகொண்டிருபபரா?

சுயநலம் அவர்களிடம் மொத்தமாக குவிந்திருந்தது, மறுப்பார் உண்டோ?

ஆக தவறு எம்மிடம் இல்லை

நாம் பாஜகவிடம் பணம் வாங்கினோம், அதற்கு முன்பு திமுகவிடம் வாங்கினோம், காங்கிரசும் கொஞ்சம் கொடுத்தது

புலிகளை கண்டித்த வகையில் சிங்களனும் கொடுத்தான்

மொசாத்தினை எழுதிய வகையில் இஸ்ரேலும், பாலஸ்தீன நியாயத்தை எழுதிய வகையில் ஹமாசும் இன்னும் சதாமின் சன்னி பிரிவும் நமக்கு அள்ளிகொடுத்தன‌

பின்லேடனின் நியாங்களை சொன்ன வகையில் அல்கய்தாவும் சில பில்லியன் அனுப்பியது

அந்த ஹோசிமினை பற்றி சொன்னதால் ஏழை வியட்நாம் கூட சில சாக்கு மூட்டை அரிசி அனுப்பியது

காஸ்ட்ரோவின் கியூபா கொடுத்தது, ஏன் தென்னாப்ரிக்காவின் தமிழர் கூட காந்திக்கு பின்பு நன்கொடையினை எனக்குத்தான் அனுப்பினார்கள் தில்லையாடி வள்ளியம்மைக்கு எழுதியதற்காக‌

இன்னும் கிளைவ் கதைக்காக பிரிட்டனும், நெப்போலியனை எழுதியதற்காக பிரான்சும் பில்லியன் டாலரை கொடுத்தன‌

ஏன் சில்க் ஸ்மிதாவினை எழுதியதற்கு கூட அந்நாளைய இளசுகளான கிழடுகள் பொற்கிழி அனுப்பியிருக்கின்றன‌

நிறைய விஷயத்தை பணம் பெற்று எழுதியிருப்பதால் எவ்வளவு யார் அனுப்பினார்கள் என்று கூட தெரியவில்லை

ஐன்ஸ்டீன், எடிசன் வம்சம் எல்லாம் பணம் கொடுத்தன‌

கண்ணனை பற்றி எழுதி ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் இருந்து பி எம் டபிள்யூ கார் கொடுத்தார்கள், அது நீளமாக இருப்பதால் பார்க்கிங் சிரமம் அதனால் மறுத்துவிட்டேன்

நிறைய பணம் குவிந்திருகின்றது, இப்பொழுது ஆர்.எஸ்.எஸ் கூட செக் அனுப்பியிருக்கின்றது

கலைஞரை கூட பணம் வாங்கி விட்டுத்தான் பார்த்தேன் போதுமா? நிறைய கொடுத்தார்கள்.

நிறைந்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்றால் ஊட்டியில் படுகா இன மக்கள் வாழும் பகுதியில் பொற்கோவில் ஒன்றை கட்டி சாய்பல்லவி எனும் தெய்வத்தின் ஆலயமாக மாற்ற போகின்றேன்

அதற்கு ஆறுகால பூஜை நடத்த பணம் வேண்டுமல்லவா? அதனால் ரஷ்ய புட்டீனை பற்றி எழுதி சீனாவின் ஜிங்பெங்க் பற்றி எழுத போகின்றேன்

மறுபடியும் ஜூலியஸ் சீசரை தொடங்கினால் இத்தாலி பணம் வரும் அதில் தலைவி சாய்பலல்விக்கு தங்க தேர் அமைக்கலாம்

வேண்டாம் தங்க ஹெலிகாப்டரே வாங்கலாம், தேவதை வானத்தில் வருவதுதான் முறை..