தெய்வீக அவதாரம் சீரடி சாய்பாபா

யுகங்கள் தோறும் அவதரிக்கும் பகவான், இக்காலத்திலும் அவ்வப்போது அவதரித்து கொண்டேதான் இருக்கின்றார், அப்படி ஒரு தெய்வீக அவதாரம் சீரடி சாய்பாபா

அவனி பிறப்பும் பூர்வீகமும் யாருக்கும் தெரியாது, உறுதியான தகவல் இல்லை. அவரின் இயற்பெயர் கூட தெரியாது

முகமதிய பெரியவர் ஒருவர் அவரை வளர்த்திருக்கின்றார் அவர் இறந்தபின் தேஷ்முக் எனும் திருப்பதி ஏழுமலையான் பக்தர் வளர்த்திருக்கின்றார், அவர் ஒரு சன்னியாசி கோல குரு அவரிடம்தான் சீடராக இருந்திருக்கின்றார் சாய்பாபா அல்லது அவருக்கு அன்று என்ன பெயர் என்பது தெரியவில்லை

அதன் பின் ஏதோ ஒரு விவகாரத்தில் அந்த குருநாதர் இவரை ஆசீர்வதித்து அனுப்பியிருகின்றார் 13 வயதில் சீரடி எனும் ஊருக்கு வருகின்றார் பாபா, அன்றிலிருந்தே அதிசயங்கள் ஆரம்பிக்கின்றன‌

இமயமலை யோகிகள், விஸ்வாமித்திரர், அகத்தியர், இயேசுவும் அவர் சீடர்களும் செய்த மகா மகா அற்புதங்களுக்கு கொஞ்சமும் குறையாதது சாய்பாபாவின் அற்புதங்கள்

அதுவும் சீரடியினை விட்டு பல இடங்களுக்கு சுற்றிவிட்டு மறுபடியும் சீரடியில் வந்து அவர் அமர்ந்தபின் அவரின் யுகம் ஆரம்பிக்கின்றது

மசூதியினை அடுத்த வேப்பமரத்தடியில் இருந்து தன் அவதார வாழ்வில் ஜொலிக்க ஆரம்பிக்கின்றார் அவர், மக்கள் அவரை சாய் என அழைக்கின்றனர், சாய் என்றால் சுவாமி என பொருள், பாபா என்றால் அப்பா என பொருள்

தகப்பன் சாமி, சாமி நாதன், ஞான தந்தை எனும் பொருளில் சாய்பாபா என அழைக்கபட்டார், அப்பெயரே அவரின் அவதார பெயருமாயிற்று

18ம் நூற்றாண்டின் மாபெரும் இந்து அவதாரமாக திகழ்ந்தார் பாபா, தெற்கே அய்யா வைகுண்டரை நாராயணின் அவதாரமாக மக்கள் வணங்க, வடக்கே சாய்பாபா பெரும் மகானாக போற்றபட்டார்

அவருக்கு கூட்டம் பெருகியது, சீடர்கள் பெருகினர். சீரடி நோக்கி தேசமே அணிவகுத்தது

அவரை நம்பி சென்றவர்களுக்கு தீரா நோய்கள் தீர்ந்தன , தீரா சிக்கல் தீர்ந்தது, தடை விலகியது இன்னும் ஏராளமான அற்புதங்கள் நடந்தன‌

வள்ளலார் போல அன்னதானமும் செய்தார் பாபா, அவரின் சீடர்கள் கல்விபணியும் மேற்கொண்டனர்

பாபாவிடம் இருந்த மாபெரும் சிறப்பு மதங்களை கடந்து அவரின் தெய்வீக தன்மை கொண்டாடபட்டது

மசூதியும் கோவிலும் அவருக்கு வேறுபாடானதாக தெரியவில்லை, மத கண்ணோட்டத்தில் மக்களை அவர் பார்க்கவே இல்லை. தன்னில் ஊறிகொண்டே இருந்த தெய்வீக ஓளியினை எல்லா மக்களுக்கும் பாய்ச்சினார்

12 ஆண்டுகாலம் அந்த சீரடியில் சுடர்விட்டு எரிந்த அந்த தெய்வ அவதாரம் இதே நாளில் (1918) பரம்பொருளுடன் இரண்டற கலந்தது

ஞானிகளும் யோகிகளும் இறந்தபின்பே அசுரவேகம் காட்டுவார்கள் இயேசுநாதரை போல, சாய்பாபாவும் அதன் பின் அரூபியாக ஜொலிக்கின்றார்

இன்று உலகெல்லாம் பெரும் பிரிவுகளுடனும் பெரும் ஞான சபையாகவும் கல்விசாலை அமைக்கும் பீடமாகவும் சீரடி திகழ்கின்றது

இயேசுவுக்கும் சாய்பாபாவுக்கும், இயேசுவுக்கு பின்னரான திருச்சபைக்கும் சாய்பாபாவுக்கு பின்னரான தொண்டுக்கும் ஒரு வித்தியாசம் பார்க்க முடியாது

இயேசு சிலுவையில் மரித்தார் சாய்பாபா மரிக்கவில்லை என்பது தவிர ஒரு வித்தியாசம் காணமுடியாது

அதே போதனை, அதே எளிமை , அதே புதுமைகள், அதே வார்த்தைகள் , அதே தொழுநோயாளிகள், அதே விசுவாசம் இன்னபிற‌

நம்பிக்கை பொறுமை அன்பு என இயேசுவின் இன்னொரு அவதாரமாகவே வாழ்ந்தார் பாபா..

இருவரின் போதனையும் வாழ்வும் நோக்கமும் தத்துவமும் ஒன்றே….

இன்றும் கோடிகணக்கான மக்கள் சாய்பாபாவினை கண்ணனின் அவதாரமாக கருதி வழிபடுகின்றானர்

திருப்பதிக்கு பின் அதிக மக்கள் வருவதும் அதிகமான காணிக்கை குவியுமிடம் ஷீரடியே

பகவான் அனுப்பிய அந்த மாபெரும் அவதாரம் இன்றும் அரூபியாய் வாழ்கின்றது, தன்னை நம்பும் மக்கள் எங்கிருந்தாலும் என்ன நினைத்து வேண்டினாலும் நொடியில் அவர்கள் கண்ணீரை துடைத்து காத்து கரம்பிடித்து வழிநடத்துகின்றது

இந்த மண்ணைவிட்டு அந்த மகா புனித அவதாரம் நீங்கிய நாள் இது எனினும் அது விஸ்வரூபமாய் ஜொலிக்க தொடங்கிய நாளும் இதுவே

கோடிகணக்கான பக்தர்கள் அவருக்கு உண்டு, அனுதினமும் பெருகும் பக்த கூட்டமும் உண்டு அந்த ஞான கடலில் அனுதினமும் கலக்கும் பக்தர்கள் லட்சோப லட்சம்

நேரில் காணும் தெய்வமாக , நொடியில் அவரை உள்வாங்கும் அவதாரமாக, நினைத்தபொழுதிலே அவரோடு கலந்து அவரின் அதிசய தெய்வீக தன்மையினை உணரும் அபூர்வமாக அவரை மக்கள் ஆனந்தமாக கொண்டாடுகின்றார்கள்

கோடான கோடி மக்களை உலகெல்லாம் நேற்றும் இன்றும் என்றும் வாழவைக்கும் அந்த ஞான அவதாரத்தின் பக்தர்கள் அவரின் மறைந்த தினத்தை உருக்கமுடன் நினைவு கூறுகின்றார்கள்

விவேகானந்தரை போலவே மாபெரும் அடையாளமிட்டு இந்து மரபில் அமர்ந்திருப்பவர் சாய்பாபா..

பாரதத்தின் தன்பெரும் அவதாரத்தை நாமும் வணங்கி, கண்ணனின் இயேசுவின் மறு அவதாரமாக , வடநாட்டு அய்யா வைகுண்டராக ஜொலித்த நாயகனை நெஞ்சில் நிறுத்தி வணங்கலாம்

தன்னை மனமார நினைக்கும் பக்தர்களை அவர் எந்நாளும் ஆசீர்வதித்து காத்துகொண்டே இருக்கின்றார்..