மிக அழகான அனுபவம் அது

ஒரு வழியாக யோகியின் சுயசரிதை எனும் நூலினை வாசித்து முடித்தாகிவிட்டது, மிக அழகான அனுபவம் அது. ஆன்மீக கடலில் படலில் பயணமும் நீர்மூழ்கி பயணமும் செய்தது போல் அப்படி ஒரு ஆச்சரியமான நிறைவு

மொழிபெயர்ப்பு தத்துவ நூல் என்பதால் மிகுந்த நேரம் எடுத்து படிக்க வேண்டியதாயிற்று, ஒவ்வொரு வரியினை படிக்கவும் மறுபடி அதை புரிந்துகொள்ளவும் கொஞ்சம் நேரம் எடுக்கத்தான் செய்கின்றது, மற்ற நூல்களை போல் இதை வேகமாக கடக்க முடியாது

மற்றவர்கள் எப்படி இந்நூலை புரிந்துகொள்வார்கள் என்பது எமக்கு தெரியவில்லை, எகிப்து பிரமீடில் ஒருஇரவில் தனியாக தங்கிய மாவீரன் நெப்போலியன் மறுநாள் சொன்னான் “நான் அங்கு கண்டதை எல்லாம் சொன்னால் யாரும் நம்பமாட்டீர்கள் அதனால் அவைகளை என் சொந்த அனுபவமாக வைத்துகொள்கின்றேன்”

அப்படித்தான் இந்நூலை நாமும் சொல்ல வேண்டி இருக்கின்றது ஆனால் சில விஷயங்களை மட்டும் பதியலாம்

அந்த யோகி ஒரு வார்த்தையும் நிச்சயம் மிகைபடுத்தியோ இல்லை கூட்டியோ சொல்லவில்லை. அவர் சொல்லும் அந்த ஆச்சரியமான நிகழ்வுகள் எல்லாம் நாம் வணங்கும் அந்தோணியாரின் வாழ்விலே அவர் செய்ததே

ஒரு மனிதர் இரு இடங்களில் காட்சி கொடுத்தல், இறந்தவர்களுக்கு உயிர்கொடுத்தல் இன்னும் ஏகபட்ட நிகழ்வுகளை யோகி தன் குருநாதரில் நேரில் காண்கின்றார். அந்தோணியாரின் வாழ்வில் நாமும் காண்கின்றோம்

தன் குருநாதர் மறுபடியும் உயிரோடு வந்ததில் இயேசுவினை கண்ட அந்த தோமாவின் நிலை தெரிகின்றது

யோகி மிகமிக பரந்த மனப்பான்மை கொண்ட மாபெரும் குரு, அவர் பைபிளை போப்பாண்டவரை விட நுணுக்கமாக அறிந்திருக்கின்றார், கிறிஸ்தவ பாதிரிகளுக்கு தெரியாத நுண் இடுக்கு கூட அவருக்கு தெரிகின்றது

அந்த ஞானஸ்நான யோவானுக்கும் இயேசுவுக்குமான தொடர்பு, இயேசுவுக்கும் பழைய ஏற்பாடு எலியாசுக்குமான தொடர்பு என மனிதர் விவரிக்கும் இடங்களில் இதுகாலம் கேட்ட கிறிஸ்தவ போதனைகளுக்கு தலைகீழ் திருப்பம் கொடுத்து அசத்துகின்றார் மனிதர்

அவருக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவமும் அவர் சந்தித்த மனிதர்களும் ஆச்சரியங்கள் அல்ல, 2000 ஆண்டு கிறிஸ்தவ அதாவது கத்தோலிக்க கிறிஸ்துவத்தை படித்தால் அவை எல்லாம் உண்மையே

பைபிளின் ஒவ்வொரு வரிக்கும் நிதர்சனமான உண்மையினை தகுந்த எடுத்துகாட்டுகள் மூலம் விவரிகின்றார்

ஜெகதீஷ் சந்திர போஸின் வரலாறும் அவரின் தத்துவமும் இந்துமத கொள்கைகளும் என மனிதர் விளக்கும்பொழுது சர்வ புலனும் அடங்கிவிடுகின்றது

ஐன்ஸ்டீனின் தியரியினை அவர் விளக்கும் இடம் அப்படியே கட்டி போடுகின்றது, ஐன்ஸ்டீனின் தியரி அந்த அணுதியரியுடன் அவர் ஒப்பிடும் பொழுது பல விஷயங்களை காட்டுகின்றார்

அதாவது அணு என்பதால் ஆன உலகம் இது, அணுவினை விரித்தால் பொருளின் அளவும் விரியும், அணுவினை சுருக்கினால் பொருளின் அளவும் சுருங்கும், இதுதான் பகவானின் வாமண அவதாரம் மற்றும் விஸ்வரூப அவதாரம் என நமக்கே விளங்குகின்றது

இந்த பெர்முடா முக்கோணத்தின் மர்மத்தை விஞ்ஞான ரீதியாக எப்படி விளக்குகின்றார்களோ அதை அவர்களுக்கு முன்பாகவே இந்துமத ஆன்மீக கொள்கைகளுடன் விளக்குகின்றார்

ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை அவர் விளக்கும் விதம் அதுவும் இந்திய ஞான தத்துவத்துடன் பொருத்தி சொல்வதெல்லாம் மகா மகா ஞானத்தின் உச்சம்

ஜெகதீஷ் சந்திரபோஸ் எனும் மாபெரும் விஞ்ஞானி தன் ஆய்வில் உலோகங்களுக்கும் சில உயிர்தன்மை உண்டு என்பதை சொன்னான், இன்னும் இந்திய ஆன்மீக தன்மையினை அறிவியலில் கண்டான் அதை மேற்குலகம் விரும்பவில்லை என அவர் சொல்வதெல்லாம் ஆச்சரியபடும் தகவல்

ரேடியோவினை கண்டறியும் மூல வழியினை சொன்னது சந்திரபோஸ் என்பது எல்லோரும் அறிந்தது, அந்த மனிதரை உலகம் சரியாக பயன்படுத்தவில்லை

இன்னும் ஏராளமான ஆச்சரிய தகவல்கள், குறிப்பாக அந்த ஹிரண்ய உலக மாந்தர்கள் புராண கதையில் வரும் பாத்திரம் போலவே இருக்கின்றார்கள்

யோகி உலகமெல்லாம் சுற்றி பெரும் அனுபவமும் பெற்றிருக்கின்றார், எல்லா மதத்தையும் படிக்கவும் அதன் ஞானிகளை சந்திக்கவும் அவர் தயங்கவில்லை

அமெரிக்காவில் நம்மாழ்வார் சாயலில் ஒருவரை சந்திக்கின்றார், ஆம் மரங்கள் செடிகள் கொடிகளோடு பேசி அவற்றை வளர்க்கும் கலை அவரிடம் இருந்திருக்கின்றது, யோகி அதை தெளிவாக பதிகின்றார்

ஐந்து காயங்களை ஏற்ற ஐரோப்பிய கிறிஸ்தவ புனிதை, உண்ணாமலே சூரிய ஒளியில் வாழும் வங்க பெண் என அவர் சந்தித்த அதிசய நபர்களில் ஆன்மீக வாழ்வின் அதிசயம் எல்லா மதத்தாருக்கும் சமம் என்பதை அறுதியிட்டு சொல்கின்றார்

ஒரு கிறிஸ்தவன் கிறிஸ்துவினை நம்ப வேண்டும் அவரின் வாழ்வினையும் அவரை பின்பற்றிய புனிதர்களையும் நம்ப வேண்டும், அப்படி நம்பும்பொழுது அவர்களின் செயற்கரிய செயல்களையும் நம்ப வேண்டும்

அதை நம்பும்பொழுது கண்டிப்பாக இந்த யோகியினையும் நம்பித்தான் ஆகவேண்டும், ஆம் உச்ச ஆன்மீகவாதிகளுக்கு எல்லாமே சாத்தியம்

இந்த நூலை தவறவிட்டிருந்தால் இயேசுவின் வாழ்வுக்கும் அவர்களின் புனிதருக்கான அதிசய வாழ்வுக்குமான பல விஷயங்களை நாம் தவறாகவே புரிந்திருப்போம், யோகி மிக சரியான கோணத்தில் அதை பார்க்கின்றார்

புரியாத பல விஷயங்களை புரிந்து கொள்ளமுடிந்தது, மதங்களை பற்றிய பெரும் புரிதலும் தெளிவும் ஏற்பட்டது. குறிப்பாக கிறிஸ்தவத்தை பற்றிய தெளிவு

நாம் கிறிஸ்துவினை தனியாக பார்ப்பவர் அல்ல, யூத மத கொள்கைகளுடனே அவரை பொருத்தி பார்க்காமல் கிறிஸ்தவத்தை தெரிந்து கொள்ளமுடியாது, நாம் அவரை அதன் தொடர்ச்சியாகவே பார்த்தோம்

அவரும் ஒரு இடத்திலும் நான் கடவுள் என சொல்லவுமில்லை, கடவுளின் வாழ்வினை வாழும் அவரின் மகன் என்ற பொருளில்தான் போதித்தார்

இயேசு யூத ஞானிகளில் தனித்து நிற்கின்றார், அதை பைபிளே சொல்கின்றது ஏன் என்பதற்ககான விடையினை யோகிதான் சொல்கின்றார்

ஆம், இயேசுவிடம் இந்திய ஞானமரபின் தாக்கம் இருந்தது இந்நூலை படித்தபின்புதான் தெரிகின்றது, இயேசு சாதாரண பிறப்பு அல்ல‌

அவர் பிறக்கும்பொழுதே 3 ஞானிகள் கீழ்திசையில் இருந்துசென்று அவரை பணிந்திருக்கின்றார்கள், 12 வயதிலே ஞானத்தை தேடி ஜெருசலேம் ஆலயத்தில் தங்கி இருக்கின்றார்

ரோமர் பலத்தை தேடுவதும், கிரேக்கர் அறிவை தேடுவதும் யூதர் தெய்வீக ஞானத்தை தேடுவதும் அந்நாளைய வழக்கம்

இயேசு அப்படி தேடி ஓடி பல விஷயங்களை கண்டறிந்து அதை யூத குலத்திற்கு சொல்லியிருக்கின்றார், அவர் இரவெல்லாம் ஜெபித்தார் என்பதை இரவெல்லாம் தியானித்தார் என்றும் பொருள் கொள்ளலாம்

இயேசு ஒரு யூத யோகி, இமயமலை சாயலில் உருவான அதன் தாக்கத்தில் உருவான யோகி அவரால் ஆயிரம் யோகிக்களை அவருக்கு பின்னால் உருவாக்க முடிந்ததும் அது வளர்ந்து நிற்பதும் இப்படித்தான்

அதுவரை எந்த இறைவாக்கினரும் உடைக்கமுடியா யூத மதம் இயேசுவுக்கு பின்னால் உடைந்ததும் இப்படித்தான், இவர் எங்களுக்கானவர் அல்ல அவர் வேறுமாதிரி வருவார் என யூதன் எதிர்பார்த்திருப்பதிலும் உண்மை இருக்கலாம்

வாசிப்பால் பாதியும் உணர்வால் மீதியினையும் உணர வைக்கும் அற்புதமான நூல் இது

இமயமலை என்பது ரிஷிகளின் கூடம் என்பதும், பாபாஜி என்பவர் சாத்தியம் என்பதும் இன்னும் பல விஷயங்களும் புரிகின்றது

ஏன் இமயமலை ஹிந்து தர்மத்தில் கொண்டாடபடுகின்றது என்பதும், ரஜினி போன்றோர் ஏன் இமயமலைகக்கு அடிக்கடி செல்கின்றார்கள் என்பதும் புரிகின்றது

ரஜினிகாந்தின் பாபா இந்நூலை தழுவிஎடுக்கபட்ட படம், ஆனால் ரஜினியின் நல்லமுயற்சி திரைகதை இன்னும் பலவற்றில் சொதப்பிவிட்டது. ரஜினி நல்ல விஷயத்தை சொல்ல முயன்றிருக்கின்றார் அவ்வகையில் அவர் வாழ்த்துகுரியவர்

மனதால் எல்லாமும் சாத்தியம், தியானத்தால் மனதை அடக்கினால் தெய்வீக ஞானம் கிடைக்கும் , அந்த ஞானம் மனிதனுக்கு எல்லா வகை வழியினையும் காட்டும் என்பதை தெளிவாக சொல்கின்றார் யோகி

பல மத அறிவும் அவற்றை பற்றிய ஓரளவு விஷயமும் உங்களுக்கு இருந்தால், என் மதமே சிறந்தது எனும் வெறியும் மடத்தனமும் இல்லாது இருந்தால், உங்கள் மனம் கடல் போல் விரிந்து பரந்தது என்றால் , மதங்களை தாண்டி உண்மையான தெய்வீக ஞானத்தையும் அதன் மறைபொருளையும் தேடுவீர்கள் என்றால் இந்நூலை விட மிக சிறந்த நூல் இல்லை

அதுவும் கிறிஸ்தவத்தில் வளர்ந்து திளைத்தவர்களுக்கும் அதில் சில விஷயம் புரியாமல் தலையினை பிய்த்தவர்கள்ளுக்கும் இந்நூல் ஒரு விளக்கு. இந்துக்களை விட இந்நூல் கிறிஸ்தவருக்கு எளிதில் புரியும்

அந்த யோகிக்கு தலைசாய்ந்த வணக்கமும் நன்றியும், நம் சிந்தனையில் புதிய கண்ணை திறந்து வைத்திருக்கின்றார்

காலத்தால் வந்த அந்த ஞானி இன்னும் பலரின் ஞான கண்களை திறந்துவைத்து கொண்டே இருப்பார்