பல கணக்குகள் புரிந்து கொள்ளமுடியாதவை
வாழ்வில் நாம் பார்த்தவரை பல கணக்குகள் புரிந்து கொள்ளமுடியாதவை
தன் மாட்டுவண்டியிலே மகனை தன்னை அறியாமல் நசுக்கி கொன்ற தந்தையினை கண்டிருக்கின்றேன், கடைசி காலம் வரை அந்த வலி அவரிடம் இருந்தது
3 வயது குழந்தை அது ஜூஸ் பாட்டிலில் ஆசிட் ஊற்றி வைத்திருந்தான் தகப்பன், அது தெரியாமல் எடுத்து குடித்த குழந்தைக்கு உள் உறுப்பெல்லாம் காலி, இன்று அது மருத்துவ சிகிச்சைக்காக ஏங்கி நிற்கின்றது, வயது 7 ஆனாலும் மாதமொறு அறுவை சிகிச்சை வேளைக்கு ஏகபட்ட மருந்து
அந்த பெரும் பணக்காரருக்கு லாரி மட்டும் 25 இருந்தது, சில டிராக்டர்களும் இருந்தன. தன் மனைவியோடு அவர் புல்லட்டில் சென்றபொழுது தன் சொந்த டிராக்டர் வயலுக்கு செல்வதை மறித்து சில விஷயங்களை சொல்லிவிட்டு கிளம்பும் பொழுது அந்த டிராக்டர் டயரிலே விழுந்து செத்தார் அவர் மனைவி
ஆசை ஆசையாய் வெளிநாட்டு மகனுக்கு வீடு கட்டிவைத்தார் தந்தை, அவன் பிணமாக
வந்தபொழுது “உனக்கு கட்டி வச்ச வீடுய்யா..” என அவர் அழுதது இன்னும் காதிலே உண்டு
300 பவுண் நகை செய்து, அவளையும் பொறியாளராக்கி மாபெரும் மாளிகைகட்டி வைத்திருந்தாள் அந்த தாய், அவளின் மகளுக்கோ அரைமுழ கயிறே தேவையாய் இருந்தது
மகனுக்காய் 3 மாடி வீடு கட்டி வைத்திருப்பார் தந்தை அந்த மொட்டைமாடியில் இருந்து விழுந்து செத்திருப்பான் குழந்தை

குழந்தை ஒன்று வராதா? என கோவில்களிலும் மருத்துவமனையிலும் காத்திருக்கும் தம்பதிகள் பல நூறு, வந்த குழந்தை பிரிந்துவிட்ட வருத்தத்தில் சில நூறு
ஒன்றா இரண்டா மானிட துயரங்கள்?
எவ்வளவோ பெற்றோரின் வலிகளை பார்த்திருக்கின்றோம், அவைகளில் பெரும்பாலானவை யாரையும் குற்றம் சொல்லமுடியாதபடி நடந்துவிடுகின்றன
ஆசை ஆசையாய் அவர்கள் செய்த விஷயங்களே அவர்களுக்கு எமனாக விடிகின்றன
பாகனையே மிதித்து கொல்லும் யானை, தன் எஜமானையே முட்டி கொன்றுவிட்டு வருந்தி நிற்கும் மாடு
ஆற்றுவெள்ளம் வராதா என ஏங்குகின்றோம், வெள்ளம் வந்தபின் பலரை பலிகொடுக்கின்றோம்
மகிழ்ச்சியாய் வெளிகிளம்பும் பலரில் சிலர் திடீரென திரும்பமுடியா இடத்துக்கு செல்வதென்ன?
ஒரு குடும்பத்துக்கு துக்கம் உறவுகளால் வருகின்றது, இன்னொரு குடும்பத்துக்கு அக்கம் பக்கத்தால் வருகின்றது, சிலருக்கு சம்பந்தமில்லாத விஷயங்களால் திடீரென வருகின்றது
சில குடும்பங்களுக்கு தங்களாலேயே வந்துவிடுகின்றது
இதற்கெல்லாம் என்ன காரணம் என உணரும் சக்தி மானிடருக்கு இல்லை .
ஏன் வந்தது? எதற்காக வந்தது? அந்த நொடிக்கு மிக சரியாக எல்லோரையும் அங்கு நிறுத்திய சக்தி என்பது யாருக்கும் தெரியாது
ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கும் என்பது மட்டும் நிஜம்
பேருந்து ஓட்டையில் விழுந்து இறந்த குழந்தையொன்று அதன் பின் பல குழந்தைகளை காக்க வழிசெய்தது
கும்பகோணத்தில் செத்த பிஞ்சுகள் ஓலை கொட்டைகையின் ஆபத்தை சொல்லி பல்லாயிரம் குழந்தையினை காப்பாற்றியது
ஒவ்வொரு சாவும் பலருக்கு எச்சரிக்கை செய்து வாழவைக்கும் சாவாகவே அமைந்துவிடுவது வாழ்வியல் சோகம்..
பல விஷயங்கள் மனதை குழப்புகின்றன, பல வகையான சிந்தனைகள் வந்து வந்து விலகுகின்றன
இச்சிறுவனும் இன்னும் பலநூறு குழந்தைகளை காக்க வந்த சித்தர்களின் வடிவம் அன்றி வேறல்ல
அனுதினமும் குழந்தைகள் பிறக்கின்றன சாகின்றன, ஒவ்வொரு மருத்துவமனையிலும் காண கிடக்கும் காட்சி அது
ஆனால் தேசத்தையே கலங்க வைத்து ஒரு இளம்பிறப்பு மறைவது என்பதும் பெரும் தலைவர்களெல்லாம் அவனுக்கு இரங்குவது என்பதும், தேசமே ஒருவனுக்கு பிரார்திப்பது என்பதும் சாதாரணம் அல்ல
அவன் வணங்கதக்கவன், கடந்த பிறவியில் ஏதோ ஒரு விஷயத்தின் தொடர்ச்சியாக இங்கு வந்து பிறந்து எல்லோரையும் கலங்க வைத்துவிட்டு சென்றிருக்கின்றான்
ஏதோ ஒரு பெரும் அசம்பாவிதம் அவனால் காக்கபட்டிருக்கின்றது, அந்த தாய் ஒரு தெய்வகுழந்தையினையே பெற்றிருக்கின்றாள், காலம் அவளுக்கு உணர்த்தும்
ஆம், ஒவ்வொரு தாயும் தன் குழந்தையினை கட்டி அணைத்தபடி அவனுக்கு கண்ணீரோடு கைகாட்டுகின்றாள், தன் காலை தன் குழந்தை அணைத்து நிற்க முந்ந்தானையால் முகத்து கண்ணீரை துடைத்தபடி அவனுக்காய் அழுகின்றாள்
ஒவ்வொரு தந்தையும் தன் வீட்டின் ஒவ்வொரு பாதுகாப்பையும் அழுதபடியே உறுதி செய்கின்றான்
தேசம் இனி பாறைகளை துரித்கதியில் உடைக்கும் எந்திரம் மகா அவசியம் என உணருகின்றது, வெள்ளம் நிலச்சரிவு என்பது மட்டுமல்ல பாறைகளை வேகமாக உடைக்கும் நுட்பமும் பேரிடர் மேலாண்மையில் சேர்க்கபடுகின்றது
எல்லாம் இந்த சுஜித் எனும் சாமியால் வந்தது
கடந்த பிறவியில் ஜீவசமாதி அடையாமல் மறைந்த ஆத்மா ஒன்று மறுபிறப்பு எடுத்து ஜீவசமாதியுடன் தன் பிறவிகடனை முடித்து கொண்டது, ஏதோ ஒரு மகானின் ஆத்துமம் இது
ஆன்மீக கண்ணில் நோக்கினாலன்றி புரியாது
கோதுமை மணி நிலத்தில் மடிந்தால்தான் அது செடியாய் பலன் கொடுக்கும் என்பார் இயேசு, அந்த மகானின் வாக்கு இதோ நிறைவேறிற்று
அந்த தாயின் வியாகுலத்தை உணரமுடிகின்றது , தசரதனும், கன்னி மரியாளும் கரைந்து போன சோகமது
அந்த பிஞ்சு சாமியினை கண்ணீரோடு வழியனுப்பி வைக்கின்றது உலகம்
கண்காண அவனை பறிகொடுத்திருக்கலாம், கண்காண முடியாமல் அவன் காக்க போகும் உயிர்கள் ஏராளம், அதிலெல்லாம் அவன் வாழ்ந்து கொண்டே இருப்பான்.