போகாதீங்க .. அரசியலுக்கு போகாதீங்க..
அவரின் அரசியலும் இன்னும் சில
சர்ச்சைகளையும் தாண்டி , மாபெரும் நடிகனாக அவரை நோக்கத்தான் வேண்டும், இன்றய நாளில் வயதில் 60 ஆண்டு கால சினிமா அனுபவம் யாருக்கு உண்டு?
தமிழகமும் சினிமாவும் பிரிக்கமுடியாதவை, அதிலும் கடந்த 60 வருடமாக ஒருவரையும் சினிமாவையும் பிரிக்கமுடியாது,
தமிழ் சினிமாவை பணம் சம்பாதிக்கும் விஷயமாக அல்லது அரசியலை கைபற்றும் கருவியாக பார்க்காமல், சினிமாவை சினிமாவாக பார்க்கும் ஒரே அபூர்வ கலைஞன் அவர்.
சீனிவாச கமலஹாசன்.
6 வயதில் நடிக்கதொடங்கி, அப்போதே அரசிடம் விருதும், மெய்யப்ப செட்டியாரிடம் காரும் வாங்கிவிட்டவர்.
பின்னர் கொஞ்சகாலம் பெரும் ஜாம்பவான்கள் கூட குழந்தையாக நடித்தார். அதில் ராம்சந்தர் சிவாஜி என நடிகர்களும் சாவித்திரி தேவிகா என நடிகையரும் உண்டு.
நீச்சல் கற்று கடலில் குதிப்பது வேறு, கடலில் விழுந்து நீச்சல் கற்பது வேறு, கமல் இரண்டாம் வகை.
இந்த இடைகாலத்தில் அவர் நடனம், இயக்கம், எடிட்டிங்,கவிதை, பன்மொழி என சகலத்தையும் கற்று தேர்ந்தார்.
அவர் குரல் கூட இயல்பின் சாருஹாசன் சாயலே ஆனால் கஷ்டப்பட்டு மாற்றி கொண்டார், அதுதான் அர்ப்பணிப்பு.
நடன இயக்குனராக,எடிட்டராக, அல்லது ஏதோ ஒரு வடிவத்தில் சினிமாவில் இருக்க போராடியவர் அவர். அவரின் தொடக்க காலம் அவனாமானமும் வழியும் மிக்கவை.
அவர் போராடினார்
பின்னாளைய பாலசந்தர் படங்கள் அவர் ஒரு சிறந்த நடிகர் என காட்டின, பால சந்தரின் கோட் சூட்டோ அல்லது பாரதிராஜாவின் கோவணமோ அவர் அவர் பாணியில் பட்டையை கிளப்பியிருப்பார்,
குடிகாரனோ, மன்மத லீலை பாத்திரமோ, சிவப்பு ரோஜாவோ,அல்லது மனநோயாளி வேடமோ, எந்த மொழியோ அல்லது தமிழின் பல வடிவமோ அவரால் மட்டுமே அவ்வளவு அழகாக வெளிக்கொண்ரமுடியும்.
சகல வேடத்திலும் இமேஜ் பார்க்காமல் நடித்து குவித்தவர்
சும்மா சொல்லகூடாது மனிதர் அழகர்தான், அதனிலும் அழகு அவரின் நடிப்பு.
அந்த சலங்கை ஒலி நடனம் இனி ஒருவர் அவ்வளவு நளினமாக ஆடிவிட முடியுமா? பரத முனிவர் வந்தால் கூட முடியாது.
ஜெயப்பிரதாவின் அழகையும் மீறி அந்த நடனத்தை ரசிக்கமுடியும் என்றால், அது எவ்வளவு அழகாக இருக்கவேண்டும்
கிட்டதட்ட 1985க்கு முன்னாலே அவரின் ஒரு சுற்று முடிந்தது, அதன் பின் வந்ததெல்லாம் பரிசோதனை படங்கள், ஏதோ ஒரு வகையில் வித்தியாசமாக முயற்சி செய்வார். பல வெற்றிபெற்றன பல சறுக்கின.
ஆனால் மனிதர் கொஞ்சமும் அசரவில்லை.
சினிமாவில் சம்பாதித்து எஸ்டேட்,மண்டபம்,அரசியல் என குவிப்பவர்கள் மத்தியில் பணத்தை மறுபடியும் சினிமாவில் முதலீடு செய்பவர் அவர் மட்டுமே, கேட்டால் சொல்வார் “விவசாயி வேறு என்ன செய்வான்”
ஆம் அன்று அவர் அப்படிதான் இருந்தார்.
திறமையான டைரக்டர்கள் கையில் அவர் கிடைத்தபொழுது அற்புதமான படங்கள் கிடைத்தன, பாலசந்தரின் முத்திரைகள்,16 வயதினிலே உச்சமாக “நாயகன்”.
இனி ஒரு இயக்குநர் மணிரத்தம் அளவிற்கு கமலஹாசனை பயன்படுத்தமுடியும் என எதிர்பார்க்கமுடியும்?, அப்படியே வரதராஜ முதலியாரை நிறுத்தினார்
உச்சமாக இந்தியன் தாத்தா.
ஒரு மனநல சிக்கல் உள்ளவன் வலியினை அவர் நடிப்பை தவிர யாரால் விளக்க முடியும்?
நிச்சயமாக சொல்லலாம், சிவாஜிகணேசனுக்கு பின் தமிழக சினிமாவில் நடிப்பிற்கோர் அடையாளம்.
நல்ல நடிகர், ஆனால் தமிழக ரசனையை விட மேம்பட்ட ரசனையுள்ள இயக்குனர், அதனால்தான் மிக சிறந்த படங்களான ஹேராம்,விருமாண்டி போன்றவை அதன் உயரத்தை எட்டவில்லை.
காரணம் அவரின் ரசனை சராசரி தமிழக ரசனை அல்ல.
இருபடம் ஓடிவிட்டால் முதலமைச்சர்,5 படம் ஓடினால் பிரதமர் என கனவு காணும் திரையுலகில், சகல வாய்ப்புகள் இருந்தும் சினிமாவை சினிமாவாக மட்டும் பார்த்த்து, தன்னை ஒரு கலைஞன் எனும் நிலையிலிருந்து சிறிதும் மாற்றிகொள்ளாத தன்மையோடுதான் முதலில் இருந்தார்.
நீங்கள் உளவுதுறை பிரியராக இருந்தால் கொண்டாடும் படம் விக்ரம், 1980களின் காலப்படி அது மிகமிக விறுவிறுப்பான படம்,
சுஜாதாவும் கமலஹாசனும் இணைந்து மிரட்டியது, ஆனால் பெரிய வெற்றி இல்லை. ஏன் என்றால் அதுதான் தமிழ்நாடு. விஸ்வரூபத்தில் அதைவிட அழகாக ஆப்கன் நிலமையும் அல்கய்தா அமைப்பையும் காட்டினார்.
60 வருடமாக தமிழ் சினிமாவை நேசிப்பவர், சகல நவீன தொழில்நுட்பத்தையும் தமிழுக்கு அறிமுகபடுத்துபவர். நல்ல வாசிப்பாளர்,அருமையான நடிகர், ஆனாலும் சர்ச்சை அவருக்கு புதிதல்ல.
12 வயதிலிருந்து அவர்மேல் பொழியபட்ட அவமானங்கள் அதிகம், இன்றுவரை அடிக்கடி சர்ச்சையில் அடிபடுவார். ஆனால் ஏதும் அவரை சினிமாவிலிருந்து பிரிக்கவில்லை.
நடிப்பை நடிப்பாக மட்டும் பார்த்த நடிகர்கள் குறைவு, அதிலும் நடிப்பினை இறுதிவரை நேசித்தவர்கள் குறைவு,
அவர்களில் எம்.ஆர் ராதா முக்கியமானவர். சினிமா வாய்ப்புகள் குவிந்தபொழுதும் நாடகங்களில் நடித்து கொண்டு நடிப்பினை நிரூபித்தவர்.
ஆர்.எஸ் மனோகர் போன்ற அபூர்வங்களும் உண்டு.
அந்த வரிசையில் இன்று எஞ்சி இருப்பது கமலஹாசன் மட்டுமே, சினிமாவை தவிர அவர் அன்று ஏதும் யோசிப்பதில்லை. ஒருமுறை அவரிடம் கேட்டார்கள்,நீங்கள் ஏன் அரசியலுக்கு வரகூடாது
அவர் சொன்னார் “மன்னிக்கணும் எனக்கு ஓரளவிற்கு மேல் நடிப்பு வராது”
இதற்காகவே அவருக்கு கைததடிய காலம் உண்டு, இன்று மனிதர் மாறி தொலைத்து விட்டார்.
சினிமாவை சுவாசிக்கும் அவர், இந்த உலகில் சுவாசிக்க ஆரம்பித்து 66 வருடம் ஆகிறது. இன்னும் பல ஆண்டுகள் அவர் வாழ்ந்து நல்ல படைப்புக்களை தர வாழ்த்துவோம்,
Happy birthday கமலஹாசன்
அதோடு கூட உங்களின் கனவு படமும் ஓர் அபூர்வ மனிதனுமான மருதநாயகம் படமும் வரட்டும் என வாழ்த்துகின்றோம்
கமலா ஹாசனின் அற்புதமான படம் தேவர் மகனும், மூன்றாம் பிறையும், 16 வயதினிலே படமும்
அந்த வசங்களிலே அந்த மகா நடிகரிடம் கேட்க்கின்றோம்
“அய்யா அரசியலுக்கு ஆயிரம் பேர் வருவாக, ஆனா இங்க சினிமாவுக்கு யார் இருக்கா? உங்களதான நாங்க எதிர்பார்க்க முடியும்? வேற யார் இருக்கா இங்க?
போகாதீங்க .. அரசியலுக்கு போகாதீங்க.. உங்கள வாழ வச்ச சினிமாவுக்கு நீங்க செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கு”
“இங்க ரஜினி இருக்காங்க , நாசர் இருக்காக, இன்னும் யார் யாரெல்லாமோ இருக்காக .. ஆனா கமலா ஹாசனுக்கு நாங்க எங்க போவோம்? நீங்களும் போய்ட்டா எங்களுக்கு யார் இருக்காக….”
அந்த நடிகன் அரசியல் சர்ச்சையில் சிக்கும் பொழுதெல்லாம், அவன் படத்துக்கு வரிசையில் நின்று தமிழன் டிக்கெட் வாங்கிய காலம் மாறி அவன் வாக்கு கேட்டு வந்த பொழுதெல்லாம்
அந்த மஹா நடிககனை பிக்பாஸ் மற்றும் விளம்பரங்களில் காணும் பொழுதெல்லாம் மூன்றாம் பிறை கடைசி காட்சியில் அவர் அழுவது போலவே மனம் அழும்
அது யாருக்கும் புரியாத வலி, புரியவைக்க முடியாத வலி
அந்த வலியில் நாம் அழுது கெஞ்சி அவர் அரசியலுக்கு போக வேண்டாம் என கெஞ்சுகின்றோம் அவரோ அப்படத்து ஸ்ரீதேவி போல புரிந்து கொள்ளாமல் அவர் போக்கில் செல்கின்றார்
நாம் கதறி அழுது அப்படியே கதறி கேட்கின்றோம், ஓடி ஓடி கேட்க்கின்றோம் “அய்யா கமலஹாசா .. சினிமாவை விட்டு போகாதே அய்யா.. போகாதே..உனக்கு அரசியல் வேண்டாம் .. சினிமாவிலே இரு”
அந்த மூன்றாம் பிறை கட்சியின் வலி அவருக்கும் புரியாவிட்டால் யாருக்கு புரியும்?
