யாசர் அராபத்

ஒரு மானிட நேயமிக்க, அதே நேரம் தீவிரமான ஒரு போராளியினை நமது தலைமுறையில் கண்டோம் என்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், அது யாசர் அராபத். இன்று நினைவுபடுத்தவில்லை. அந்த பெருமகனாரின் நினைவு நாள் இன்று.

யாசர் அராபத்

அந்த மனிதன் ஒரு உண்மையான போராளி, அந்த மாவீரனை இஸ்லாமிய தீவிரவாதி என அழைப்பது தவறு, அவனின் மதம் இஸ்லாம், அவன் போராடிய பூமியும் அந்த மக்களும் இஸ்லாமியர் என்பதே சரி

மற்றபடி அவன் தொடுத்ததும் போராடியதும் மகா மகா நீதியானதே

எவ்வளவு பெரும் சக்தியினை எதிர்த்து போராடினார், அதுவும் தொடக்கத்தில் ஈழ போராளிகளுக்கும் (உமா மகேஸ்வரன், பத்மநாபா) போன்றோருக்கு பயிற்சியும் வழங்கி, மானிட போதனைகளையும் வழங்கி போராட வைத்த மாமனிதன்.

இஸ்ரேல் எனும் மனிதநேயமில்லா அரசினை , இரும்பு அரசினை, இண்டிபாதா எனும் மக்கள் போராட்டம் மூலம் உலகினை நோக்க வைத்த பெருமகன்.

முடிந்த வரைக்கும் பார்த்துவிட்டு, இனி மொத்தமாக மக்களை இஸ்ரேல் குதறிவிடும் என்பதால் சமாதான உடன்படிக்கைக்கு வந்து மக்களை காத்தவர்.

நிதானம் தவறி, அமெரிக்க அதிபர் நிக்சனை கொல்வேன், ரீகனை கொல்வேன் அல்லது இஸ்ரேலிய பிரதமர்களுக்கு குண்டு அனுப்புவேன் என்று ஒருக்காலும் இறங்காமல் காயம் தாங்டி போராடியவர்.

அவர் இருக்கும் வரை அலஅக்சா வளாகத்தை தள்ளி இருந்து பார்த்த இஸ்ரேல், அம்மாமனிதனின் மறைவிற்கு பின் நடு மசூதியில் நிற்கின்றது. அப்படி அந்த மண்ணிற்கு காவலாய் நின்ற பெருமகன் அவர்.

மானிட வரலாற்றில் நாம் நினைத்து நினைத்து அழும் உன்னத தலைவன் வரிசையில் அவருக்கும் இடம் உண்டு

ஆம் பாலஸ்தீனை பிரித்து இஸ்ரேல் உருவாக்கபட்டும், பின் இஸ்ரேல் மொத்த பாலஸ்தீனத்தையும் விழுங்கி, இஸ்லாமிய நாடுகளும் பாலஸ்தீனியரை கைவிட்டபின்பே அவர் களத்துக்கு வந்தார்

பாலஸ்தீனத்தில் இருந்து போராடினால் தன்னை சாக்காக வைத்து மொத்த பாலஸ்தீனத்தையும் இஸ்ரேல் கொளுத்திவிடும் என யோசித்து அயல்நாட்டில் இருந்தே போராடினார்

அவ்வளவு துல்லிய தாக்குதல், மிக அட்டகாசமான நுட்பம், மொசாத்துக்கே தண்ணிகாட்டிய அதிர்ச்சி என மாபெரும் போராளியாய் இருந்தார்

அன்று இலங்கையுடன் கைகோர்த்த இஸ்ரேலை சமாளிக்க இந்தியா ஈழபோராளிகளுக்கு பயிற்சி கொடுக்கும் பொறுப்பை அவரிடமே வழங்கியது, பத்மநாபா, உமா மகேஸ்வரன் என பலருக்கு உதவினார்

இந்திராவும் ராஜிவும் அவருக்கு டெல்லியில் அலுவலகம் கொடுத்தனர், காஷ்மீர் பாகிஸ்தான் என பெரும் இஸ்லாமிய சிக்கல் இருந்தும் இந்தியா அவரை அணைத்தது காரணம் அவரிடம் நியாயம் இருந்தது

ஆனானபட்ட இஸ்ரேலை அடித்து இழுத்து பேச்சுவார்த்தைக்கு கொண்டுவந்தது அராபத்தின் சாதனை, இன்றுவரை அச்சாதனையினை செய்த ஒரே பாலஸ்தீன போராளி அவரே

மொசாத்தும் சி.ஐ.ஏவும் அவரை ஒன்றும் செய்யமுடியாமல் அடங்கி இருந்த காலமும் இருந்தது.

காரணம் தீவிரவாதம் என்பது எதிரியினை பேச்சுக்கு அழைக்கும் விஷயமே., அதன் பின் பேசித்தான் தீர்க்கவேண்டும் என்பதில் சரியாக இருந்தார், அப்படித்தான் பாலஸ்தீனத்துக்கான எல்லை கோடு வகுக்கபட்டது

இனி இது எல்லை என பிரித்து வாங்கினார், அதனால் நோபல் பரிசும் பெற்றார், இன்றிருக்கும் பாலஸ்தீன அரசு அவரால் அமைக்கபட்டது

ஒருவகையில் அசுரபலமான இஸ்ரேலை அசைத்து சுதந்திர‌ பாலஸ்தீனம் அமைக்கும் அளவு நெருங்கி இருந்தார், காரணம் அந்த இண்டிபாதா

ஆம் நாம் வெறும் துப்பாக்கி தீவிரவாதமல்ல, அரசியல் இயக்கம் என உணர்த்த அவர் ஆணையிட்டால் மாபெரும் மக்கள்திரள் குழந்தைகளுடன் வீதிக்கு வந்தது, அதை கட்டுபடுத்த இஸ்ரேலுக்கே தெரியவில்லை

லட்சோப லட்சம் மக்கள் ஆலிவ் இலையுடனும் அராபத் படத்துடனும் வீதிக்கு வந்தபொழுது இஸ்ரேலே அதிர்ந்து துப்பாக்கியினை கீழே வைத்த காட்சிகள் நடந்தன‌

நாம் துப்பாக்கி ஆலிவ் இலை என இரண்டையும் வைத்திருகின்றோம் , இஸ்ரேலே எதை எடுக்க வேண்டும் என எங்களை நிர்ணயிக்கின்றது என அந்த மாமனிதன் ஐ.நாவில் சொன்னபொழுது அவரை நினைத்து உருகியது உலகம்

எங்கே துப்பாக்கி தூக்க வேண்டும், எப்பொழுது கீழே வைக்க வேண்டும், பாய வேண்டிய நேரம், பதுங்கும் நேரம், எதிராளியுடன் கைகுலுக்கும் நேரம் என எல்லாம் அவருக்கு தெரிந்திருந்தது

ஆம் பாலஸ்தீனத்தை போல ஒரு தலைவன் ஈழத்தில் உருவாகியிருந்தால் காட்சிகள் மாறியிருக்கும், ஆனால் விதி அதுவல்ல‌

சுதந்திர பாலஸ்தீனம் தொட்டுவிடும் தொலைவில் இருந்தபொழுதுதான் , இஸ்ரேலுக்கு காலம் வேறுமாதிரி கைகொடுத்தது

ஆம் ஒருவனை ஒடுக்க வேண்டுமானால் அவனின் பிம்பத்தை உடை, அல்லது அவனை போல கொள்கையுடன் 4 பேரை உருவாக்கு, அந்த 4 பேரும் கடும் அராஜகம் புரியட்டும் அவர்களை உலகம் வெறுக்கட்டும், அந்த 4 பேரை போட்டு கொல்லும்பொழுது இந்த நல்லவனையும் முடக்கி ஒடுக்கிவிடலாம்

அப்படித்தான் அராபத்தை பலியெடுத்தார்கள்

ஏகபட்ட தீவிரவாத குழுக்கள் உருவாயினை, ஆளாளுக்கு பாலஸ்தீன் ஆப்கன் காஷ்மீர் என உருவானார்கள், இந்த சதியினை அரபாத் உணர்ந்து சொன்னாலும் கேட்க ஆளில்லை

2001ல் பின்லேடனின் விளையாடலுக்கு பின் மொத்த எல்லா போராளி இயக்கங்களுமே கொடும் தீவிரவாதமாயின, அரபாத்தும் அதில் சிக்கினார்

காலத்தை பயன்படுத்திகொண்ட இஸ்ரேல் அராபத்தினை வீட்டு சிறை இட்டு இது தீவிரவாத எதிர்ப்பு போர் என சொல்லிகொண்டது

அராபத்தை மீறி ஹமாசும் இன்னும் பலவும் அந்த வாய்பினை இஸ்ரேலுக்கு வழங்கின‌

அரபாத் செய்த பெரும் தவறுகளில் ஒன்று அந்த பெண்மணி சுகாவினை திருமணம் செய்தது, அவர்மேல் சந்தேக பார்வை எல்லோருக்கும் இருந்தது

இந்நிலையில்தான் புற்றுநோயால் அராபத் மரணித்தார் எனும் தகவல் வந்தது, அத்தோடு அந்த சுகா எனும் பெண்ணை பற்றியும் தகவல் இல்லை

ஏதோ செய்து அந்த பெருந்தலைவனை வெடிகுண்டும் ரத்தமும் இல்லாமல் சாய்த்தார்கள் என்பதே நிஜம்

இதை முன்பே உணர்ந்துதான் தான் வாழும் காலத்திலே பாலஸ்தீனத்துக்கான எல்லையினை உருவாக்கினான் அம்மனிதன்

அவர் இறந்த அன்று பாலஸ்தீனமே கதறியது, இனி நாங்கள் அனாதைகள் என அந்த குழந்தைகள் கதறிய காட்சி வரலாற்றின் கொடும் காட்சி

இன்று அவர் உடல் ரமல்லாவில் தற்காலிகமாக புதைக்கபட்டுள்ளது, பாலஸ்தீன் முழுமையாக அமையும் காலத்தில் அவர் உடல் மறுபடியும் கிழக்கு ஜெருசேலேமில் புதைக்கபடும்

அந்த பாலஸ்தீன சிங்கத்துக்கு, இந்தியாவின் நண்பனுக்கு, ராஜிவே உன்னை கொல்ல சதி நடக்கின்றது, ஏ இந்தியாவே உன்னை உடைக்க பெரும் திட்டம் மேற்குலகில் இருக்கின்றது என எச்சரித்த இத்தேசத்தின் உண்மையான நண்பனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அந்த சிங்கத்தின் உறுமலும் வீரமும் ஞானமும் கொஞ்சம் அல்ல, வராது வந்த தலைவன் அவன்

அவன் நிச்சயம் பலத்துடன் திரும்ப வருவான், அவனிடம் நியாயமும் தர்மமும் எக்காலமும் இருந்தன, ஒவ்வொரு நொடியும் அதை பாதுகாத்தான்

அந்த தர்மம் அவனை மறுபடி கொண்டுவரும், ஒரு காலத்தில் பாலஸ்தீனம் நிம்மதி சுதந்திர பெருமூச்சுவிடும், அவன் அதில் வெற்றி சிரிப்புடன் வாழ வருவான்..

இஸ்ரேலுக்கு மெசியா வரவேண்டியதில்லை அவர்கள் வாழ்கின்றார்கள், இயேசு இரண்டாம் முறை வரவேண்டியதில்லை கிறிஸ்தவருக்கு குறையில்லை

ஆனால் வாழவேண்டியவர்களும், விடுதலை வீரனுக்காக, நல்ல தெய்வீக தலைவனுக்காக ஏங்கி நிற்கும் இனம் பாலஸ்தீனிய இஸ்லாமிய மக்களே

அவர்களுக்கான அடையாளமும் தலமையும் அந்த அராபத் ஒருவனே, அவர் மீண்டும் வரட்டும் பாலஸ்தீனை மீட்டு தரட்டும்

அவர் வருவார் லட்சோப லட்சம் பாலஸ்தீனியரின் உருவில் வருவார், அந்த இனம் ஒரு நாள் நிச்சயம் வாழும், மகா நிம்மதியாய் வாழும்

அவனின் தியாகம் ஒரு நாளும் வீணாகாது, அவன் ஏற்றிவைத்த போராட்ட தீ, ஆலய தீபமாய் மாறும், உலகம் அதை வணங்கும்