அழகாக செய்துகொண்டிருக்கின்றது துருக்கி

இம்சை அரசன் வடிவேலுவிடம் “அக்கா மாலா” விற்க வந்த கோஷ்டி போல துருக்கி அதிபரிடம் நிற்கின்றது அமெரிக்கா

சில பல காரணங்களுக்காக அவர்களை தாஜா செய்ய எர்டோகனை அமெரிக்காவுக்கே அழைத்த்து சென்றது அமெரிக்கா, ஓட்டை காலணாவுக்காக செந்திலை தாஜா செய்யும் கவுண்டமணி போல ஏக காட்சிகள்

விஷயம் ஒன்றுமில்லை, ரஷ்யாவின் எஸ் 400 வாங்க கூடாது என்றும் அதற்கு பதிலாக அமெரிக்கா பேட்ரியாட் சிஸ்டமும் எப் 35 விமானமும் வழங்கபடும் என்றும் ஆசைகாட்டியது

விடா கொண்டனான எர்டோகன் ரஷ்ய எஸ் 400 விலையினை விட அமெரிக்கா பேட்ரியாட் சிஸ்டம் விலை குறைவு என்றால் வாங்கலாம் என ராஜதந்திர பேரம் பேசினார், அதுதான் அரசியல் தந்திரம்

பேச்சு நடந்துகொண்டே இருந்தது, செந்தில் பாணியில் சரி உங்களிடம் பேட்ரியாட் வாங்கினால் விமானத்தை ரஷ்யாவிடம் வாங்கட்டுமா என போக்கு காட்டியது

இல்லை இல்லை அதையும் நாங்களே தருகின்றோம் என எப் 35 கொடுக்க முன்வந்தது அமெரிக்கா , டேய் எல்லாம் நேரம்டா என கவுண்டமணி பாணியில் சொல்லிகொண்டிருந்தார் டிரம்ப்

அட இருங்கண்ணே ரஷ்யாவுல இதேமாதிரி பிளைட் என்ன விலைன்னு பார்த்துட்டு வாரேன் அத விட குறைந்த விலையில் தந்தால்தான் வாங்குவேன் என மறுபடியும் பேரம் பேசினார் எர்டோகன்

உண்மையில் எர்டோகன் செய்வது அட்டகாசமான தந்திரம், நிச்சயம் அமெரிக்காவும் ரஷ்யாவும் வியாபாரிகள், துருக்கி வாங்குபவர், விலையினை குறைக்க அவர் எந்த தந்திரமும் செய்யலாம்

அதை அழகாக செய்துகொண்டிருக்கின்றது துருக்கி

எஸ் 400, அமெரிக்க பேட்ரியாட் , எப் 35 சூ 57 என வாங்கி துருக்கி நாளையே உலக போரை ஆரம்பிக்க போவதில்லை, காலத்துக்கு ஏற்ப தன்னை பாதுகாக்க அந்நாடு விரும்புகின்றது

அதற்காக எஸ் 400, பேட்ரியாட் என எது கிடைக்குமோ அதை சலுகை விலையில் வாங்க முயற்சிக்கின்றது. அப்படியே தாக்குதல் விமானங்களுக்கு எது குறைந்த விலையோ அதை நோக்கி நாடகம் ஆடுகின்றது

அமெரிக்கா முறைத்து பார்க்கின்றது, சிரித்து பார்க்கின்றது, கையினை நட்பாக கொடுத்து பார்க்கின்றது, சில நேரம் கழுத்தை நெறிக்கின்றது ஆனாலும் துருக்கி அசருவதாக தெரியவில்லை

அது செந்தில் ஒட்டை காலணாவினை வைத்து கொண்டு “இதெல்லாம் வேலைக்காகதுண்ணே..” என சொல்லிகொண்டு ஓடுவது போல் ஓடுகின்றது, “டேய் ராஜா நில்லுடா…” என அவர் பின்னாலே கவுண்டமணி சாயலில் ஓடுகின்றார் டிரம்ப்..