ஷாலினி

தமிழ் சினிமா உலகம் நடிகைகளுக்கு ஆபத்தானது , அபிமன்யு சந்தித்த பத்ம வளையம் போன்றது. அதை தாண்ட முடியாமல் சிக்கி வீழ்ந்த நடிகைகள் ஏராளம், மிக சிலர் மட்டுமே கிடைத்த குதிரையினை லாவகமாக கையாண்டு தப்பி ஓடிவருவர்

அதற்கெல்லாம் திறமையும் அறிவும் மட்டும் போதாது, வாய்ப்பும் அதிர்ஷ்டமும் வேண்டும், கிடைக்கும் வாய்ப்பினை அழகாக தட்டும் சாமார்த்தியமும் வேண்டும்

அதில் இரு நடிகைகள் கில்லாடிகள் ஒருவர் ஜோதிகா இன்னொருவர் ஷாலினி

ஷாலினி கேரள மாநிலம் கொல்லத்தில் பிறந்தவர். அவர் தந்தை பாபு என்பவருக்கு நடிகனாக கடும் விருப்பம் அது நடக்கவில்லை அதை தன் மகள் மூலம் பரீட்சித்து பார்த்தார், அது வென்றது

உன்னால் முடியாததை உன் ரத்தம் சாதிக்கும் என்பது அதுதான்

ஷாலினியினை 4 வயதாக இருக்கும் பொழுது திரைக்கு அழைத்து வந்தவர் பாசில், கேரளத்து பாலசந்தர் அல்லது பாரதிராஜா அவர்

அவரின் கேரள பொம்முகுட்டி அம்மாவுக்கு படமே ஷாலினிக்கு முதல் படம், அதை தொடர்ந்து மலையாள உலகம் அவரை குழந்தை நடிகையாக தத்தெடுத்து குழந்தைக்கான வேடங்களுக்கு பட்டா போட்டு கொடுத்துவிட்டது

விரிந்த கண்ணும், நெற்றியில் சீராக வெட்டபட்ட முடியும்,முகத்தில் களங்கமில்லா புன்னகையுமாக வலம் வந்த ஷாலினி எல்லோராலும் கொண்டாடபட்ட குழந்தையானது

5 வயது ஆன பொழுது ஷாலினி தமிழுக்கு வந்தார், ஓசை எனும் மோகனின் படமே அவருக்கு முதல் படம், மாற்று திறனாளிகளுக்கான கதை அது, அக்குழந்தை அதில் கவனிக்கபட்டது

தொடர்ந்து சிவாஜியின் பந்தம் அக்குழந்தைக்கு நல்ல இடம் கொடுத்தது, ஷாலினி குடும்பம் சென்னைக்கே இடம் பெயர்ந்தது

பெற்றோர் பிள்ளைகளை வேலை செய்யும் இடத்துக்கு அழைத்து செல்லும் உலகில், குழந்தைக்காக பெற்றோர் குடியேறிய காட்சி அது

தொடர்ந்து பல தமிழ்படங்களில் பேபி ஷாலியாக வலம் வந்த அவர், ரஜினியின் ராஜா சின்ன ரோஜோவோடு தன் முதல் இன்னிங்க்ஸை முடித்தார், அக்காவின் இடத்தை அவரின் தங்கை ஷாமிலி பறித்துகொண்டார், அஞ்சலி படத்துக்காக அவார்டு எல்லாம் வாங்கினார்

அப்பொழுது மறைந்த ஷாலினியினை மறுபடியும் இழுத்துவந்தார் பாசில், ஆம் ரஜினியின் வாழ்வு பாலசந்தரிடம் தொடங்கியது என்றால் ஷாலினி வாழ்வினையே திருப்பி போட்டவர் பாசில்

அவரின் “அன்னியத்த புராவு” எனும் மலையாள படத்தில் ஹீரோயினாக மின்னினார் ஷாலினி, அதை தமிழில் எடுக்கும் பொழுதும் அவரே ஹீரோயின் , படம் மாபெரும் வெற்றி

பொதுவாக குழந்தை நட்சத்திரமாக ஒருவரை கொண்டாடும் தமிழகம் அவர் வளர்ந்ததும் ஏற்காது, ஆனால் ஆண்களில் கமலஹாசனுக்கும் பெண்களில் ஷாலினுக்கும் மீனாவுக்கும் அந்த அதிர்ஷ்டம் இருந்தது

குட்டி பத்மினி முதல் சோனியா போஸ் வரை ஏராள நடிகைகள், விசு படத்தில் வந்த சிறுவர் முதல் மாஸ்டர் மகேந்திரன் வரை ஏராளம்

மீனாவும், ஷாலியும் அதில் விதிவிலக்குகள்

பதின்ம வயது நடிகையாக அவர் இரண்டாம் இன்னிங்க்ஸில் ஒழுங்காக நடித்துகொண்டிருந்தார், அநாகரீக வேடமோ இல்லை வேறுமாதிரியான இமேஜோ இல்லாமல் கண்ணியமான நடிகையாக வலம் வந்தார்

காலமே எல்லாவற்றையும் நிர்ணயிக்கும், விரும்பியோ விரும்பாலமோ குறிக்கபட்ட நொடியில் குறிக்கபட்டவர்களை சந்தித்தே தீரவேண்டும், இது மானிட அறிவுக்கு அப்பாற்பட்ட விதி

அப்படித்தான் அமர்க்களம் படத்தில் ஷாலினி அஜித்குமாரை சந்திக்கின்றார்

அஜித்குமார் நடிகர்களில் யாரோடும் ஒப்பிடமுடியா சுயம்பு

“வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது” என அவர் சொன்னது சினிமாத்தனம் அல்ல அவரின் சொந்தவாழ்வு

ராமசந்திரனுக்கு அவர் அண்ணன் சக்கரபாணி முழுபலம், சிவாஜிக்கு அண்ணன் தங்கப்பன் இருந்தார். ரஜினிக்கு பாலசந்தரும் ரஜினியின் அண்ணனும் உண்டு, கமலுக்கு அவரின் அண்ணன்கள் பெரும் பலம் இன்னும் சில பின்னணி உண்டு, விஜயண்ணா என்பவர் சந்திரசேகரின் கனவுக்கு ஜீன்ஸ் போட்ட வடிவம்

ஆனால் அஜித் அப்படி அல்ல, அவரின் அசாத்திய உள்ளுணர்வு ஒன்றே அவரை வழிநடத்திற்று, அவராக விழுவார் அவராக எழுவார், அவராகவே எல்லாவற்றையும் தாண்டி செல்வார்

அக்காலத்தில் அஜித்க்கு நடிகைகள் கொக்கி போட்டுகொண்டுதான் இருந்தனர், அக்காலம் முதலே சர்ச்சைகளில் சிக்காமல் தான் உண்டு நடிப்பு உண்டு என இருந்ததால், இந்த சிவகுமார் பின்னால் நடிகையர் அணிவகுத்தது போல அஜித் பின்னாலும் வகுத்தனர்

ஆனால் தன் வாழ்வின் முடிவுகளை தானே எடுத்து பழகியவருக்கு ஷாலினி சரியான தேர்வாக இருந்தார், அது ஷாலிக்கான நல் விதி அல்லது முன் ஜென்ம கர்மா..

ஒரு விஷயத்தை ஒப்புகொள்ள வேண்டும், ஷாலியினை மணந்தபின் அஜித் மிகபெரும் உயரத்துக்கு சென்றார், நிச்சயம் மிக கடுமையான உயரம் அது

எத்தனையோ இளம் ஜாம்பவான்கள் திருமணம் செய்தபின் வீழும் திரையுலகம் இது, ஆனால் அஜித் என்பவர் ஷாலியினை மணந்த பின்பே நிலையான இடம் பெற்றார்

நல்ல விதிப்படி மணவாழ்வில் நுழைந்த ஷாலினி நடிப்பதை நிறுத்தினார், இன்றும் பொது இடத்தில் அவரை காண்பது அரிது

நிச்சயம் அதிர்ஷ்டம் அவர் பக்கம் நிறைய உண்டு, அழகு என்றல்ல திறமை என்றல்ல அதை தாண்டிய ஏதோ ஒன்று அவரை நடத்தியது

அந்த குடும்பத்திலும் அவர் பெற்ற வெற்றியினை அவர் சகோதரரும் தங்கையும் பெறவில்லை

குடும்ப வாழ்விலும் பெரும் நடிகைகள் வாழ்வு ஷாலினி போல் அமையவில்லை

அன்று அஜித் பெரும் நடிகர் அல்ல, ஆனால் ஷாலினியின் விதி மிக சரியாக ஒத்துழைத்து அவரை ஏற்க வைத்தது, அம்மணி கரையேறிவிட்டார்

அஜித்குமாரை போலவே ஷாலியினை பொது இடங்களில் காணமுடியாது, அப்படியே வந்தாலும் பெரும் பந்தாவும் அரைகுறை அலட்டலும் இருக்காது. அதே குழந்தை சிரிப்புடன் தன் குழந்தைகளுடன் சிரித்து செல்லும் ஷாலினியினை மட்டுமே காணமுடியும்

கணவன் தனியார் வங்கியில் கிளர்க்காக இருந்தாலே, ஏன் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருந்தாலே சில பெண்கள் ஆடும் ஆட்டம் காணசகிக்காது, ஆனால் ஷாலினிக்கு பணிவு இயல்பாய் வாய்த்தது

இன்று நடிகையர் எல்லாம் பொறாமைபடும் நபர் அவர், ஏன் அஜித்தின் முன்னாள் காதலிகள் உட்பட ஏகபட்ட ரசிகைகளுக்கு அவர் மேல் அப்படி ஒரு பொறாமை

இன்று ஷாலினிக்கு பிறந்த நாள்

பகுத்தறிவு, கடும் உழைப்பு, அறிவு, திறமை இவை எல்லாம் விட அதிர்ஷ்டத்தை மிஞ்சியது அதாவது விதி கொடுக்கும் காலத்தை மிஞ்சியது எதுவுமில்லை

யூதபழமொழியும், சாணக்கிய மொழியும் இதை அழகாக சொல்லும்

“போரில் வலுவான குதிரை வைத்திருப்பவன் வெற்றிபெறுவான் என்றல்ல, அறிவாளி சாதிப்பான் என்றல்ல, வேகமாய் ஓடுபவன் வெல்வான் என்றல்ல, எவனுக்கு காலமும் வாய்ப்பும் சரியாக வாய்க்குமோ அவனே வெல்வான்”

அந்த காலம் கொடுக்கும் வாய்ப்பினையே விதி என்றார்கள் முன்னோர்கள்

இன்னும் அதில் நம்பிக்கை இல்லை என்றால் ஷாலினியினை பாருங்கள், அட அப்பொழுதும் நம்பவில்லை என்றால் முதல்வர் பழனிச்சாமியினை பாருங்கள்

அட அப்பொழுதும் நம்பவில்லை என்றால் சர்வாதிகாரியினை பாருங்கள்

இதற்கு மேலும் நீங்கள் நம்பவில்லை என்றால் உங்களுக்கு 5 அறிவு என்றுதான் பொருள், மலைகோவில் மந்தியினை விட உங்கள் அறிவு குறைவு

எல்லா ஐஸ்வர்யங்களையும் இந்த ஜென்மத்தில் ஒருங்கே பெற்றிருக்கும் ஷாலினிக்கு இன்று பிறந்தநாள்

ராஜா சின்ன ரோஜாவில் நடிக்கும் பொழுதே ரஜினி சூப்பர் ஸ்டார், ஆனால் இந்த ஷாலினிக்கு ஒரு கணவன் வருவான், அவனை அரசியலில் தனக்கெதிராக ராஜேந்திர பாலாஜி என்பவர் இழுத்துவிடுவார் என அவர் கனவிலும் நினைத்திருப்பாரா?

எதிர்பாரா திருப்பம் கொண்டது வாழ்க்கை, அவரவர்க்கு விதித்தது அந்தந்த நேரத்தில் வரும்

ஷாலியின் வாழ்வும் அதைத்தான் சொல்கின்றது, அவர் இன்னும் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

(ஷாலினி குழந்தையாக இருக்கும் பொழுது எல்லா பெற்றோரும் விரும்பி கொஞ்சுவார்கள், குழந்தை இல்லா ராமசந்திரனுக்கும் ஷாலினி மேல் தனி பாசம் இருந்தது என்பார்கள். மிக பாசமாக அவளை தூக்கி கொஞ்சிகொண்டிருப்பார் என்கின்றது வரலாறு

அஜித் அதிமுகவுக்கு போவாரா எனும் கேள்வி எழும் நிலையில் நாம் அடியெடுத்து கொடுத்துவிட்டோம்

இனி “குட்டி அம்மா, உன்னை அன்றே அடையாளம் காட்டினார் எம் தலைவன்,

அதையே உறுதிபடுத்தினார் அம்மா..

கணவனிடம் சொல்லி அவர் கட்சியினை, அம்மா ஆட்சியினை காப்பாற்று..” என ஷாலினி நோக்கி ஓடவேண்டியது அவர்கள் பொறுப்பு)