தேனிசை தென்றல் தேவா
அவர் 1990களில் அறிமுகமானார், 2010 வரை அந்த இசையமைக்கும் பணியில் இருந்தார், முதல் 10 வருடம் அவரின் பொற்காலங்கள் பின் மெதுவாக விலகினார்
இலங்கையில் ராஜபக்சே பிரதர்ஸ் அரசியல் குடும்பம் என்றால் இவரின் பிரதர்ஸ் இசை குடும்பம். அண்ணன் தம்பி என எல்லோரும் இசையால் வளர்ந்தார்கள், வாழ்ந்தார்கள்.
இன்று அந்த தேனிசை தென்றல் தேவாவின் பிறந்தநாள்
தமிழ் திரை இசையில் சூரியன் சந்திரன் போன்ற நிரந்தர ஜாம்பவான்கள் விஸ்வநாதான், இளையராஜா, ரகுமான் என ஒருவரிசை உண்டு
அவ்வப்போது மின்னிவிட்டு மறையும் நட்சத்திரமாக சில உண்டு இந்த சிற்பி, வித்யாசாகர் எல்லாம் அவ்வகை
சிலர் வால்நட்சத்திரம் போல் அபூர்வாக வந்து விட்டு செல்வார்கள், அவர்களில் ஒருவர் தேவா
1990க்கும் 2000க்கும் இடைபட்ட காலங்களில் இங்கு பெரும் இடம் அவருக்கானது. தமிழ் இசையின் அடையாளமான இளையராஜா மேற்கத்திய அடையாளமான ரகுமானுக்கு இடையில் கிராமத்திலும் சேரா மேற்கத்திய இசையிலும் சேராத ஒருமாதிரியான இசையினை அல்லது இரண்டும் கலந்த இசையோடு அவர் ரசிக்க வைத்தார்
அதில் புயலும் இருக்காது அதே நேரம் தென்றலும் இருக்காது இரண்டும் கலந்தே இருக்கும்
சுமார் 10 ஆண்டுகாலம் அவரின் கொடி உயரே பறந்தது, அடுத்த 5 ஆண்டுகாலம் அரை கொடியில் பறந்தது, அதன் பின் தன் மகனுக்கு வழிவிட்டு ஒதுங்கிவிட்டார் தேவா
கான் பாடல்கள் அவரின் அடையாளம், அன்னார் ஆற்காடு பக்கம் பிறந்து சென்னையில் வளர்ந்தவர் என்பதால் அந்த கலாச்சார கானா பாடல் இசை அவருக்கு அழகாய் வந்தது
அதை சினிமாவில் மிக ரசிக்கும்படியாக சேர்த்தவர் அவர்தான். மக்களின் நாடிதுடிப்பினை உணர்ந்து அவரால் இசை கொடுக்க முடிந்தது, அதனால்தான் பலகாலம் நிலைத்து நின்றார்
பொதுவாக இசை அமைப்பாளர்களுக்கு கடவுள் பக்தி அதிகம் இருக்கும், அது இயல்பாய் வருவது. தேவா அதில் உயர்ந்து நின்றார் எவ்வளவோ பக்தி பாடல்களுக்கும் இசை அமைத்தார்
அந்த பலனோ என்னவோ இன்றுவரை ரஜினி எனும் மகா பிம்பத்துக்கு அவர் கொடுத்த பின்னணி இசையே பொருந்துகின்றது, வேறு யார் என்ன செய்தாலும் பொருந்தவில்லை
இதுபோல அழியா முத்திரைகள் ஏராளம்
சர்ச்சையும் அவர் மேல் இல்லாமல் இல்லை பாட்சா படத்து இசை டெர்மினேட்டர், ஜட்ஜ்மென்ட் டே காப்பி என்றார்கள், வாலிபடத்து இசை ஆங்கில பாடல் ஒன்றின் காப்பி என்றார்கள்
அட்லி அளவுக்கு இல்லை என்றாலும் சில சாயல் இருந்தது, அதனால் என்ன? ரசிக்கும் படி கொடுத்தார்
ஒருவிஷயம் உண்மை, இளையராஜாவும் ரகுமானும் தனி தனிபாதையில் சென்று கொண்டிருந்தபொழுது தேவாவின் வரவு இளையராஜாவுக்கே சிக்கலை கொடுத்தது
பின் தேவாவின் சாயலில் யார் யாரோ வந்து என்னவோ இன்று நடந்துகொண்டிருக்கின்றது
இரு ஜாம்பவான்களுக்கு இடையில் ஒரு திருப்பத்தை கொடுத்தார் தேவா
அவர் கானா பாடல் ஸ்பெஷலிஸ்ட் அவருக்கு ஏன் “தேனிசை தென்றல்” பட்டம் என சலசலப்பு முன்பு வந்தது
இன்றைய அனிருத், பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி இந்த ஹிப்ஹாப் கோஷ்டிகளின் பேயோசையினை கேட்கும் பொழுது தேவாவினை காலில் விழுந்து வணங்கலாம்
தேவா தானுண்டு இசையுண்டு தன் கானாவுண்டு என மிக சரியாக இருந்தவர், தேவையற்ற சர்ச்சைகளில் ஒருநாளும் சிக்கியதில்லை, அது நல்ல குணம்.

அந்த தேவாவுக்கு இன்று 60ம் பிறந்த நாள், அவர் ஆயிரம் பிறையும் ஆர்மோனியமும் கண்டு வாழ வாழ்த்துக்கள்
ரஜினி ரிட்டையர்டு ஆகும் முன்பு இன்னொரு வாய்ப்பு தேவாவுக்கு கொடுத்து பார்க்கலாம், ரஜினி ரசிகர்களுக்கான மிக சரியான இசை அவரிடம்தான் இருக்கின்றது