ஆடாது ஆடி அடங்குவதுதான் வாழ்க்கை என்பதை
ஆம் , நாம் ஒன்றும் பார்க்காமல் சொல்லவில்லை சுடலை மாடனின் கொடை விழாக்களை நாமும் தள்ளி நின்று பார்த்திருக்கின்றோம்
உண்மைதான், சாமியாடி கடுமையாக ஆடுவார். ஆட்டமென்றால் அகோரமாகத்தான் இருக்கும். அதில் ஆடு வெட்டுவார் , வாழை குலைகளை உரிப்பார் ஆடா ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு சுடுகாட்டுக்கு தனியே செல்வார்
வரும்பொழுது சுடுகாட்டு சாம்பலோ எலும்போ கையில் இருக்கும்
மானிட வாழ்வில் மட்டும் என்ன உண்டு? இதே காட்சிதான்
மனிதன் ஆடுமட்டும் ஆடுகின்றான், வாழ்வில் அவ்வளவு ஆங்காரமாக ஆடுகின்றான். அவனின் மாளிகை என்ன? தோரணம் என்ன? உணவென்ன? ஆடு என்ன? கோழி என்ன? கொண்டாட்டமென்ன?
ஆனால் கடைசியில் சுடுகாட்டுக்கு தனியே செல்கின்றான், சாம்பலே மிஞ்சுகின்றது
இந்த தத்துவமே தென்னகத்து சுடலை மாடன் கொடைகளில் சொல்லபடுகின்றது, இன்னும் ஆழமாக சொன்னால் தெய்வம் மிக சரியாக மானிட வாழ்வினை காட்சியாய் சொல்லி பாடம் நடத்துகின்றது
அதை புரிந்துகொள்ளத்தான் மானிடனுக்கு புத்தியில்லை, மாயை அவன் கண்களை மறைக்கின்றது
சாமி என்னமோ ஆட்டுக்கும் எலும்புக்கும் ஆசைபட்டதாய் அவன் நினைத்து கொடை நடத்துகின்றான்
சாமியோ அவனுக்கு ஞானத்தை போதிக்கின்றது
அவன் அப்பொழுதும் எனக்கு வாழ்வில் அதுவேண்டும் இதுவேண்டும் என கேட்டுவிட்டு எல்லாம் கிடைத்ததும் கிடா வெட்டுவதாக நேர்ந்துவிட்டு வருகின்றான்
சாமி அதை கேட்டுவிட்டு புன்னகைக்காமல் என்ன செய்யும்? ஆயிரம் கொடைகள் கண்டும் அவனுக்கு ஞானம் வரவில்லையே
அனுதினமும் சுடலை மாடன் கோவிலை பார்க்கும் ஒருவனுக்கு என்ன நினைப்பு வரவேண்டும்? சுடுகாடு போகுமட்டும் இச்சாமியே துணை என்றும், என்றேனும் ஒருநாள் மரிக்கபோகும் நாம் அந்த நீர் குமிழி வாழ்வின் தத்துவத்தை அனுதினமும் நெஞ்சில் நிறுத்தவேண்டும் எனும் நினைப்பு வரவேண்டும்,
ஆங்காரமும் வீண் கவுரவத்தையும் விட்டொழிக்கும் நினைப்பு வரவேண்டும்.
சுடலைமாடன் கோவிலை ஊரெல்லாம் வைத்திருப்பதும், அதற்கு கொடை நடத்துவதும் அதற்காகவே
விழாக்களை கொண்டாடுங்கள் ஆனால் அதிலுள்ள தத்துவத்தை கொஞ்சமேனும் நோக்குங்கள்
சுடலை அச்சுறுத்தும் சாமியோ இல்லை படு பயங்கர முரட்டுசாமி அல்ல, அது ஒரு ஞான தத்துவ வடிவம்.
அதன் விழாக்களும் கொண்டாட்டமும் ஆடல் பாடலும் எல்லாமும் அதுவே
ஆடாது ஆடி அடங்குவதுதான் வாழ்க்கை என்பதை சுடலை சாமியினை விட்டால் எந்த சாமியின் கொடை இவ்வளவு தத்ரூபமாக கண்முன் காட்டபோகின்றது?
