வசிஷ்ட நாராயண சிங்
அவர் பெயர் வசிஷ்ட நாராயண சிங். பிரிட்டிஷ் இந்தியாவில் பிகாரில் 1942ல் பிறந்தவர்.
அந்நாளைய நாலந்தா பல்கலைகழகம் இருந்த இடமான பீகாரின் ஞானம் அவருக்கு இயல்பாய் இருந்தது கணிதத்தில் அவர் தன்னிகரற்று இருந்தார்
அந்த ஞானம் அவரை அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கு இழுத்தது, 1950களின் அமெரிக்கா உலகில் யார் நன்றாக படித்தாலும் இழுத்து வைத்து படிக்க வைத்து பயன்படுத்தும் தேசமாய் இருந்தது
அப்படி சென்றவர் நாராயண சிங்
முப்பரிமாணம் தொடர்பான ஆராய்ச்சி கணக்கீடுகளில் அமெரிக்க பல்கலைகழகம் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து மிக சிறந்த கணிதமேதை என கொண்டாடபடும் பொழுது வயது 27
அன்று நாசா உருவாக்கபட்டு கடும் வேகத்தில் ரஷ்யாவுக்கு போட்டியாக ராக்கெட்டுகளும் விண்வெளி ஓடங்கங்களும் செய்துகொண்டிருந்த காலமது, நாராயண்சிங் நாசாவில் அந்த பணிகளில் பங்குபெற்றிருந்தார்
1974ல் இந்தியா வந்தவருக்கு பெரும் வரவேற்பு வழங்கபட்டு கான்பூர் ஐஐடியில் பேராசிரியர் பணியும் வழங்கபட்டது
பெரும் படிப்பு, அற்புதமான கணித ஞானம், மாபெரும் விஞ்ஞான பீடத்தில் பேராசிரியர் பணி, எப்பொழுது சென்றாலும் அமெரிக்காவில் ரத்தின கம்பளம் என எங்கோ இருந்தார் நாராயண சிங்
இஸ்ரோ உருவாக்கபட்ட காலங்களில் அவரின் பங்களிப்பு கணிசமாக இருந்தது
மனிதனின் கணக்கு ஒன்று என்றால் ஆண்டவன் கணக்கு வேறல்லவா?
உடல் என்பது ஆன்மா தங்கும் கூடு, அந்த ஆத்மாவுக்கான கட்டளை எங்கிருந்தோ வரும் சக்தியால் இயக்கபடும், அப்படி இயக்கபட்டு பெரும் இடத்தை அடைந்தார் நாராயண சிங்
அதே உடல் கூட்டில் மூளை என்பது பிரதான இடமமல்லவா? மானிடனின் கியர் பாக்ஸ் அமைப்பே அதுதானே
அதில் மனிதருக்கு சிக்கல் வந்தது, ஒருமாதிரியான மூளை கோளாறு அல்லது மனநோயால் பாதிக்கபட்டார், அவருக்கு அவரையே அடையாளம் தெரியவில்லை
முடிந்தவரை மருத்துவம் பார்த்த சுற்றுமும் அரசும் ஒரு கட்டத்தில் கை விரித்தன, இல்லாதானை இல்லாளும் மதியாள் எனும்பொழுது மனநோயாளி என்பவனை யார் மதிப்பார்?
அதன் பின் ஓரளவு மீண்டார் மறுபடியும் வீழ்ந்தார்
விஞ்ஞான சபைகளிலும் , பெரும் கணித மேதை கூட்டங்களிலும் இருந்த அவர் தெருவோர பிச்சைக்கார கோலத்துக்கு வந்தார்
அவர் பேச பேச அவையே கைதட்டிய காலம் போய், அவர் பேசினாலும் யாரும் புரிந்துகொள்ளமுடியா அளவு கொடுங்காலம் வந்தது
எவ்வளவோ கணித புதிர்களுக்கு விடை சொன்னவருக்கு எளிய மனிதர்களின் பேச்சே விளங்கவில்லை.
எவ்வளவோ கணித சூத்திரங்களை விளாசி தள்ளியவர் தன் கையெழுதிடவே தவித்ததை உலகம் கண்ணீரோடு கண்டது
கயிறை அறுந்த பட்டம் காற்றில் மிதப்பது போல் மிதந்தார், கட்டுபாடற்ற படகு ஆற்றுவெள்ளத்தில் இழுத்து செல்லபடுவது போல் இழுத்து செல்லபட்டார்


ஒருகட்டத்தில் அவரின் விஞ்ஞான கோலம் மறைந்து பிச்சைக்கார கோலத்திலே முடிவு செய்தது சமூகம்
அந்த பரிதாபத்துக்குரிய வஷிஷ்ட நாராயணன் சிங் கடந்த வாரம் மரணித்தார். அவரின் முந்தைய சாதனைகளை நினைவு கூர்ந்த மோடி அவருக்கு இரங்கல் தெரிவித்தார்
ஒருமனிதன் சில நேரம் யாரும் உதவமுடியா விதியில் சிக்கிகொள்கின்றான் என்பது இதுதான்
அவனின் படிப்புக்கும் திறமைக்கும் அங்கீகாரத்துக்கும் குறைவில்லை. அவன் நோயில் விழும்பொழுது தாங்கிபிடிக்கும் உதவிகளுக்கும் குறைவில்லை
ஆனால் யாராலும் அவனை மீட்டெடுக்க முடியாமல் போனது விதியின் சதியன்றி வேறென்ன?
ஒரு ஆன்மா இங்கு வந்து பெரும் ஞானத்தோடு எழவேண்டும் என்பதும் பின் பிச்சைக்கார கோலத்தில் சாகவேண்டும் என்பதும் விதியெனில் அதை மாற்றபோவது யார்?
நிச்சயம் சீனிவாச ராமானுஜம் போல பெரும் கணிதமேதை அவர், சீனிவாச ராமானுஜம் கொடுத்து வைத்தவன் சிறுவயதிலே போய்விட்டான், இவருக்கு அந்த யோகமுமில்லை
நீர்குமிழி வாழ்வுதான் இது, ஆனால் அதை முழுமையாக வாழவும் ஒரு வரம் வேண்டும், இறைவனின் பிராப்தம் வேண்டும்
நொடியில் மாறும் இவ்வுலகில் எதுவும் நிரந்தரமில்லை, கல்வி வேலை பணம் எதுவும் ஒருமனிதனை கடைசிவரை காக்க முடியாது என சொல்லிவிட்டு சென்றதுடன் நாராயண சிங்கின் வாழ்க்கை முடிவடைந்துவிட்டது
அவர் போதித்த கணிதத்தை விட அவரின் பிற்கால வாழ்வு ஆயிரம் தத்துவங்களை சொன்னதுடன் நிறைவடைந்துவிட்டது.