பட்டினத்தார்

தமிழக வரலாற்றில் குறிப்பாக ஆன்மீக வரலாற்றில் தனி இடம் பெற்றிருப்பவர் பட்டினத்தார், அவர் பெண்ணாசையினை வெறுத்தார் என்பது பலர் சொல்வது, ஆனால் உண்மையில் அவர் எல்லா ஆசையினையும் வெறுத்தார்

சொத்துக்காக சுற்றத்தார் காட்டிய வேட்கையும் இன்னும் அவர்கள் செய்த பல காரியங்களும் அவரை ஞானியாக்கின, “காதற்ற ஊசியும் வராது காணும் கடைவழிக்கே..” அதாவது காதறுத்த ஊசி பயன்படாது என்பது போல என்ன சொத்து இருந்தால் என்ன உயிர் போனால் தனியே பிணம் போகும் எனும் தத்துவத்தோடு ஞானியானார்

அன்றே காசி வரை சுற்றி பெரும் ஞானியாக திரும்பி வந்தார் கையில் ஒரு கரும்பு மட்டும் இருந்தது, அது வாழ்வு தத்துவத்தை சொன்னது, பெரும் ஞான போதனை சொன்ன அவர் சென்னை பட்டினபாக்கத்தில் மறைந்தார் அவரின் சமாதி இன்றும் அங்கு உண்டு

அவரின் போதனையும் ஞானமும் பாடலும் என்றும் நிலைத்திருக்கும்

அவருக்கு பின் அப்படி ஒரு சிவபக்தனை ஞானியினை தமிழகம் இவர் உருவில்தான் கண்டது, கையில் விசிறியும் ஒரு கொட்டங்கச்சியுமாக அவர் திருவண்ணாமலை பக்கம் உலாவியபொழுது யாரும் கண்டுகொள்ளவில்லை

ஆனால் கொஞ்சநாளில் அவரின் அருமை தெரிந்து அவரை பெரும் ஞானி என ஏற்றுகொண்ட கூட்டம் பெருகிற்று, பெரும் ஞானமார்க்கத்தை காட்டிவிட்டு இன்றும் அவரின் பக்தர்களுக்கு அரூபியாய் ஜொலிக்கின்றார் அம்மகன்

யோகிராம் சுரத்குமார் எனும் விசிறி சாமியார்

அவர் வடக்கத்திய பிறப்பு, பெரும் படிப்பு படித்தவரும் கூட, ஆனால் ஏதோ ஒரு சக்தி அவரை சாமியாராக்கி திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தது.

ஸ்ரீஅரவிந்தரிடம் ஞானமும் ரமணமகரிஷிரிட யோக தவமும் கற்றார் சுரத்குமார்

உண்மையில் இருவரின் வாரிசாக அவர் இருந்தார், ரமணர் எனும் ஞானமுனி அவருக்கு கொடுத்த ஞானமும் தவமும் மகத்தானது.

உலகெல்லாம் இருந்து ஏராளமானோர் ஞானம்பெறும் அந்த ஞானபூமியான திருவண்ணாமலை அவரையும் ஏற்றுகொண்டது, கையில் ஒரு விசிரியும், கொட்டாங்கச்சியும் கிழிந்த ஆடையுமே அவரின் சொத்தாயின‌

பட்டினத்தார் கையில் இருந்த கரும்புக்கு வாழ்வின் தொடக்கம் இனிமை, முடிவு கடுமை என தத்துவம் சொன்னார், இவர் கையில் இருந்த விசிறி , அவர்மக்களின் மனதில் இருக்கும் புழுக்கத்தை விரட்ட வந்தவர் என்பதை குறிப்பதாக அவரே சொன்னார், கொட்டங்கச்சி துறவு கோலம்

அந்த மகான் ஆங்கிலத்தில் பேசியிருக்கின்றார், ஆனால் அழுக்கு உடையும் பரதேசி கோலமுமாக அலைந்திருக்கின்றார், அவர் அங்கு செய்யா அற்புதமில்லை அவரிடம் வந்து ஏமாந்து சென்றவர் யாருமில்லை

தன்னை அண்டி வந்தவர்கெல்லாம் அவ்வளவு அற்புதங்களை செய்திருக்கின்றார், செய்துவிட்டு “என் தந்தையின் விருப்பம்” என அவர் சொன்னதுதான் உருக்கமான இடம்

ஆம் இயேசு பைபிளில் சொன்ன அதே வார்த்தை

கண்ணதாசன் கடைசி காலங்களில் காஞ்சிபெரியவரை எப்படி அணுகினாரோ அப்படி ஆன்மீக எழுத்தாளர் பாலகுமாரன் அவரை அணுகினார், பாலகுமாரனின் அந்த தாயுமானவன் எனும் அற்புதநூல் அதனாலே பிறந்தது

உண்மையில் அந்த விசிறி சாமியாரிடம் ஒரு விஷேஷித்த சக்தி இருந்திருக்கின்றது, மகா உண்மையான தூய துறவியாய் அவர் இருந்தார் அல்லது நல்ல துறவி எப்படி இருக்க வேண்டுமோ அதில் கொஞ்சமும் பிசறாகமல் இருந்தார்

அழுக்கு உடை, கையில் கொட்டாங்கச்சி, மரத்தடி தூக்கம், பிச்சைக்கார கோலம், பசியெடுத்தால் அவர் சிரட்டையினை ஏந்தினால் யாரோ காபி பால் ஊற்றுவார்கள் அதை உறிஞ்சிவிட்டு அவர்போக்கில் இருக்கும் அந்த‌ தியானம் அல்லது வெறித்த பார்வை

ஆனால் யாருக்கு என்ன உதவி வேண்டுமோ அல்லது யார்மேல் கடவுளின் கருணை இருக்கின்றதோ அவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து இரண்டொருவார்த்தை சொல்லி அவர்களின் வாழ்வினையே உயர்த்திவிட்டு அவர்போக்கில் செல்லும் அந்த வாழ்வு

அவரால் வாழ்வுபெற்றோர் பொன்னும் பொருளும் கோடியும் கொண்டு அவர் காலடியில் கொட்டினாலும் அதை எல்லாம் குப்பையாக பார்த்துவிட்டு நகர்ந்து சென்ற அந்த மனம்

எங்கோ பிறந்தேன், பகவான் என்னை தேர்ந்தெடுத்து திருவண்ணாமலைக்கு அனுப்பினார், அங்கே பரதேசி கோலத்தில் வாழ்த்து கடவுளுக்கு உகந்தவர்களுக்கு அவரின் கருணையினை பெற்றுகொடுத்தேன் எல்லாம் என் தந்தையின் விருப்பம் என சொன்ன அந்த மகோன்னதம்

அதுதான் துறவறம், அதுதான் சத்தியமான உயர்ந்த கோலம், அதுதான் உண்மையான சந்நியாசம்

அவர்களிடம் விளம்பரம் இருக்காது, வெற்று கோஷம் இருக்காது, யாருக்கும் சவால் விட மாட்டார்கள், தான் இதை மாற்ற வந்தவன் அதை திருத்தவந்தவன் என ஆணவத்தில் ஆடமாட்டார்கள்

தன்னால் முடியாதது எதுவுமில்லை என்ற சவாலோ பெரும் ஆணவ உறுமலோ அவர்களிடம் இருக்காது

எங்கு யாருக்கு என்ன தேவையோ? அது நியாயமாக இருக்கும் பட்சத்தில் தன்னை வெளிகாட்டிவிட்டு விளக்கில் மறையும் பூதம் போல் மறைந்துவிடுவார்கள் அத்துறவிகள்

அமைதியான நதிபோல் இருபபர்கள், அதில் அலை இருக்காது ஆவேச‌மிருக்காது ஆனால் ஆழம் யாரும் காணமுடியா அளவு இருக்கும்

நம்பிக்கை வைத்து நம்பினால் அவர்களின் விஸ்வரூபத்தை காணலாம் , ராமாயணம் அதை தெளிவாக சொல்கின்றது

குரு எக்கோலத்திலும் இருப்பார், நம்பிக்கை வைத்தபொழுது அவர் விஸ்வரூபமெடுப்பார் என சொல்வது ராமாயணமே

ராமாயணத்தில் மாபெரும் வீரனும் பெரும் அரசனுமான ராமன் விஸ்வாமித்திரரின் சீடரான ராமன் ஒரு குரங்கை அப்படி நம்பினான்

அட இக்குரங்குக்கு சக்தி இருந்தால் அது வாலியினை ஒழித்திருக்காதா? இந்த சுக்ரீவனிடம் அடைந்து கிடக்குமா? என ராமன் சந்தேகித்தால் ராமாயணமே இல்லை

ஆம் நமக்கான குரு எந்தவடிவிலும் இருக்கலாம், நாம அவர்மேல் வைக்கும் நம்பிக்கையினை பொறுத்தே பலன் கிடைக்கும்

மிக சரியான பலம்வாய்ந்த குருவினை கண்டடையும் பொழுதுதான் ஆச்சரியங்கள் நிகழும், ராமனுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்த அனுமான் அதுவரை அடங்கித்தான் இருந்தான்

ராமனுக்காக அவன் விஸ்வரூமெடுத்தான் தன் பலத்தை காட்டினான் மறுபடி அடங்கி சாதுபோல் இருந்தான்

ராமனின் அவதாரத்துக்கு பக்கதுணையாய் இருப்பதே தன் பணி என அவன் உணர்ந்திருந்தான்

பாரதத்தில் இக்காட்சி வேறுமாதிரி வரும் பாண்டவர் கண்ணனை ஞான வழிகாட்டியாக ஏற்றனர் வென்றனர், துரியோதன் குலபெருமைக்காக வீம்புபிடிக்கும் பீஷ்மரை ஏற்றனர் அழிந்தனர்

ஞானமிக்கவன் தேடலுக்கும் ஆணவக்காரனின் தேடலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்..

நல்ல ஞான குருக்களும், சித்தர்களும் , துறவிகளும் எக்கோலத்திலும் இருக்கலாம், அவர்களை கண்டடைந்து ஏற்றுகொள்வதில்தான் விஷயமும் வாழ்வும் உண்டு

அவர்கள் நமக்காக காத்தே இருக்கின்றார்கள், மனிதனே அவர்களை கண்டடைய சிரமபடுகின்றான், மாயை அவன் மனதை அப்படி மறைகின்றது, ஞானம் எனும் ஒளிவராமல் மாயை மேகம் மறையாது

ஞானம் கொண்டோரே தகுந்த குருவினை அடைய முடியும்..

யோகி ராம்சுரத்குமாரை அப்படித்தான் ஏற்றுகொண்டனர் அவரின் பக்தர்கள், அவர்கள் மிக சரியான பாதைக்கு சென்றிருக்கின்றார்கள், கடவுளின் கருணை அவர்களுக்கு இருந்திருக்கின்றது

உண்மையான ஒரு சித்தரை, துறவியினை அவர் வடிவில் கண்டது திருவண்ணாமலை பூமி. சத்தியம் நித்தியமுகாக சொல்லலாம் அவர் பண்டைய ரிஷிகள் மற்றும் ஞானிகளின் தொடர்ச்சியாக‌ நாம் கண்ட ஒரே சாட்சி யோகிராம் சுரத்குமர்

தன் அதிசயங்களால் ஒரு பைசா தனக்கு எடுத்தவர் அல்ல, ஒரு பெண்ணையும் எடுத்தவர் அல்ல ஒரு சென்ட் நிலம் கூட அவருக்கு இல்லை

ஆன்மீகவாதிகளில் இயேசுபிரான் ஒருவரையே அவருக்கு நிகராக காட்டலாம், அவரின் போதனையும் தோற்றமும் அவர் செய்த ஆச்சரியங்களும் அவர் காத்து நின்ற சத்தியமும் இயேசுவினை அப்படியே காட்டின‌

எத்தனையோ பேர்கள் அவரை கொண்டாடினர், வணங்கினர். அவரை மனதால் மிக வணங்கியவர் ரஜினிகாந்த்

முத்து படத்தில் வரும் அந்த பிச்சைக்கார சன்னியாசி வேடம் சாட்சாத் யோகிராம் சுரத்குமாரை மனதில் கொண்டு ரஜினி உருவாக்கி நடித்தது

ரஜினியிடம் உள்ள நல்ல குணம் தான் சிலாகிக்கும் ஆன்மீக வசனமோ இல்லை வடிவங்களையோ தன் படத்தில் வருமாறு பார்த்துகொள்வார்.

அவரின் படங்களில் பல வசனங்கள் அப்படி சாகாவரமாக அமைந்துவிடுவது அப்படித்தான்

அப்படிபட்ட ரஜினி முத்துபடத்தில் இந்த சாமியின் தோற்றத்தை வாழ்வை அப்படியே பிரதிபலித்திருந்தார், அந்த சாயல் அவருடையது

இன்று தமிழகமெங்கும் அவருக்கு பெரும் பக்த கூட்டம் உண்டு, இதெல்லாம் அவர் சேர்த்து வைத்த கூட்டம் அல்ல‌

வீடியோ, பத்திரிகை , சிஷ்ய கோடிகள் என அழிச்சாட்டியம் செய்ததால் வந்த கூட்டம் அல்ல‌

மாறாக அவரால் பலன் பெற்றவர்கள், அவரின் அருமையினை உணர்ந்தவர்கள், அவரால் தங்களின் ஆன்மா உருகபெற்றவர்கள் உருவாக்கியிருக்கும் கூட்டம் இது

இயேசுவின் சாயல் இதுதான், ரமணர், விவேகானந்தரின் சாயலும் இதுதான்

இப்படிபட்ட ஞானிகள் மகான்கள் இன்றும் உண்டா என்றால் உண்டு ஆனால் அறியமுடியுமா என்றால் அதற்கு கடவுளின் அனுகிரகமும் ஞான கண்களின் பார்வையும் வேண்டும்.

உண்மையான தேவையில் கடவுளை தேடினால் இம்மாதிரி மகான்கள் தெரிவார்கள் மாறாக அவரே பிச்சைக்காரன் அவனிடம் ஏது சக்தி? என ஒதுக்கினால் ஒரு மண்ணும் கிடைக்காது போலிகளிடமே சரணடைந்து எல்லாம் இழக்க வேண்டியிருக்கும்

ஏன் ரிஷிகள் இப்படி பிச்சைக்கார கோலத்தில் இருக்க வேண்டும்? அவர்கள் மன்னர்களாக ஆட்சியாளர்களாக இருந்தால் என்ன? இல்லை பக்த கோடி புடைசூழ நகை அணிந்து தங்க குடை பிடிக்க வந்தால் என்ன?

அது மானிடரை நாமும் ஆளவேண்டும் நம்மை எல்லோரும் வணங்கவேண்டும் எனும் தீயவழிக்கும் திமிர்பிடித்த நிலைக்கும் ஆணவத்துக்கும் இட்டு செல்லும்

இதனாலே பகவான் என் அருள் பெற்றவனே இந்த பிச்சைக்கார கோலத்தில் இருக்கும்பொழுது அவனால் அருள்பெரும் மானிடனும் ஞானம் பெறவேண்டும், கொஞ்சமும் அகந்தையின்றி ஆணவமின்றி அடங்கி இருத்தல் வேண்டும் எனும் தத்துவத்தை வைத்தான்.

இயேசு, விவேகானந்தர், பட்டினத்தார், ரமணர் என எல்லோரும் எளிமையாய் இருந்த தத்துவம் அதுவே

பழைய ஞானிகளும் ரிஷிகளும் எப்படி இருந்தார்கள்? அய்யா வைகுண்டர் எப்படி இருந்தார், ஞானி பட்டினத்தார் எப்படி இருந்தார் என்பதை நாமெல்லாம் உணர சாட்சியாய் வந்தவர் யோகிராம் சுரத்குமார்

இன்று அந்த மகானுக்கு பிறந்த நாள்

ஷீரடி சாய்பாபா போன்ற சாயலில் ரமணரின் சீடராக வாழ்ந்து சென்ற மகான் அவர்

இரண்டாம் அகத்தியனாய் வடக்கே இருந்து வந்தவர் அவர்

அய்யா வைகுண்டரை போல வாழ்ந்தவர் அவர், இயேசுவின் பிம்பமாக இங்கு உலாவியர் அவர், இன்றும் அரூபியாய் தன் பக்தர்களை காத்துவருபவர் அவர்

அந்த மகானுக்கு இன்று பிறந்த நாள், உலகெல்லாம் அவரின் பக்தர்கள் அவரை நினைவு கூர்ந்து வழிபடுகின்றார்கள்

வாய்காலில் வரும் வெள்ளம் வயலுக்கே செல்வது போல அவருக்கு செலுத்தபடும் வழிபாடெல்லாம் அந்த திருவண்ணாமலை நாதனையே சென்றடையும்

அப்படி திருவண்ணாமலையின் தெய்வத்தின் தூதனுக்கு இன்று உலகெல்லாம் வழிபாடுகளும் நினைவார்ந்த கொண்டாட்டமும் நடக்கின்றது

வடக்கே ஷீரடி போல தெற்கே இவரின் இடமும் பெரும் பக்தர்கள் வரும் இடமாய் மாறிகொண்டிருக்கின்றது

அந்த அவதார ஜெயந்தியில் அந்த அவதார நாயகனை நினைப்போம், ஷீரடி சாய்பாபா போல, இயேசு போல அவரின் உறுதிமொழியும் வலிமையானது உறுதியானது

எங்கெல்லாம் என்னை நினைத்து என்பெயர் சொல்லி அழைபபர்களோ அங்கு நான் சென்று உதவுவேன் என்பது அவரின் மொழிகளில் ஒன்று

நீங்கள் உண்மையிலே உதவி தேவைபடுபவராக ஆன்மீக அழைப்பிலோ இல்லை லவுகீக அழைப்பிலோ இருப்பீர்களானால் அந்த மகானை அழையுங்கள், மும்முறை அழையுங்கள்

மூன்றாமுறை அழைக்கும் முன் உங்கள் முன்னால் இருப்பார் அதை உணர்வீர்கள்..