மணமகனை தலைவெட்டி கொன்று அப்பெண்ணை விதவையாக்கிவிட்டது

நான்குநேரியில் காதல்ஜோடி ஒன்று, ஒரே சாதி காதல் ஜோடி ஒன்று நெல்லையில் உறவினர் வீட்டில் சரணடைந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை

அதற்குள் பெண்ணின் தரப்பு அந்த மணமகனை தலைவெட்டி கொன்று அப்பெண்ணை விதவையாக்கிவிட்டது

நிச்சயம் இது சாதி ஆணவ கொலை அல்ல, அந்தஸ்தும் அல்ல மாறாக வன்மம், பெண் எனும் சொத்து தன் வீட்டை விட்டு சென்றுவிட்டது அவன் களவாடி என்றுவிட்டான் எனும் கோபத்தில் வந்த வன்மம்.

அவளுக்கும் ஒரு மனம் உண்டு என்றோ, அவளுக்கும் சொந்த விருப்பு வெறுப்பு உண்டு என்றோ அந்த சண்டாள கும்பல் நினைக்கவில்லை. அவள் தன் தோப்பில் வளர்ந்த மரம் தன் மந்தையில் வளர்ந்த ஆடு என்ற அளவிலே அவர்கள் நினைப்பு இருந்திருக்கின்றது.

காலகாலம் தாமே அப்பெண்ணை பராமரிக்க போவது போலவும், அவள் இவர்கள் சொல்வதை தவிர வேறு வாழ்வு வாழவே கூடாது என்ற முடிவிலும் இப்பாதகத்தை செய்திருக்கின்றார்கள்

அப்பெண் அவளின் வாழ்வினை அவளே முடிவெடுத்து திருமணம் செய்திருக்கின்றாள், அவன் தன்னை நன்றாக வாழவைப்பான் என நம்பியிருக்கின்றாள், அவளின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் அவளே பொறுப்பு

மாறாக பெற்று வளர்த்துவிட்டோம் என்பதற்காக அவளின் மாங்கல்யத்தை பறிப்பது என்ன நியாயம்?

விலங்குகளும் பறவைகளும் பெற்றெடுக்கின்றன, வளர்க்கின்றன அவை பிரிந்து சென்று சந்ததி வளர்க்கும் பொழுது அவை கொஞ்சமேனும் தடுக்குமா?

மானிட சாதி தவிர வேறு எந்த உயிரிலும் இக்கொடுமையினை காணவே முடியாது

அந்த கொடும் விதி அவள் மூலம் அவன் உயிரை பறித்துவிட்டு அவனை உலகினின்று விடுவித்துவிட்டது, அவனால் அவள் தீரா சோகம் அனுபவிக்க வேண்டும் எனும் விதியும் நிறைவேறிற்று

இப்பெண்ணால் இவளின் சகோதரன் சிறைக்கு செல்லவேண்டும் என வகுத்தவன் யார்? அதற்கு ஒத்துழைத்த வழிகள் எவை?

கோப்பெருந்தேவியும், மண்டோதரியும் தவறு செய்த தங்கள் கணவனுக்காக அழுது புரண்டார்கள் என்றால் ஒரு நியாயம் இருந்தது

இப்பெண்ணின் கண்ணீருக்கு யாரிடம் பதில் இருக்கின்றது?

இந்து புராணத்தில் தாட்சாயினி குடும்பத்தார் விருப்பம் மீறி திருமணம் செய்து பின் தீயில் விழுந்து செத்த கதையும் அதனால் சிவனே மனம் உடைந்த கதையும் உண்டு, அந்த தாட்சாயினி உடலோடு சிவன் கதறி அலைந்து திரிந்தாராம்

விஷ்ணு வந்து சிவனுக்கு ஆறுதல் சொன்னார் என்கின்றது புராணம்

ஆம், மனமொத்த காதலர்களை பிரிப்பதும் அவர்கள் சாவுக்கு காரணமாய் இருப்பதும் அழிவினை கொடுக்கும் பாவங்கள் என்கின்றது இந்து தர்மம், தட்சாயினி கதை அதைத்தான் சொல்கின்றது

இந்த சண்டாளர்கள் அந்த பாவபழியினை சுமக்கட்டும், பகவான் விஷ்ணு சிவனுக்கு கொடுத்த ஆறுதலை போல அந்த அபலைக்கும் ஆறுதல் அளிக்கட்டும்

காலம் எல்லாவற்றையும் ஆற்றுமெனினும் இப்பொழுது அந்த பெண்ணுக்கு உரைக்க யாரிடம் மொழி உண்டு மவுனத்தையும் கண்ணீரையும் தவிர?