நன்றி அறிவிப்பு நாள்

அமெரிக்காவில் இப்பொழுது அதாவது நவம்பர் கடைசி வாரம் நன்றி அறிவிப்பு வாரம் என கொண்டாடபடும், இன்று அவர்களுக்கு நன்றி அறிவிப்பு நாள், அது தேசிய விடுமுறை

இன்று தங்கள் வாழ்வில் தங்களுக்கு உதவிய அல்லது உதவும் எல்லோருக்கும் நன்றி சொல்லி ” Thanks Giving Day” என கொண்டாடி கொண்டிருக்கின்றார்கள், அதன் தாக்கம் ஐரோப்பாவிலும் இருக்கின்றது

ஐரோப்பாவில் இருந்துதான் அதை அவர்கள் களவாடினார்கள் என்பது வேறு விஷயம், பொதுவாக ஐரோப்பியருக்கு ஜனவரியில் தொடரும் வேலை ஆண்டு நவம்பரில் முடியும், டிசம்பர் முழுக்க கொண்டாட்டம் அது கிறிஸ்மஸ் பண்டிகையோடு முடிந்து மறுபடி ஜனவரியில் வேலை செய்ய வருவார்கள்

அந்த விடுமுறை கொண்டாட்டம் தொடங்கும் முன்பாக இந்த வருடம் முழுக்க தங்களுக்கு உதவியர்களுக்கு நன்றி சொல்கின்றார்களாம்

இந்தியாவில் இந்த வழக்கத்தை நாம் பூஜா கொண்டாட்ட நாட்களில் காணலாம், ஆயுத பூஜை என்பது இந்த வழக்கமே, ஆம் அவர்கள் மனிதர்களுக்கு மட்டும் நன்றி தெரிவிப்பார்கள், நாமோ சக மனிதருக்கும் அதோடு நம் தொழிலுக்கு உதவும் ஆயுதங்களுக்கும் நன்றி தெரிவிப்போம்

இன்னும் பொங்கல் நாளில் ஆடுமாடுகளுக்கும் சூரியனுக்கும் கூட நன்றி தெரிவிப்போம்

ஆக நன்றி தெரிவிப்பதில் அவர்களுக்கு சுயநலம் அதிகம், தங்களுக்கு உதவிய மனிதருக்கு மட்டும் நன்றி தெரிவிப்பார்கள்

நாம் நமக்கு வழிகாட்டிய பெரியவர்களுக்கு அந்நாளில் காலில் விழுந்து நன்றி சொல்வோம், அத்தோடு விடுவோமா? நம்முடன் இருக்கும் ஜடபொருளிலும் , ஐந்தவிறிவு விலங்கிலும் இறைவனின் இயக்கத்தை கண்டு அவைகளுக்கும் நன்றி செலுத்துவோம்

அட ஊர் ஊருக்கு நடக்கும் திருவிழாவும், கொடை விழாக்களும் என்ன? அவை ஆலய தெய்வத்துக்கு நடக்கும் நன்றி அறிவிப்பு விழா.

ஆம் ஒவ்வொரு செயலிலும் , நமக்கு நடைபெறும் ஒவ்வொரு விஷயத்திலும் எதெல்லாம் துணைக்கு வருமோ அதெல்லாம் கடவுளின் அருள் என கருதி அவற்றினை வணங்கி அதன் மூலம் கடவுளுக்கே நன்றி சொல்லும் சமூகம் இது

நன்றி செலுத்துவதில் இந்திய சமூகம் ஒருபடி மேலேதான் இருக்கின்றது

ஐரோப்பிய அமெரிக்கரின் இப்பண்டிகை நமது பொங்கல் மற்றும் ஆயுதபூஜா கொண்டாட்டத்தின் சாயல் அன்றி வேறல்ல, அவர்களுக்கு முன்பே நன்றி பண்டிகை கொண்டாடும் வழக்கத்தை கொண்டிருப்பவர்கள் நாம்.