நித்திக்கான நேரம்
நாம் ஆன்மீகத்தையும் யோகிகளையும் பரமஹம்சர்களையும் சுவாமிகளையும் மகான்களையும் நோக்கி பார்த்தவர்கள் என்ற வகையில் சொல்கின்றோம், மகான்களும் யோகிகளும் அதிசய வரம் சில பெற்றிருப்பார்கள்
கடுமையான விரதத்தாலும் தவத்தாலும் சில அதீத வலிமையினை பெறுவார்கள், அந்த சக்தி மூலம் பல வியத்தகு காரியங்களை ஆற்றமுடியும்
இது ஆன்மீகத்தின் மிக சிறிய படிநிலை இதற்கு மேல் எவ்வளவோ உண்டு, இதனால்தான் முற்றிலும் உணர்ந்தவர்கள் பஞ்ச கோலத்தில் பரதேசியாய் அலைவார்கள், ஆம் உண்மை தெரிந்துவிட்டால் நாம் வெறும் தூசு என்பது புரியும்
அதுதான் முற்றும் உணர்ந்த பரிபூரண நிலை, அவர்கள் ஒதுங்கி இருப்பார்கள், யாரிடமும் பேசவும் மாட்டார்கள், ஆனால் ஒரு பார்வையிலே மகா அற்புதம் நிகழ்த்த அவர்களால் முடியும்
ஆனால் பந்தி முடிந்த வீடுபோல் ஒரு நிறைவான அமைதியில் இருப்பார்கள், வெந்த பதார்த்தம் போல ஒரு சலனமற்ற நிலையில் இருப்பார்கள்
அம்மாதிரியான மகான்களை பார்ப்பது மகா மகா அபூர்வம்
நித்தி போன்ற சாமிகள் உலகில் ஏராளம் உண்டு. அவர்கள் அற்புதம் செய்ய கூடியவர்களே, நோய்களை தீர்ப்பவர்களே, அதற்கு மேலும் ஏகபட்ட வித்தைகள் அவர்களிடம் உண்டு
ஆனால் உண்மை ஞானம் என்பது அதைவிட பலகோடி மடங்கு மேலானது
இந்த பரிபூரண ஞானமில்லாதவர்கள், நித்திதவிர வேறு சாமியினையோ அவர்களின் ஞான வாதங்களை சித்து விளையாட்டுக்களை, மகா ஞான பார்வையின் வீரியத்தினை அறியாதவர்கள் நித்தியினை சுற்றி ஆடிபாடி கொண்டிருக்கின்றார்கள்
நித்திசாமியும் தன் சீடகோடிகளை விடாமல் வைத்துகொண்டிருக்கின்றார்
அவர்கள் பூனையினை புலி என்றும், உலக்கையினை யானையின் கால் என்றும் நம்பிகொண்டிருக்க்கின்றார்கள், சுவாமியும் ஆம் நான் யானை மட்டுமல்ல டைனோசர் என சொல்லி அவர்களை நம்ப வைத்து கொண்டிருக்கின்றார்
நம்ப வைப்பது அவர் திறமை, நம்புவது அவர்கள் விருப்பம்
அவரை விட பெரும் பெரும் ஞானமும் தவமும் பெற்றோர் இந்தியாவில் உண்டு ஆனால் அவர்கள் குரல் கூட வெளியில் கேட்காது, நிறைகுடம் தளும்பாது
யாருக்கு தன்னை வெளிபடுத்தவேண்டுமோ அவர்களுக்கு மிக சரியாக தன்னை வெளிபடுத்திவிட்டு அவர்கள் போக்கில் இருப்பார்கள்
நித்தி சில யோக சக்திகள் பெற்றதால் ஞானியாகவோ மகானாகவோ கடவுளாகவோ ஆகிவிட மாட்டார்
வரம் கொடுத்த எல்லோரையும் ஆட விட்டு அடக்குவதுதான் இந்து தர்மமும் புராணமும் சொல்லும் பாலபாடம்
இது நித்திக்கான நேரம், அவர் ஆடட்டும், ஆண்டவனுக்கான நேரம் வரும்பொழுது உண்மை விளங்கும்