பஞ்சாயத்துராஜ்

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறபோகின்றது.

உள்ளாட்சி தேர்தல் அவசியம், ஆனால் எல்லா ஊரிலும் தெருவிலும் வீட்டுக்கு வீடு பகையினை வளர்ப்பதில் இந்த உள்ளாட்சி தேர்தல் என்பது பெரும் சாத்தான்

பகை வளர்ப்பு, மன கசப்பு , கொலை போன்றவற்றை ஊரெல்லாம் தூண்டிவிடும் காரியம் இந்த தேர்தல்

தெருவுக்கு தெரு, வார்டுக்கு வார்டு , ஊருக்கு ஊர் எப்படியெல்லாம் பிரிக்க முடியுமோ அப்படி எல்லாம் பிரிக்கும்

சாதி,மதம், இனம்,மொழி என்றெல்லாம் பிரித்து பகைவளர்க்கும், அதையும் தாண்டி சொந்த குடும்பத்தில் நடக்கும் குத்துவெட்டெல்லாம் உண்டு

என்ன நாடு இது?

பாராளுமன்ற தேர்தல், மாநில சட்டமன்ற தேர்தல்,உள்ளாட்சிக்கும் தேர்தல்

ஏன் மாநில சட்டமன்ற உறுப்பினர் இதை எல்லாம் பார்க்கமாட்டாரா? அல்லது அந்த தேர்தலுடனே உள்ளாட்சிக்கும் ஒன்றை நடத்தி தொலைத்தால்தான் என்ன?

உள்ளாட்சி தேர்தல் வெள்ளையன் காலத்து வகை, அது தேவையா என்பதை விட அதனால் ஏற்படும் ஆபத்தான விஷயங்கள் தேவையா என்றால் தேவை இல்லை என்பதே சரி

ஆனால் எல்லோரும் தலைவனாக இருக்க ஆசைபடும் நாடு இது

மெம்பர், கவுன்சிலர், பிரசிடென்ட், சேர்மன், அப்படியே எம்.எல்.ஏ, எம்பி பிரதமர் என அவனவனுக்கு ஆசை கழுகுக்கு இறக்கை முளைத்தது போல் பறக்கின்றது

அது சேவை என்றோ மக்களுக்கு உழைக்க வாய்ப்பு என்றோ கருதுவார் யாருமிலர்

சம்பாதிக்க வேண்டும், எதிலெல்லாம் முடியுமோ அதில் எல்லாம் சம்பாதிக்க வேண்டும், இது என் ஏரியா இங்கு எனக்கு இத்தனை ஆயிரம் வோட்டு உண்டு, திமுக அதிமுக என யார் வந்தாலும் என்னை தாண்டி செல்லமுடியாது என சிற்றரசர்கள் அல்லது எல்லைசாமிகளை உருவாக்குவதை தவிர உள்ளாட்சி தேர்தல் ஒன்றையும் செய்யாது

இப்பொழுது தூங்கும் சாதி, மதம், இனம் பூதங்கள் எல்லாம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கபட்டவுடன் ரத்தம் குடிக்க கிளம்பும், எங்கெல்லாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிக்கும்

ஒரு காலத்தில் எப்படி இருந்தது பஞ்சாயத்து அமைப்புகள், எவ்வளவு உன்னதமாய் இருந்தன? குடவோலை முறை சொல்வதென்ன?

இந்திய பஞ்சாயத்து முறை மிக தொன்மையானது, சுற்றுபட்டி கிராமங்களுக்கு ஒரு அமைப்பு இருக்கும், கிராமத்துக்கு 5 பேர் கொண்ட ஒரு சபை இருக்கும், அந்த சபைக்கு பெயர் பஞ்சாயத்து. பன்ஞ் என்றால் ஐந்து, ஆயத் என்றால் சபை அல்லது பேரவை, பன்ஞ் + ஆயத்.

தமிழகத்தில் குடவோலை முறை என அது இருந்தது, மிக அருமையான மக்களாட்சி முறையினை அது போதித்தது, சுருக்கமாக சொன்னால் அது மக்களாட்சியின் அடிச்சுவடி அல்லது அகராதி.

கிராமங்களின் சகல பிரச்சினைகளையும் இதுதான் தீர்மானிக்கும், (சினிமாவில் காட்டபடும் ஆலமரமும், நசுங்கிய செம்பும் மட்டுமல்ல), ஏரி தூர்வாருதல், சாலை, விவசாய சிக்கல் என எல்லாவற்றிற்கும் இதுதான், சுருக்கமாக சொன்னால் இதுதான் உண்மையான‌ “நமக்கு நாமே”.

அப்படி இருந்த பஞ்சாயத்துக்கள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியிலும் பெரிதாக பாதிக்கபடவில்லை, ஆனால் 1857ல் கம்பெனியை பிரிட்டிஷ் அரசு எடுத்துகொண்ட‌வுடன் (அதாவது வருமானம் கொட்டும் டாஸ்மாக்கினை தமிழக அரசு, சாராய வியாபாரிகளிடமிருந்து கைபற்றிகொண்டதல்லவா? அதே பாலிசி) சில மாறுதல்களை செய்தது.

அதாவது கிழக்கிந்திய கம்பெனி காட்டு கொள்ளைக்கார கம்பெனி ஆட்சேபனை இல்லை, ஆனால் பிரிட்டிஷ் அரசு அப்படி அல்ல, சட்ட திட்டங்கள் எல்லாம் போட்டு , மிக நாகரீகமாக கொள்ளை அடிக்காவிட்டால் உலகம் மதிக்காது அல்லவா?, உடனே இந்தியாவிற்கான சட்டம் எழுதினார்கள்.

அப்படி இந்திய உள்ளாட்சிகளுக்கு சட்டம் வகுத்தார்கள், 1883ல் புதிய உள்ளாட்சி முறையினை கொண்டுவருவதாக சொல்லி, இந்திய பஞ்சாயத் முறையினை சட்டபூர்வமாக்கினார்கள்.

சில கிராமங்களை ஒன்றிணைத்து பஞ்சாயத் ஆக்கினார்கள், தேர்தலும் உண்டு. ஆனால் படித்தவர்களும், சொத்து உள்ளவர்களும் மட்டுமே வாக்களிக்கமுடியும். இதில் தான் இன்று பல பஞ்சாயத்துக்கள் தமிழகத்தில் விசித்திரமாக காணப்படும்.

அதாவது இன்று பேய் கிராமம் அதாவது ஆளில்லா கிராமங்கள் பெயரிலும் பஞ்சாயத்து உண்டு, ஆனால் அடுத்த பெரிய கிராமங்கள் இப்போதும் இப்படி சொல்லும், “அரை ஏக்கர் அளவு கூட இல்லா ஊரெல்லாம் பஞ்சாயத்து, ஒரே ஒரு ஒரு 4 மாடி அடுக்குகுடியிருப்பில் அந்த ஊரையே அடக்கலாம்..”, காரணம் இதுதான் அன்றைய காலத்தில் சுற்றுபட்டியில் எந்த ஊர்காரனுக்கு அதிக நிலம் இருக்கின்றதோ? அவன் அதிக வரி கட்டுவான், அவனுக்கே பஞ்சாயத்து அந்தஸ்து.

இல்லானை இல்லாளும் மதியாள் என்பதல்ல இல்லாஊரை பிர்ட்டிசாரும் மதியார்.

இப்படி பின் வெள்ளையரால் உருவாக்கபட்ட பஞ்சாயத்திற்கு தேர்தல்களும் நடந்தது, தலைவர்களும் வந்தார்கள். சுதந்திரம் வாங்கிய புதிதில் மகாத்மா காந்தி இந்த பஞ்சாயத்துக்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என முழங்கினார்.

1988களில் இந்த பஞ்சாயத்து அமைப்புக்களுக்கு புத்துயிர் கொடுத்தார் ராஜிவ்காந்தி, பஞ்சாயத்துராஜ் என்ற மறுமலர்ச்சிகள் தொடங்கின. அதாவது சில கூடுதல் சலுகைகள் வழங்கபட்டன.

இதுபோதாதா? கட்சிகளில் பெரும் பொறுப்பு வாங்கி சென்னைக்கு செல்ல முடியாதோர், அல்லது மாவட்ட செயலாளர் எனும் செல்வாக்கான பதவிக்கு, சுப்பிரமணியபுரம் பாணியில் முயற்சித்தும் முடியாதோர் என சகலரும் முட்டிகொளும் இடம் பஞ்சாயத்து தேர்தல் ஆயிற்று.

பல உடனடி கொலைகள், சில ஆறபோட்டு , பற்றி எரியும் சாதி, மத பிரச்சினைகளின் மூலம் என இன்று பெரும் பிரச்சினைகளின் மூலம் இந்த பஞ்சாயத்து தேர்தல், வோட்டு, பிரிவினை என சொல்லும்படி அது போயிற்று.

அப்படி என்ன இருக்கின்றது பஞ்சாயத்து மன்றங்களில் என்றால்? அது மக்களாட்சி, இந்தியாவில் மக்களாட்சி என்றால் அதன் மறுபெயர் ஊழல்.

கிராம சாலைகள், குடிநீர், ஏரிகள் பாதுகாப்பு, என பல மக்கள்நல திட்டங்களை நடத்தும் பொறுப்பு அதற்கு உண்டு, திட்டங்கள் என்றால் அதற்கு ஒரு தொகை அரசால் ஒதுக்கபடும், அந்த தொகையினை உரிய நிறுவணங்களுக்கு செலுத்தி மக்களுக்கு தேவையான தரமான திட்டங்களை நிறைவேற்றி தரவேண்டும்.

இங்குதான் பஞ்சாயத்துக்காரர்கள் இந்தியா முழுக்க புகுந்து ஆடுவார்கள், நிச்சயமாக சொல்லி கொடுப்பது கட்சிகளின் அரசுகள். “இந்த உரிமம் உனக்கு வேண்டுமா? இத்தனை சதவீதம் எனக்கு கொடுத்துவிடு”, இது பஞ்சாயத் முறைகளிலும் எதிரொலிக்கின்றது.

உதாரணம் குடிநீர் அமைக்கும் பணி என்றால், போர்வெல்காரரிடம் ஒரு கமிஷன், ஹார்டுவேர் கடைக்காரரிடம் ஒரு கமிஷன், தண்ணீர் தொட்டிக்காரரிடம் ஒரு கமிஷன் என கறந்துவிட்டால் எவ்வளவு வரும்?

அவர்கள் என்ன செய்வார்கள்? கமிஷன் கொடுத்தது போக மீதிக்கு பணிசெய்வார்கள், விளைவு மிக விரைவில் தொட்டி இடியும், பைப் உடையும், மக்கள் அரசு ஒழிக என போராடுவார்கள்.

பஞ்சாயத்துக்காரர்களை உருவாக்குவதும் மக்கள் தான், எமது சாதி, எமது மதம் என்பார்கள், வாங்கும் பணத்திற்கு வாக்களிப்பார்கள், பின் அரசு சரியில்லை, அரசியல் சரி இல்லை மொத்தத்தில் இந்தியா இப்படித்தான் என டீக்கடை வாசலில் தீர்ப்புசொல்லிவிட்டு கிளம்புவார்கள்.

இப்படிபட்ட திட்டத்துடன் அமைக்கும் சாலை எப்படி இருக்கும்? அதில் செல்லும் அரசு வாகனங்கள் எப்படி இருக்கும்?, நாம் பார்த்துகொண்டிருப்பது போல்தான் இருக்கும். சாலைக்கும், குடிநீருக்குமே இவ்வளவு கமிஷன் என்றால் பின் எல்லாமும் எப்படி இருக்கும்? அலுவலக மிதியடி விரிப்பிலும், கழிவறை பினாயிலிலும் கூட கமிஷன் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்றாகிவிட்டது என்கின்றார்கள்.

ஊழலுக்கு அன்று கட்சிகள் கொடுத்த மறைமுக‌ பெயர் கட்சி நிவாரண நிதி, இன்று உள்ளாட்சிமன்றங்களில் பகிரங்க பெயர் கமிஷன்.

அதாவது பொதுநலத்திற்கு வருபவர்கள் எல்லோரும் கமிஷன்நலம் என்ற ஒரு நலத்தில் மட்டுமே வீட்டைவிட்டு தெருவில் கால்வைக்கும் காலம் இது.

வெறும் சேவை மட்டும் செய்யுங்கள் சல்லிகாசு பார்க்கமுடியாது என சொல்லிபாருங்கள், பஞ்ஞாயத்து அலுவகத்தில் காந்தியின் படம் மட்டுமே இருக்கும்.

மற்ற தேர்தல்களை விட இந்த தேர்தல் கொஞ்சம் பயமுறுத்தகூடியது, காரணம் உள்ளாட்சி தேர்தல் யதார்த்தபடி நாம் தமிழர் குஞ்சுகள் வார்டு மெம்பர் மற்றும் கவுன்சிலர் போன்ற பதவிக்கு வரும்

வந்துவிட்டு சும்மாவா இருக்கும்? படுபயங்கர அழிச்சாட்டியம் எல்லாம் செய்யும்

ஆனால் அதே நேரம் அரசியல் என்றால் என்ன என அவை நேரடியாக பார்த்து திக்கெட்டும் அடிவாங்கி அடிக்கடி மூஞ்சி வீங்கியும் கிடக்கும் என்பதால் சுவாரஸ்ய காட்சிகளை பார்க்கலாம்