ரஜினி நிச்சயம் ஒரு அதிசயம்

ரஜினி நிச்சயம் ஒரு அதிசயம், நிறமானவர்களும் ஒருமாதிரி நாகரீக வடிவம் கொண்டவர்களுமே இங்கு சினிமாவினை ஆளமுடியும் என்பதை நொறுக்கி போட்டவர் அவர்

கருப்பு நிறமும் பரட்டை தலையுமாய் ஒரு அடியாள் வேடத்துக்கும் லாயக்கற்ற அவர் நடிகராக வந்தது அதிசயம்

தமிழே தெரியாத அவர், தமிழறிஞர் மகனான முக ஸ்டாலினை விட நன்றாக தமிழ்பேச பயின்றது அடுத்த ஆச்சரியம்

வில்லனாக வந்து நடிகனாக போராடி வந்ததது அடுத்த ஆச்சரியம்

6 வயதிலே நடிக்க வந்து உழைப்புக்கும் அறிவுக்கும் அழகுக்கும் பெயர் போன கமலஹாசனை தூக்கிவிழுங்கியது அடுத்த ஆச்சரியம்

கிட்டதட்ட 40 வருடமாக நம்பர் 1 இடத்திலே நிலைத்திருப்பது மாபெரும் ஆச்சரியம்

இதுவரை அச்சாதனையினை செய்தவர் யாருமில்லை, ராமசந்திரன் கூட 23 ஆண்டுகள்தான் முதலிடத்தில் இருந்தார்

இங்கு நீண்டநாள் நம்பர் 1 ஸ்தானத்தில் இருப்பது நிச்சயம் ஆச்சரியமே

அதுவும் சினிமாவால் அரசியலை நிர்ணயிக்கும் மாநிலத்தில் ராமசந்திரன், ஜெயா, கலைஞர், பழனிச்சாமி, பன்னீர் செல்வம் என பல முதல்வர்களை மிக சரியாக கையாண்டு முதலிடத்தில் இருப்பது மாபெரும் ஆச்சரியம்

ஒன்றுமே இல்லாமல் சென்னை வந்து, பெரும் மக்கள் சக்திக்கு தலைவனாய் மாறி, சர்ச்சைளில் பெரிதும் சிக்காமல் கொஞ்சம் சிக்கினாலும் குதிரைபோல் ஓட தனி திறமை வேண்டும்

ஒரு ஆன்மீகவாதி இங்கு நடிகராய் வெல்வது பல கருப்பு சக்திகளுக்கு பிடிக்காது

ரஜினி 1980களிலே கவனிக்கபட்டார், எதையுமே மிக சரியாக உள்ளுணர்வால் அறியும் ராமசந்திரன் ரஜினி தனக்கொரு சவாலாக வருவார் என அன்றே கணித்தார்

அன்றில் இருந்தே அவருக்கு எதிர்ப்பு, அவரை குடிகாரன் பெண்பித்தன் பைத்தியம் ஊமையும் நொண்டியுமான குழந்தைகளை பெற்றவன் என ஏக புரளிகள்

அவர் எதையும் மறுக்கவுமில்லை, ஏற்றுகொள்ளவுமில்லை புன்னகைத்தபடி கடந்தார்

ராமசந்திரன் தொடுத்த சவால்களை அனாசயமாக கடந்தார், ஜெயா அவர்மேல் அறிவிக்கபடா யுத்தமே நடத்தினார்

எம்.ஆர் ராதா, சந்திரபாபு, பாக்யராஜ், டி.ஆர், வடிவேலு என எத்தனையோ ஜாம்பவான்கள் அரசியலை தொட்டு நாசமாயினர் அதை அனாசயமாக் கடந்தார் ரஜினி, ஜெயாவிடம் அவர் மீண்டது ஆச்சரியமே

ஜெயா சிங்கம் என்றால் கலைஞர் நரியும் மலைபாம்பும் கலந்த கலவை, அதுவும் ரஜினியினை வளைத்துபார்த்தது, அவரிடம் இருந்து தப்பி அவரை தள்ளியும் வைக்காமல் நெருங்கவுமிடாமல் ரஜினி கையாண்டதில் கலைஞருக்கே தலை சுற்றியது

ஆம் தமிழகத்தில் நல்ல கலைஞனுக்கு வரும் சாபம் இரண்டு ஒன்று அரசியல் இன்னொன்று குடியும் பெண்களும்

இம்மூன்றில் இருந்தும் தப்பித்து அதிசயமாக செல்லும் ரஜினி நான்காவதும் ஒரு கோஷ்டியிடம் இருந்து தப்பினார்

அது பிரிவினைவாத நாத்திக கோஷ்டி

அது மதம், மொழி, இனம் என பிரித்துபேசி அழிச்சாட்டியம் செய்யும், அவற்றின் பிடி சினிமாவிலும் உண்டு

சினிமாவில் ஒருகோஷ்டி பெரியார், ஈழம், தனிதமிழ் என என்னவெல்லாமோ சொல்லி திரிய தன் வழியில் இந்திய தேசியமும் ஆத்திகமும் பேசியவர் ரஜினி

ராகவேந்திரா முதல் பாபாஜி வரை தயக்கமின்றி பேசினார் நடித்தார், அதன் வெற்றி தோல்வி எல்லாம் பற்றி கவலையே இல்லை

அக்கம் பக்கம் பாருங்கள்

மகா கலைஞன் மம்முட்டி இடம் இப்பொழுது இல்லை, சிரஞ்சீவியின் இடம் இளசுகளால் பறிக்கபட்டது

மும்பை கன்னட நிலையும் அதுவே

ஆனால் பாலசந்தர் காலத்தில் வந்து இந்த கார்த்தி சுப்புராஜ் காலம் வரை ஈடுகொடுத்து நம்பர் 1 இடத்தில் இருப்பது மாபெரும் சாதனை

நிச்சயம் பெரும் அருள் அவரோடு இருக்கின்றது.

உங்களாலும் என்னாலும் முடியாததை இன்னொருவர் செய்தால் அதுதான் சாதனை, அதை அவரை தவிர யாருமே செய்யமுடியாது எனும்பொழுது பெரும் சாதனை

சினிமா குதிரையில் ஏறி அரசியல் பள்ளத்தில் விழாமல், சிங்களிடமும் யானைகளிடமும் சிக்காமல் நெருப்பாற்றை கடந்து சினிமாதுறையின் போட்டிகளை கடந்து, சூழ்ச்சியினை முறியடித்து லகானை அட்டகாசமாக கையாள்பவர் ரஜினி

நிச்சயம் அது மாபெரும் சாதனை

இங்கு தன் நிலையிலே கடைசிவரை நின்ற‌ நடிகன் என யாருமில்லை

பாவதர், சின்னப்பா வகை ஒருவகை

ராமசந்திரன் அரசியல்வாதியாய் போராடி செத்தார், சிவாஜி கணேசனின் நிலை உலகறிந்தது அது தனி வகை

அவ்வகையில் புரூஸ்லி, ஜாக்கிசான் என வெகுசிலருக்கே அந்த யோகம் உண்டு, அதில் ரஜினி மிக அட்டகாசமாக பொருந்துவார்

உலக நிலவரமும் அப்படியே

அவர் தமிழக எல்லைகளை தாண்டி இந்திய எல்லையினை தாண்டி இன்று உலக நட்சத்திரமாக மாறிவிட்ட பின் அவருக்கான எல்லை பெரிது, அமெரிக்கா தொடங்கி ஜப்பான் வரை எல்லா நாட்டு மக்களும் அவரை ரசிக்கின்றார்கள்

அந்த இடத்தில் தொடர்ந்து மின்னிகொண்டே இருப்பது என்பது ஒரு சாதனை அல்லது வரம்.

அரசியலிலும் பிடி கொடுக்காமல் சினிமாவிலும் தன் இடத்தை விடாமல் தேசிவாதியாக மதவாதியாக தன் வழியில் மகா உச்சத்தில் நிரந்தரமாக மின்னும் ரஜினி அந்த விருதுக்கு தகுதியானவரே

அவரிடம் ஒரு நியாயதர்மமும் இருக்கின்றது, ஒரு சத்தியத்துக்கு கட்டுபட்ட யானை போல நிற்கின்றார், பெரும் தொண்டர் ரசிக படை இருந்தும் தன் சினிமாவினை ஒரு பார்வையாளராக பாருங்கள் என்பதை தவிர அவர்களை பயன்படுத்தவில்லை

தன் படம் என்பது தயாரிப்பாளரின் முதலீடு, அதற்கு நஷ்டம் வராமல் பார்க்கின்றாரே தவிர தன் தொண்டனை வைத்து எப்படி எல்லாம் லாபம் சம்பாதிக்கலாம் எனும் ஒருவகை ஏமாற்றுதனம் அவரிடமில்லை

தன் ரசிகன் காலமெல்லாம் தன் ரசிகனாக மட்டும் இருக்கட்டும் அவனை வேறு எந்த சிக்கலிலும் இழுத்துவிட கூடாது எனும் மகா கவனம் அது, அது வாழ்த்தவேண்டிய குணம்

ரஜினி இங்கு சிலரால் சாடபட காரணம் இரண்டு, ஒன்று அவர் இந்து அபிமானி இரண்டாவது தேசியவாதி

இந்த இரண்டில் ஒரு குணம் இருந்தாலே இங்கு விடமாட்டார்கள், அந்த மாபெரும் சாதனையாளனுக்கு இரண்டு அபூர்வமும் இருந்தால் விடுவார்களா?

மாட்டார்கள், அதனால் ஓரமாக நின்று ஒப்பாரி வைப்பார்கள், அவர்கள் அப்படித்தான்

அவர்களை தாண்டி யோசியுங்கள் ரஜினியின் சாதனையும் அவருக்கு ஆண்டவன் கொடுத்த ஆசீர்வாதமும் பாதுகாப்பும் புரியும்

அவர் உச்ச நட்சத்திரம் மட்டுமல்ல, ஒருகாலமும் திசை மாறா துருவ நட்சத்திரம்

அவர்மேல் சில‌ சர்ச்சை இருக்கலாம், பிடிக்காதவர்கள் எவ்வளவும் கரித்து கொட்டலாம்

ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை கடவுளை தேடி தேடி வணங்கும் ஒரே நடிகன் அவர்தான், தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதாகவும் அந்த சக்தியே தன்னை வழிநடத்தி இவ்வளவு உயர்த்தியதாகவும் நம்புகின்றார்

பொருள் வேண்டுபவர்கள் திருப்பதி மலைக்கு செல்வார்கள், அருள் வேண்டுபவர்கள் திருவண்ணாமலைக்கு செல்வார்கள்

தன்னில் தன்னை தேடி ஞானத்தை அடைய துடிக்கும் யோகியே இமயமலைக்கு செல்வான், அந்த யோகிகள் ரிஷிகள் வரிசையில் தன்னையும் அமர்த்திகொள்வான்

கொட்டி கிடக்கும் பணம், குவிந்து கிடக்கும் புகழ், கண்ணசைத்தால் பணத்தை தங்கமாக அடித்து அவர் காலடியில் குவிக்க காத்திருக்கும் தயாரிப்பு கம்பெனிகள், ஒரு வார்த்தை சொன்னால் தமிழகத்தை ஆட்டிவைக்கும் தொண்டர்கள்

அகில இந்தியா முழுவதும் செல்வாக்கு, இந்தியா தாண்டியும் சொல்வாக்கு

இத்தனையினையும் ஒதுக்கிவைத்துவிட்டு இமயமலைக்கு அமைதி தேடி செல்கின்றார் என்றால் அம்மனிதனின் மனம் சாதாரண மனமாய் இருக்கமுடியாது

அது ஞானத்தை மகா அமைதியினை அந்த பரம்பொருளின் ஜோதியினை கண்டறிய துடிக்கும் யோகியின் மனம்

இப்படி ஒரு மனிதன் இனி எக்காலமும் வரமாட்டான் , இந்த மனம் யாருக்கும் அமையாது

ஒரு ஆன்மீக மனநிலையில் அவரை நோக்கினால் கையெடுத்து வணங்கத்தான் தோன்றும்.

ரஜினி அவரை புரிந்தோருக்கு மாபெரும் அதிசயம்., புரிந்து கொள்ளமுடியாதோருக்கு புதிர்.

ரஜினி மேல் இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபமும் வெறுப்பும் என்றால் அதன் பெயர் கோபம் அல்ல மாறாக பயம்

அந்த ரஜினி ராமசந்திரனை முறைக்கும் பொழுது இவர்களுக்கு பிடித்தது, ஜெயாவினை எதிர்த்தபொழுது மிக பிடித்தது

1996ல் திமுக கூட்டணிக்கு அவர் ஆதரவு சொன்னபொழுது “வாவ் வாட் எ மேன்” என கொண்டாடியது இவர்களே

ரஜினி நம்மை போல திமுகவினை தாமதமாக புரிந்து கொண்டார், அதன் பின் இவர்களுக்கு அவர் பிடிக்காமலே போய்விட்டார்

ரஜினி ஒரு தேசியவாதி என்பதும் இந்துமததின்பால் பெரும் பற்று உள்ளவர் என்பதுமே இவர்கள் அவரை கரித்து கொட்ட ஒரே காரணம்

திமுக எனும் கட்சிக்கு அவர் கடுமையான சவாலாக உருவாகலாம் என அஞ்சுகின்றார்கள்

1996ல் ரஜினியால் ஆட்சிக்கு வந்த அவர்களுக்கு அந்த அச்சம் வருவதில் ஆச்சர்யமேதுமில்லை

இந்து கடவுள் மறுப்பு இந்திய தேசிய எதிர்ப்பு என்பதை தங்களின் கொள்கையாக வைத்திருக்கும் திமுகவுக்கு ரஜினிஎனும் தேசியவாதியும் இந்துமத அபிமானியும் எரிச்சலே

அது தீரா வயிற்றேரிச்சலே

தங்களின் ஏக போக அரசியலுக்கு ரஜினி பெரும் அச்சுறுத்தல் என அஞ்சி அலறுகின்றார்கள்

ரஜினி சாதியில் அடைபட மாட்டார், தமிழக இனம் மற்றும் இதர எல்லையில் அவரை அடைக்க முடியாது

பாமகவும் இன்னும் பலரும் அவரை குறிவைத்தது அதனால்தான்

மதம் இனம் கடந்த பெரும் அடையாளம் ரஜினி

ராமசந்திரன் , ஜெயாவுக்கு பின் காலம் அவருக்கே அந்த வாய்ப்பினை கொடுத்திருகின்றது

பைபிளில் ஒரு காட்சி உண்டு

இயேசு சும்மா நடந்து போனாலே பேய்கள் எல்லாம் “அய்யோ எங்களை தொலைக்கவா வந்தீர்” என அலறுமாம்

அப்படி இப்பொழுது ரஜினியினை நோக்கி அலறுவது யாரென கவனமாக பாருங்கள்

அது திக, திமுக மற்றும் பிரிவினைவாத
இம்சைகளாக மட்டுமே இருக்கும்

அந்த ரஜினிகாந்தை நினைத்து பார்த்தால் பரிதாபமே மிஞ்சும் , ஒருநடிகன் இங்கே நிம்மதியாக இருந்துவிடவே கூடாது எனும் சாபம் மிக்கது தமிழ்நாடு

நிச்சயம் ரஜினி சூப்பர்ஸ்டார் ஆவோம் என்றோ , இல்லை அரசியலை ஆட்டுவிப்போம் என்றோ சென்னைக்கு வரவில்லை, சாதாரண சிவாஜிராவ் 1970களில் நடித்து பிழைக்கத்தான் வந்தார்

கருப்பும் கலைந்த முடியும் சரியாக தமிழும் தெரியாத அவன் தொடக்கத்தில் வில்லனா, காமெடியனா, கதாநாயகனா என தெரியாமல் தடுமாறியதெல்லாம் தனி கதை

ராமசந்திரனின் அரசியல் பிரவேசமும் 1980களின் கால கட்டமும் அவனிடமே இருந்த வசீகர ஈர்ப்பும் அவனை சினிமாவில் உச்சத்துக்கு இழுத்து சென்றது

இசையும் கதையும் பாடலும் வசனமும் காட்சியும் தயாரிப்பும் இன்னும் பலவும் அவனுகேற்ற்ப வளைந்து கொடுத்தன‌

அதுவரை சரி, அவன் வேகமாக வெற்றிபடியில் ஏறும்பொழுது முதல் கல்லை எறிந்தவர் ராமசந்திரன்

தான் வந்த வழியில் இன்னொருவன் வரகூடாது என முதல் கல்லை அவர்தான் எறிந்தார்

ஏகபட்ட மிரட்டல்கள் சோதனைகள், ரஜினி வளர கூடாது என்பதில் கவனமாய் இருந்தார் ராம்சந்தர்

1980களில் பலத்த சோதனையினை சந்தித்து ஆமாம் நான் மெண்டல்தான் என பெரும் பழியோடு மீண்டார், நிச்சயம் அவர் அரசியலுக்கு வரவில்லை ஆனால் அஞ்சினார்கள்

ராமசந்திரன் விரட்டினார் ரஜினி ஓடினார்

பின் ஜெயாகாலம் வந்தது, பில்லா படத்தில் என்னை ரஜினிக்கு ஜோடியாக போடுங்கள் என கெஞ்சிய ஜெயா இப்பொழுது ஆடினார்

அடுத்த இன்னிங்க்ஸை தொடங்கினார் ரஜினி , அது எங்கெல்லாமோ சுற்றி மூப்பனாரிடம் ரஜினியினை இழுத்து சென்றது

1996ல் நடந்த தவறு மூப்பனாருக்கு தன் பலம் தெரியாமல் இருந்ததும், ரஜினிக்கும் அப்படி இருந்ததுமே

திமுக அங்கு தேவையற்ற ஆணி, ஆனாலும் உள்ளே புகுந்து பலனை அனுபவித்தது, நிச்சயம் அன்று திமுக இல்லை என்றாலும் மூப்பனார் ரஜினிகூட்டணி சாதித்திருக்கும்

அதன் பின் மூப்பனார் பிரதமராக கூடாது என திமுக சிரித்துகொண்டே கழுத்தறுத்தபின்பு ரஜினி மனதால் அழுதார்

என்னடா அரசியல் இது என்ற வெறுப்பு அவருக்கு மேலோங்கிற்று, துரோகம் என்றால் என புரிய ஆரம்பித்தது

காங்கிரஸின் உட்கட்சியும் அதன் ஒருமாதிரி தன்மையும் புரிய ஆரம்பித்தபின் , தமிழக காங்கிரஸ் திமுகவின் பினாமி என அவர் புரிய ஆரம்பித்தபின் அவருக்கு பாஜக தவிர வேறு வாய்ப்பில்லை எனினும் உள்ளே செல்லவில்லை

துரோகத்தில் சரிந்த மூப்பனார் ஜெயாவிடமே செல்ல மனம் வெறுத்தார் ரஜினி

அதன் பின் வருவோர் போவோர் எல்லாம் ரஜினியினை வம்பிழுத்தனர் ராமதாஸ் அவர் இவர் என ஏராளம், அதை சில சக்திகள் ரசிக்கவும் செய்தன‌

ஆள் அம்பு சேனை வாய்த்தும் அரசியல் என்றால் என்ன என்பதை 1997லே புரிந்த ரஜினி தள்ளி நின்றார், ஆர்வகோளாறில் குதித்த விஜயகாந்த் சிக்கி மாண்டே விட்டார்

ராமசந்திரன் ஜெயா என கடந்த ரஜினி கலைஞர் எனும் மலைபாம்பினை சாதுர்யமாக கையாண்டார்

வெட்டவுமில்லை ஒட்டவுமில்லை மிக சரியாக அவரை கையாண்டார், அரசியல் சாணக்கியனான கருணாநிதியே ரஜினி நிலைப்பாடு தெரியாமல் தலையினை பிய்த்த காலங்கள் உண்டு

ஆனால் மறைமுக தொந்தரவுகள் வந்தன, சமாளித்தார்

கலைஞர் பாஷையில் சொல்வதாக இருந்தால்

ராமசந்திரன் விரட்டினார் ரஜினி ஓடினார், ஜெயா விரட்டினார் ஓடினார் கலைஞர் விரட்டாமல் விரட்டினார்

ஓடினார் ஓடினார் ரஜினி சிங்கப்பூர் மருத்துவமனை வரை ஓடினார்

அதன் பின் திரும்பி வந்தார்

இப்பொழுது திமுகவினர் அவரை குறிவைத்து அடிக்கின்றனர், பாஜக அனுதாபி என்பதால் அவரே அடுத்த ஆபத்து என அலறுகின்றனர்

ரஜினியினை பாஜக பக்கம் தள்ளியது யாரென்றால் இவர்கள்தான்

அன்றே நல்லவர் மூப்பனாரை பிரதமராக்கியிருந்தால் ரஜினிக்கு ஏன் இந்த வெறுப்பு வரபோகின்றது

தங்களுக்கு பிடித்தமாதிரி ரஜினிஎனும் காளைக்கு சிலர் மூக்கணாங்கயிறு போட பார்த்தார்கள், யானை என்றாலும் அடக்கியிருப்பார்கள்

அடக்கி தங்களுக்கு வண்டி இழுக்க, தங்களை சுமக்க வைத்திருப்பார்கள்

ரஜினி எனும் டைனோசரை என்ன செய்வது என அவர்களுக்கும் தெரியவில்லை பாவம்

ஆக 42 வருடமாக எதிர்ப்பு எதிர்ப்பு என ஒன்றை மட்டுமே சந்தித்து வரும் துரதிருஷ்டமான நிலை ரஜினிக்கு

அவர் வெளியில் வரவும் முடியாது, வந்தாலும் குற்றம், வந்து பேசினாலும் குற்றம்,பேசாவிட்டால் அதை விட குற்றம்

விரட்டும் அரசியல்வாதி ஒருபக்கம்

அரசியலுக்கு வா என அழைக்கும் ரசிகன் ஒருபக்கம்

இதில் யாரை பகைக்க என தெரியா ரஜினி வருவேன் ஆனால் வரமாட்டேன் என ஒருமாதிரி விலகி செல்கின்றார்

ஆன்மீகத்திலும் தியானத்திலும் தனக்கான அமைதியினை தேடுகின்றார்

நிச்சயம அவர் யாருக்கும் எதிரி அல்ல அப்படி நினைப்பவரும் அல்ல‌

தன் தொழிலான நடிப்பு, நிம்மதி தேடி நிறைவான ஆன்மீகம் இதை தவிர ஏதும் அவர் தேடுபவரும் அல்ல‌

அவரின் வழியில் சென்றுகொண்டிருக்கின்றார்

அவரின் பலத்தை பார்த்துவிட்டவர்கள் அவரை மடக்கி போடவும் அல்லது விரட்டி அடிக்கவும் படாதபாடு பட்டுகொண்டிருக்கின்றார்கள்

1980களில் இருந்தே இது குறித்து நீண்ட அனுபவம் கொண்ட ரஜினி தனக்கே உரித்தான சாதுர்யத்தில் எல்லாம் கடந்து செல்கின்றார்

நிச்சயம் அவரால் அதிமுக பக்கம் செல்லமுடியாது, ஹேஸ்யங்கள் இருக்கலாம் உன்னை மிரட்டிய ராம்சந்தர் ஜெயாவின் நாற்காலியில் நீ அமர்ந்து பழிவாங்கு என சில ஆலோசனைகள் வரலாம்

ஆனால் அவர் செல்லமாட்டார்

திமுக கேட்கவே வேண்டாம், முக ஸ்டாலினுக்கு ஆதரவு என்றால் ரஜினி பேரன் கூட அவரிடம் விளையாட செல்லமாட்டான், அது பா. ரஞ்சித் படத்தினை விட கொடும் முடிவு

அவர் செல்லமாட்டார், ஆனால் வா என்ற இழுப்பும் மிரட்டலும் ஒரு பக்கமும், வராதே .. வந்தால் என எச்சரிக்கையும் அலறலும் இன்னொரு பக்கமும் கேட்டுகொண்டே இருக்கும்

தமிழ்நாட்டில் சூப்பர்ஸ்டாராக இருப்பது ஒருபக்கம் எரியும் தீ, மேலே வட்டமிடும் கழுகு, ஒருபக்கம் ஓநாய், இன்னொரு பக்கம் முதலை கூட்டம், கொஞ்சம் கவனம் தப்பினால் அடித்த்து தூக்கும் புலிகூட்டம், நீர் என கைவைத்தால் உள்ளே ஓளிந்திருக்கும் முதலைகூட்டம் நடுவில் பயணிப்பது போன்றது.

ஒவ்வொரு நொடியும் ஒருவித நெருக்கடியிலேதான் கழியும்

நிம்மதி என்பதும் நிரந்தர மகிழ்ச்சி என்பதும் ஒருகாலமுமில்லை.

உலக‌ நடிகர்கள் வாழ்விலே சபிக்கபட்ட வாழ்க்கை தமிழ்நாட்டில் சூப்பர்ஸ்டாராக இருப்பது.

தமிழக சூப்பர்ஸ்டாராக இருப்பது எவ்வளவு பெரும் சிரமம் என்பது ரஜினியின் ஆழ்மனம் ஒன்றுக்குத்தான் தெரியும்

அந்த அற்புதமான நடிகனை அவன்போக்கில் நடிக்கவிடுவதுதான் சரி

வைடூரியம் என்பது பலவகைகளில் மின்னகூடியது, அதனை திருப்ப திருப்ப பலமாதிரி ஒளிரும், அதை பார்த்து ரசிக்கலாம்

மாறாக நீதான் ஓளிகொடுக்க வேண்டும் எண்ணெய் விளக்குக்கு பதிலாக தொங்கு என்பதெல்லாம் சரி அல்ல‌

அந்த வைடூரியம் எவ்வளவோ சிக்கலுக்கு இடையில்தான் மின்னுகின்றது, இன்னும் மின்னட்டும்

அதை தெருவிளக்கு ஆக்கிவிடாதீர்கள்

எங்களின் அபிமான ரஜினிகாந்த் அவர்களே, தன்னை அறிந்தவன் ஞானி. நீர் உம்மை நன்றாக அறிந்திருக்கின்றீர், எதை செய்யவேண்டும் எதை செய்ய கூடாது என்பது உமக்கு நன்றாய் விளங்கியிருகின்றது

உமக்கு அறிவுரை சொல்ல அவசியமே இல்லை

உங்களிடம் நாம் வியப்பதும் ஆச்சரியமும் நன்றியுமாக பார்ப்பது ஒன்று உண்டு. ஆன்மீக ஞானிகளை உங்கள் சினிமாவில் அடையாளம் காட்டுவீர்கள்

உயர்ந்த இடத்தில் இருப்பவன் , மக்களால் கவனிக்கபடுபவன் என்ற முறையில் மிக சிறந்த ஆன்மீக குருக்களை அடையாளம் காட்டினீர்கள்

அதில் ராகவேந்திரர் வந்தார், அண்ணாமலை தெய்வம் வந்தது, அருணாச்சலம் வந்தார், முருகன் வந்தார்

விசிறி சாமியார் , பாபா போன்ற யோகிகள் எல்லோரும் வந்தனர். இந்துமத ஆலயத்தையும் வழிபாட்டையும், தியான முறைகளையும் உங்களை போல் சொன்னவர் எவருமிலர்.

இந்த நாட்டின் உன்னத ஞான அடையாளம் எதையும் நீர் தமிழ்நாட்டுக்கு காட்டாமல் விட்டதில்லை, எந்த ஞானி உண்மை ஞானி என நீர் அறிகின்றீரோ அந்த சாயல் உம் படத்தில் கட்டாயம் இருக்கும்

ஆண்டவன் கட்டளை அது என உணர்ந்த உண்மை மனதால் மட்டுமே அது சாத்தியம்

உங்களிடம் உண்மை இருக்கின்றது, அந்த உண்மையில் தெய்வம் வாழ்கின்றது

ராகேவேந்திரா முதல் பாபா, விசிறி சாமியார் வரை உங்களை ஆசீர்வதிக்கட்டும், ஏக இறைவன் உங்களை இன்னும் உயர்த்தட்டும்

ஒரு குறையுமின்றி இன்னும் பல உயரங்களை நீங்கள் எல்லா துறையிலும் பெற நாமும் அந்த பரம்பொருளிடம் தியானிக்கின்றோம்