புதுவகையான சமூக சிக்கல்

இந்த வாட்சப் குரூப் வந்தபின் புதுவகையான சமூக சிக்கல் ஒன்று உருவாகிவிட்டது

அதாவது எல்.கே.ஜி தொடங்கி பட்டபடிப்பு வரையான ஒவ்வொரு காலத்துக்கும் அவனவனுக்கு வாட்சப் குரூப்பும் அதில் அந்த‌ கோஷ்டிகளும் இருக்கின்றன.

நினைவுகளில் மூழ்கி தொலைத்துவிட்ட மகிழ்ச்சியினை தேடும் அவைகள் சந்திக்க திட்டமிடுகின்றன‌

மகிழ்வான காலங்களை மனம் ஒருகாலமும் மறக்காது என்பது மனதுக்கான பெரும் சாபம், துன்ப நாளை கூட இன்பநாளில் மறக்கும் மனம், இன்ப கால நினைவுகளை ஒருநாளும் தொலைக்காது

வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று வாழும் பொழுது எதிர்காலத்தை நோக்கி ஓடுவதும், ஓடி சென்றபின் கடந்த காலத்தை நோக்கி திரும்ப முடியாமல் தவிப்பதுமாகும்

அந்த மான்கள் எதை நோக்கியோ காலத்தால் விரட்டபடுகின்றன , ஓடி சலித்தபின் வந்த பாதைக்கு திரும்பி ஓட தவிக்கின்றன‌

அவிழ்த்துவிட்ட நெல்லிகனி மூட்டையாக அவை சிதறடிக்கபட்டாலும், தொழில்நுட்பம் அவர்களை இழுத்து சேர்த்து கட்டிவிடுகின்றது

இதனால் முக்காலங்களில் இல்லாபடி பள்ளி, கல்லூரி சகதோழர்கள் சந்திப்பது எளிதாகின்றது, போக்குவரத்து அதை இன்னமும் எளிதாக்குகின்றது

சந்தித்துவிட்டு பழம் நினைவுகளில் மூழ்கிவிட்டு வருவது ஒன்றும் தவறல்ல, பெரும்பாலான வாட்சப் குரூப்கள் சந்திப்புப்பின் கலைக்கபடுகின்றன இல்லை காற்று வாங்குகின்றன‌

40 வயதில் 15 வயது நினைவுகளுக்குள் நீந்தலாமே தவிர அதிலே நிற்க முடியாது, அது மனதின் இயல்பு அல்ல, தொடர்ந்து பேசவோ பழகவோ தேவை இல்லா நிலை ஒருபுறமும், வாழ்வியல் நெருக்கடி மறுபுறமும் இழுத்து போடுகின்றன‌

ஒரு ஆர்வத்தில் தேடிவிட்டு, அந்த ஆற்றங்கரையில் அமர்ந்துவிட்டு நினைவுகளில் மூழ்கிவிட்டு திரும்பிவிடுகின்றார்கள், அவ்வளவுதான், அதற்கு மேல் செய்ய ஒன்றுமில்லை

ஒருவருடம் சந்தித்துவிட்டு , அடுத்த வருடம் சந்திக்க யாரும் தயாராக இருப்பதில்லை. அது ஒரு மாயை, காட்சி கண்டுவிட்டால் மயக்கம் தீர்ந்துவிடுகின்றது

ஆனால் சில விஷயங்கள் சரிவ அமையாமல் ஒருமாதிரி இருப்பவர்களுக்கு மனதில் இருக்கும் நெருப்பு தீ பிடித்து எரிகின்றது

பெரும்பாலும் முதல் காதல் பள்ளியில்தான் தோன்றும், அன்றுள்ள காலநிலைக்கு அதை சொல்லவும் முடியாது, எதிர்காலம் தெரியா நிலையில் அதை தொடரவும் தெரியாது

பனிகாலத்தில் கம்பளிக்குள் சுருண்டு கிடப்பது போல அதை மனதிலே வைத்து சுருண்டு கிடப்பதே சுகம்

மிக மிக இளவயதிலே உண்மையான காதல் தோன்றும், அது மிக மிக சுகமானது. அது வேறேதும் நாடாது, பார்க்க வேண்டும், பார்த்துகொண்டிருக்க வேண்டும் என்றேதான் தோன்றும்

விடிந்தும் விடியாத காலை போல, மலர்ந்தும் மலராத மலர் போன்ற தெளிவில்லா மனநிலை அது

படிப்பு தேர்வு என அதை எல்லாம் கடந்துவிடும் மனம், பின்னொரு நாளில் அவர்கள் சந்திக்கும் பொழுது அதை எல்லாம் பூதாகரமாக தலைக்கு ஏற்றுகின்றது

மாடு அவசரமாக தின்றுவிட்டு சாவகாசமாக அசை போடுவதை போல வாழ்வில் எங்கெல்லமோ ஓடிவிட்டு திரும்ப சந்திக்கும் பொழுது எல்லா வாய்ப்பும் கூடுகின்றது

கட்டுபாடும் பக்குவமும் உள்ளோர் கடக்கின்றனர், காதலே வராத சில விதிவிலக்கான பிறவிகள் உண்டு அவையும் வழக்கம் போல் கடக்கின்றன‌

ஆனால் நிகழ்காலத்தில் சரிவர உறவுகள் வாய்க்காதவர்கள் அந்த பழங்கால விட்டுபோன உறவுகளை தொடர் நினைத்து சவால் எடுக்கின்றனர்

அது அவர்களையும் பாதித்து அவர்கள் குடும்பத்தையும் பாதிக்கின்றது, இது இப்பொழுது பெருகுகின்றது

கடந்தவாரம் திருவனந்தபுரத்துக்காரன் வாட்சப் குரூப் வகுப்பு தோழிக்காக மனைவியினையே கொன்று கைதானான்

இன்று விவாகரத்தான ஆசிரியினை ஒருவர் தன் பள்ளி காதலனை மீட்டெடுக்க கூலிபடையிடம் சில லடச‌ங்களை இழந்து காவல்நிலையத்தில் கண்ணை கசக்கி கொண்டிருக்கின்றார்.

அனுதினமும் இம்மாதிரி செய்திகள் வருகின்றன, வெளிவராத கூத்துக்கள் ஏராளம்.

தொழில்நுட்பம் கையில் கிடைத்து மனிதர்களை இணைக்கும் பொழுது பல விபரீதங்கள் ஏற்பட தொடங்கியிருக்கின்றன‌

மனித மனம் கொண்டாட்டத்துக்கும் உரிமையான உறவுகளுக்கும் மகிழ்வுக்கும் ஏங்க கூடியது, அதன் தன்மை அப்படியானது

தொலைந்த மகிழ்ச்சியினை , பழைய மகிழ்வான காலங்களின் நபர்களோடு மீட்டெடுக்கலாம் என எளிதில் நம்பிவிடுகின்றது மனம்

ஆனால் யதார்த்த வாழ்வுக்கும் அதற்கும் வெகுதூரம் என்பது விபரீதங்கள் நிகழ்ந்த பின்பே புரிகின்றது.

வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு சுகமானது, 40 வயதில் 15 வயது வாழ்வுக்காக ஏங்கினால் 70 வயதில் 40 வயதுக்கான காலங்களுக்காக ஏங்க வேண்டும்

முழு வாழ்க்கையும் பழைய ஏக்கத்திலே கழிந்துவிடும்

மாறாக வாழும் நொடியினை ரசித்து கடப்பதே வாழ்வு, மரணத்தை நோக்கி செல்லும் பயணத்தில் ஒவ்வொரு நொடியினையும் புது புது விஷயத்தையும் தேடி செல்ல வேண்டுமே தவிர பழையதையே நினைத்திருந்தால் அங்கேதான் நிற்க வேண்டும், வேறேதும் வாரா

கடவுள் அதை அழகாக படைத்திருக்கின்றான், காலத்துக்கேற்ற பருவநிலை போல வயதுகேற்ற மனநிலையும் அழகாக கொடுத்திருக்கின்றான், அதில் திளைப்பதே சுகம்

ஓடிவிட்ட காலங்களில், வாழ்க்கை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக செதுக்கிவிட்டபின், அந்த தோப்பில் இருந்த அதே பழைய மரமெனவோ, அதே பறவையெனவோ அதை எதிர்ப்பாப்பது எந்த வகை நியாயமும் அல்ல‌

இது பெரும் சமூக சிக்கலாக, புதிய மன உளைச்சல் விஷயமாக உருவாகி வருகின்றது. கவனமாய் தவிர்த்தல் அனைவருக்கும் நலம்

இதெல்லாம் 96 போன்ற படங்களில் பார்க்க நன்றாய் இருக்குமே அன்றி , நடைமுறைக்கு சரிவராது

வாழ்க்கை என்பது ஒருவழிபாதை , அதில் திரும்பி வருவது என்பது ஏகபட்ட குழப்பங்களை ஏற்படுத்தும்.

அதுவும் சொந்தம் பந்தம் குடும்பம் என ஏகபட்ட விலங்குகளை மாட்டி ரதத்தில் இழுத்து செல்லும் விதியினை பின்னால் திருப்புவது என்பது முடியா விஷயம்

வளரும் மரம் அந்தந்த பருவத்தில் இருப்பது நலம், மொட்டு வைத்த வாழை அடுத்த வாழை கன்றை பார்த்து புன்னகைக்க முடியுமே தவிர அதாக மாறமுடியாது

பறந்துவிட்ட பறவை ஒன்று மறுபடி அந்த பால் வண்ண பருவத்துக்கு திரும்ப முடியாது.

அவனவன் இருக்குமிடம் ஆண்டவன் போட்ட பிச்சை, அறியா மானிடருக்கு வாட்சப் குரூப்பில் பச்சை