இந்த புதன் குசேலனுக்கானது

பகவான் கண்ணன் இளவயதாயிருந்த பொழுது அவனுக்கிருந்த பல நண்பர்களில் குசேலனும் ஒருவன்

பின்னாளில் கண்ணன் துவரகாபுரி அரசனாகின்றார், குசேலன் 27 குழந்தைகளுடன் சிரமபடுகின்றான்,

கண்ணணின் அரசு பற்றியும் , கொடை பற்றியும் அறிந்தாலும் கண்ணனிடம் கை ஏந்த அவனின் தன்மானமும் கவுரவமும் தடுக்கின்றது

ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் உதவும் கண்ணன் தனக்கும் உதவமாட்டானா? என அவனை சந்திக்க கிளம்புகின்றான், மன்னனை சந்திக்க செல்லும் பொழுது வெறும் கையுடன் செல்ல கூடாது என்பது மரபு

அந்த ஏழை குசேலன் அவலை மட்டும் தன் வேட்டி நுனியில் முடிந்து செல்கின்றான். அவனிடம் இருந்தது அதுதான், சிறுவயதில் அவனும் கண்ணனும் சேர்ந்து உண்டதும் அதுதான்

தன்னை அடையாளம் தெரியாவிட்டாலும் அவல் மூலமாவது அவன் அறிந்துவிட மாட்டானா என ஒரு சிந்தனையில் சென்றான் குசேலன்

கண்ணன் அவனை கண்டதும் ஆசனத்தில் இருந்து எதிர்கொண்டு வந்து அழைக்கின்றான், அத்தோடு விட்டானா? அவனை அமர வைத்து, என்னை காண இவ்வளவு தூரம் வந்தாயா என மகிழ்ந்து அந்த குசேலனின் கால்களுக்கு மஞ்சள்நீர் ஆராட்டு செய்து அவனுக்கு விருந்து படைக்கின்றான்

அந்த மாளிகையினையும் கண்ணனின் தெய்வீக வாழ்வையும் பார்க்கும் குசேலன் இவனிடம் எப்படி அவலை கொடுப்பது என நெளிகின்றான், அவமானம் அவனை சூழ்கின்றது

முக்காலமும் உணர்ந்த கண்ணன், என்னை பார்க்க வெறுங்கையோடு வந்திருக்கமாட்டாயே என சொல்லி அந்த அவலை பிடுங்கி வாயிலிட்டான், அவ்வளவுதான் குசேலனின் வறுமை நொடியில் தீர்ந்தது

இது நடந்த வரலாறு என கண்ணன் வாழ்வு சொல்கின்றது, வரலாற்றிலும் நிலைத்தாயிற்று

கண்ணன் ஒரு தத்துவ அவதாரம், குசேலன் வாழ்வில் கண்ணன் சொல்லவரும் தத்துவம் இதுதான்

எல்லோரும் குழந்தையாய் இருக்கும் பொழுது கடவுள்தன்மையிலேதான் இருக்கின்றோம், அப்பொழுது ஈகோ, கவுரவம், தன்மானம் என எதுவுமில்லை

வளர வளர அவை எல்லாம் வளர்கின்றன, அந்த மாயையினை உடைக்க வாழ்வின் ஞானம் பெற சங்கடங்களும் தொல்லைகளும் வருகின்றன‌

ஆனால் அந்த வறுமையிலும், கால்பிடி அரிசி இல்லா நிலையிலும் கவுரவமும் , வீண் தன்மானமும் ஒரு மனிதனை கடவுளிடம் வர தடுக்கின்றது

தற்பெருமை போல் பெரும் பகைவன் இல்லை, கவுரவம் போன்ற கொடிய துன்பமில்லை

என்று அவை எல்லாம் தாண்டி பகவானே சரணம் என ஒருமனிதன் தன் தெய்வத்தை தேடி ஓடுகின்றானோ அத்தெய்வம் அவனை எதிகொண்டு வரும்

அவனை ஆனந்த கண்ணீரோடு வரவேற்று கட்டி தழுவி கொள்ளும்

ஆம் குசேலனிடம் அவனின் கவுரவமும் தன்மானமும் அழியும் பொழுது எஞ்சியிருந்தது அவல்தான், அதைத்தான் கண்ணனுக்காய் கொண்டு சென்றான்

வாழ்வில் தற்பெருமையும் அகந்தையும் வீண் வறட்டு கவுரவமும் உடையும் நேரம் உன்னிடம் என்ன இருக்கின்றதோ அதை தெய்வத்துக்கு கொடு, முதல் காணிக்கையாக கொடு அத்தெய்வம் உன்னை எல்லா ஆசியோடும் காக்கும் எனும் தத்துவம் அது

இந்த காட்சி இயேவின் போதனையில் ஊதாரி மைந்தனாக உருமாறி வரும், கதைதான் வேறே தவிர காட்சி ஒன்றுதான்

அது அதே தத்துவம்தான், வீண் பிடிவாதமும் வறட்டு கவுரவமும் ஒருவனை அழிக்கும் அது மிக பெரும் வறுமையினை கொண்டுவரும்

அந்த வறுமை அவனை அழிக்க அல்ல, ஞானம் கொடுக்க‌

என்றொருவன் தற்பெருமையினை விட்டு , கவுரவத்தைவிட்டு பகவானிடம் சரணடைகின்றானோ அவன் வாழதொடங்குவான்

கண்ணனை கவனியுங்கள், அவன் கொஞ்சமும் தான் அரசன் என்ற அகந்தையில் இல்லை, ஏழையா நீ , என் வீட்டு படியேறுவதா எனும் அகங்காரம் இல்லை

அவன் அதே ஆயர்பாடி கண்ணனாக இருந்திருக்கின்றான்

ஆம், தெய்வம் எப்பொழுதும் அதே உயர்ந்த நிலையில்தான் இருக்கின்றது. அதற்கு ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் பூசாரி, பாவி, நல்லவன் கெட்டவன் என எதுவுமில்லை

தன் குணத்தோடு பிறந்து வளர வளர தெய்வீகத்தை இழந்த மனிதன் தன்னை நோக்கி வரும்பொழுது அவனை அணைக்க அது தயாராக இருகின்றது

இந்த குசேலன் கதையின் வரிகளை கவனியுங்கள்

ஆம் 27 குழந்தைகள் என்பது, 27 நட்சத்திரங்களை குறிப்பது. உலகின் எந்த மனிதனும் இந்த 27 நட்சத்திரத்தில் ஒருவனே

இந்த குசேலன் முதலிலே கண்ணனை அணுகியிருந்தால் 27 குழந்தைகளும் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கும் வறுமையில் சிக்கியிறா

ஆனால் குசேலனின் தயக்கமும் ஒருவித சுயகர்வமும் அவற்றை வறுமையில் தள்ளின, எந்த ஒரு மனிதனுக்கும் இருக்க கூடா தயக்கம் அந்த சுயகர்வம்

இதுதான் 27 குழந்தைகளின் தத்துவம், 27 குழந்தைகளின் பொதுவான‌ தந்தை குசேலன் என்பது, உலகின் எல்லா மனிதருக்கும் பொதுவான குணம் வீண் கர்வம் என்ற பொருளில் அழகாக சொல்லபடுகின்றது

குசேலன் கண்ணன் கதை, நட்புக்கு மட்டுமல்ல , ஆழ்ந்த ஞானமிக்க தத்துவங்களை உள்ளடக்கியது

கண்ணனை கொண்டாடும் தேசத்தில் கேரளாவில் குருவாயூர் கோவில் கண்ணனுக்கு பிரசித்தி

அங்கு இன்று அவல் சகிதம் இக்காட்சி கொண்டாடபடும், ஒரு மார்கழி முதல் புதனில் குசேலன் கண்ணனை காண சென்று வளம் பெற்றதாக ஐதீகம்

இதனால் இந்த புதன் குசேலனுக்கானது

தெய்வம் நம்மை எப்பொழுதும் எந்த நொடியும் அரவணைக்க தயாராய் இருக்கின்றது, மனிதனே அதை நாடாமல் மாயையில் சிக்கி பல நெருக்கடிகளில் சிக்குகின்றான், அவனின் குழந்தை இயல்பான தெய்வத்திடம் அவன் சரணடைந்தால் அவனுக்கு சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பதை சொல்லும் நாள் இது

கடவுளை விட்டு விலக விலக துன்பம் தொடரும், அவனை தேடி சென்று சரணடைந்தால் துன்பம் தீரும்

“அர்ஜூனா என்னை சரணடை..” என நேரடியாக சொன்னான் கண்ணன், “குசேலா என்னை தேடி வா..” என சொல்லாமல் சொன்னான் கண்ணன்

“வருத்தபட்டு பாரம் சுமப்போரே எல்லோரும் என்னிடம் ஓடிவந்து சரணடையுங்கள்..” என்றார் இயேசு

ஆம் தெய்வத்திடம் சரணடைவதே எல்லா சிக்கலில் இருந்துவிடுவிக்கும் என்ற ஞானத்தோடு இந்து சமூகம் இந்த குசேலன் கதையினை நினைவு கூர்ந்து கண்ணனிடம் சரணடைந்து கொண்டிருக்கின்றது

அவனும் சரண்டைவோர் எல்லோரையும் ஆசீர்வதித்துகொண்டிருக்கின்றான்

சர்வம் கிருஷ்ணார்பணம்..