டைட்டானிக்

போர்காலம் தவிர கடந்த நூற்றாண்டின் துயரமான நிகழ்வுகளில் ஒன்று டைட்டானிக் கப்பல் மூழ்கியது. மூழ்கவே மூழ்காது என மிக ஆணவமாக நின்ற கப்பலை அசால்ட்டாக மூழ்கடித்தது பனிப்பாறை

அது சம்பந்தமாக எத்தனையோ புத்தகம் , சினிமா வந்தாலும் ஜேம்ஸ் காமரூனின் டைட்டானிக் படம் மிக அழகாக வந்து எல்லோர் பாராட்டையும் பெற்றது

அந்த அளவு அவர் சிரத்தை எடுத்து படத்தை செதுக்கியிருந்தார், கடலுக்குள் சென்று மூழ்கிய கப்பலை பலமுறை பார்த்து , ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக செய்து அந்த கப்பலை கண்முன்னே நிறுத்தியிருந்தார்

செட் என சொல்லமுடியா அளவு 1911 காலத்து கப்பல்கள் அப்படி கண்ணுக்குள் வந்தன, அக்கால உடை முதல் எல்லாமும் மிக அழகாய் அமைக்கபட்டிருந்தன,

குறிப்பாக கப்பலில் நடந்த அந்த ஞாயிறு கிறிஸ்தவ ஆராதனை

படத்தின் ஒவ்வொரு தேர்வும் அப்படி இருந்தன. நாயகி கேத் வின்ஸ்லட் அன்று வசீகரமான அழகோடு இருந்தார்

பல காட்சிகள் ரசிக்க வைத்தன, பணம் கொடுத்தும் தப்ப முடியா நிலையில் பணக்காரர்கள் மூழ்கும் காட்சி பணத்தால் மரணத்தை தவிர்க்க முடியாது என காட்டிற்று

படத்தின் கம்பீரமான பாத்திரம் அந்த மாலுமி பாத்திரம். செத்தாலும் கப்பல் கேப்டன் அறையில் கேப்டனாக சாவேன் என அவர் நின்றபொழுது, அதுதான் பொறுப்புணர்ச்சி என்பது கண்முன் வந்தது, கண் கலங்க வைத்த பாத்திரம் அது

அந்த கப்பல் சம்பவத்தை மிக ரசனையாக கற்பனை காதல் கதையுடன் மிக மிக அழகான காவியமாக பெரும் இலக்கிய தரத்துடன் உருவாக்கி இருந்தார் அந்த கேமரூன், படம் என்றே சொல்ல முடியவில்லை கண் முன் நடந்த காட்சி போலவே இருந்தது.

படம் வந்து 22 வருடம் ஆகிவிட்டதாம், அக்காலங்கள் நினைவுக்கு வருகின்றன‌

டைட்டானிக் கதை தெரிந்திருந்ததால் படம் பார்க்க நண்பர்களோடு சென்றாயிற்று

அது என்னவோ தெரியவில்லை டைட்டானிக் கதையினை விட, அந்த படம் வரையும் காட்சி அன்றே இந்தியாவில் மிக பிரபலமாயிற்று

ஆனால் சென்சாரில் அனுமதிக்கவில்லை, இது தெரியாமல் நண்பர்கள் பலரும் வந்து அமர்ந்துவிட்டனர்

படம் ஓட தொடங்கியது , அருகில் இருந்து அந்த நண்பன் கேட்டுகொண்டே இருந்தான், “லேய் அந்த படம் எப்போ வரைவாம்ல”

அக்காட்சி தாண்டியவுடன் மறுபடியும் கேட்டான், “என்னல படம் வரையிரத காட்டவே இல்ல”

“அதெல்லாம் சென்சார் பண்ணிட்டாங்கல..” என்றவுடன் சீறிகொண்டு எழுந்தான்

“பொறுடா, கப்பல் இன்னும் உடையவில்லை , படமே அதுதான்”

“எழும்பு போவோம், இனி இந்த யழவு கப்பல் மூழ்கினால் என்ன? மூழ்காவிட்டால் என்ன?”