ஏகாதசி

அந்த விஷ்ணுபெருமானுக்கு வேலையே அட்டகாசம் செய்யும் அசுரர்களை அழிப்பது. அப்படி முரண் என்றொரு அசுரன் அட்டகாசம் செய்துகொண்டிருந்தான், அவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஈரான் ஈராக் போல நீண்ட யுத்தம் நடந்தது

அந்த யுத்ததில் ஓய்வெடுத்த பகவானை நள்ளிரவில் கொல்ல வந்த அசுரனை பகவானின் உடலில் இருந்து வந்த தேவதை அந்த அசுரனை ஒழித்துகட்டினாள். அந்த சக்திக்கு ஏகாதசி என பெயர் கொடுத்து சில வரங்களும் கொடுத்தார்

அதாவது அந்நாளில் விரதம் இருந்து வணங்குபவர்கள் சொர்க்கம் அடைவார்கள் என்பதாகும், ஏகாதசி உருவானது அப்படித்தான்

அப்படியே பிரம்மனுக்கு தொல்லை கொடுத்த இரு அசுரர்களை விஷ்ணு ஒழிக்கும் பொழுது அவர்கள் இயேசுவுடன் சிலுவையில் அறையபட்ட இரு திருடர்கள் போல எங்களுக்கும் சொர்க்கம் வேண்டும் என வேண்டிகொண்டார்களாம்

அவர்கள் திருந்திவிட்டதால் மார்கழி மாத ஏகாதசியன்று பகவான் வைகுண்ட வாசலை திறந்தாராம்

இதுதான் வைகுண்ட ஏகாதசி சிறப்பும் அந்த சொர்க்கவாசல் தத்துவமும்

இந்த சாயல் இன்னும் சில மதங்களில் உண்டு, அதாவது பாவமன்னிப்பு விரதம் என்றொரு விரதம் யூதருக்கும் உண்டு, அவர்கள் உண்ணாமல் உறங்காமல் மன்னிப்பு கோரி பிரார்த்திப்பர் கடவுளும் மன்னிப்பார்

இந்துக்களின் வைகுண்ட ஏகாதசி தத்துவம் அதுதான், விரதம் இருந்து பிரார்த்தித்தால் பாவம் மன்னிக்கபட்டு சொர்க்கம் கிடைக்கும்

அதுவன்றி வேறு தத்துவமோ பொருளோ இல்லை,

ஒரு வகையான பாவநிவர்த்தி வழிபாட்டு நாள் இது

இந்நாளில் விரதம் இருந்து பிரார்த்தித்தால் சொர்க்கது வாசல் அவர்களுக்காக திறக்கபடும் எனபது நம்பிக்கை

ஆம் அசுரர்களே மனம் திருந்தினால் வைகுண்டத்தில் கதவு திறக்கபடும், அப்படி எந்த பாவியாயினும் அவன் கடவுளிடம் சரணடைந்தால் அவனுக்கு சொர்க்கம் அருளப்படும் என்பதே அதன் தத்துவம்

இந்துமதம் விஞ்ஞானமும் உடல்நலமும் கலந்த ஆன்மீக மதம் என்பதால் இந்த விரதம் நம்புகின்றவர்களுக்கு சொர்க்கவாசலை காட்டும் நம்பாதோருக்கு குறைந்த பட்சம் உடல்நலத்தையாவது காக்கும்

இன்றைய மருத்துவமும் 15 நாட்களுக்கு ஒருமுறை முழு விரதம் இருப்பது நோய்க்கு இடம் கொடுக்காது என்கின்றது, வாரம் ஒருமுறை இருந்தால் இன்னும் நல்லது என்கின்றது

இதை அன்றே உணர்ந்து பல விரதங்களையும் சில கடும் விரதங்களையும் உருவாக்கிற்று இந்துமதம்

விரதங்களில் உண்ணாமல் இருப்பது மட்டும் அல்ல, பேசாமல் இருப்பதும், தூங்காமல் இருப்பதும் ஒரு கட்டுபாட்டினை கொடுக்கும் என்கின்றது உடலுக்கான அறிவியல்

மவுன விரதம் என்றும் சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி என தூங்கா இரவுகளை இந்துமதம் அன்றே உருவாக்கியதும் அதற்குத்தான்

இன்றைய நாள் உண்ணாவிரதம், தூங்காவிரதம் அதிகம் பேசாமல் பகவானின் செய்திகளை கேட்கும் கவனிக்கும் நாளாக அமைந்துவிட்டது அப்படித்தான்

உடல்நலத்தையும் மனநலத்தையும் ஒருசேர கொடுக்கும் அந்த தர்மபடி இன்று வைகுண்ட ஏகாதசியினை மக்கள் கொண்டாடுகின்றார்கள்

அவர்களுக்கு எல்லா வளமும் நலமும் பகவான் அருளட்டும்