வீழ்ந்துவிட்டார் என்பது சரியல்ல
ரகுமானின் இசை 1990கள் போல் இல்லை அவர் வீழ்ந்துவிட்டார் என்பது சரியல்ல
ஒவ்வொரு கலைஞனின் படைப்பும் மனமும் சிந்தனையும் காலம் மாற மாற மேம்படும், அப்படி நடந்தால் மட்டுமே அவன் கலைஞன், இல்லையென்றால் கட்டிய கட்டமே கட்டும் கொத்தனார் ஆகிவிடுவான்
கலைஞனுக்கு வளர்ச்சி என்பது அவன் கலையில் ஏற்படும் சிந்தனை மாற்றமே
ரகுமான் கச்சேரியில் வாசிக்கும் சிறுவனாக வாழ்வினை தொடங்கினார், மேற்கத்திய இசையுடன் இங்கு அறிமுகமாகி அனைவரையும் ஆட்டி வைத்தார்
அந்த மும்பை திரையுலகம் அவரை அழைத்தபொழுது இந்திய இசைக்கு ஏற்ப அவரில் மாற்றம் வந்தது
உலகம் ஈரானிய படங்களுக்கும், ஹாலிவுட் படங்களுக்கும் அவரை அழைத்தபொழுது அவரின் இசை உலக தரத்துக்கு மாறியது
ஜப்பான் முதல் அமெரிக்கா வரை எல்லா நாட்டு இசையும் அவர் இசைப்பதால் அவரின் தரம் மாறிவிட்டது
ஆனால் நமக்குத்தான் அது பிடிபடவில்லை
உலக உணவெல்லாம் அறிந்தவனுக்கு உணவின் ருசி பிடிபடும், சமையல்காரன் சமைத்து வைத்தால் இது என்ன நாட்டு உணவு என அவனால் அறியமுடியும்
அதில் சமையல்காரனின் திறமையினை அவன் பாராட்டுவான், அதில் கலப்பு ருசிகள் செய்யும் பொழுது அதிசயிப்பான்
இதற்கு முதலில் எல்லா நாட்டு உணவிலும் பரீட்சயம் இருக்க வேண்டும்
மாறாக முக்காலமும் எருமை தயிரும் எலுமிச்சை ஊறுகாயும் தின்று கொண்டிருப்பவனுக்கு வெளிநாட்டு உணவின் ருசி பிடிபடாது
இது நாற்றம்,இதில் மசாலா இல்லை,இதில் தேங்காய் இல்லை, இதில் தாளிக்கவில்லை என வம்புக்கு வருவான்
ரகுமான் தமிழக சமையல்காரனாய் உதித்தார், அவரின் திறமை இன்று சர்வதேச இசை சமையல்காரனாய் ஜொலிக்க வைத்திருக்கின்றது
அவர் அளவு தமிழனின் இசை ஞானம் வளராது வளரவும் முடியாது
வளர்ந்தபின் மாபெரும் விருட்சத்தை உயர பார்த்து இது முன்பு போல் இல்லையே என சொல்வது அறிவுடமை ஆகாது
அந்த பறவை பெரும் உயரத்தில் பறப்பதால் உருவம் மறையலாம் அதனால் பறவை சிறுத்துவிட்டது என பொருள் அல்ல, அதை பார்க்கும் சக்தி நம் கண்ணுக்கு இல்லை எனபதே விஷயம்